Wednesday, 31 July 2024

வரவேற்கிறோம்!


 ம.இ.கா.விலிருந்து விலகியவர்கள்  மீண்டும்  ம.இ.கா.வில் சேரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார் ம.இ.கா.வின் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ சா. விக்னேஸ்வரன்.

இது ஒரு நல்ல முடிவாகவே நமக்குத் தோன்றுகிறது.  நாளுக்கு நாள்  பலவீனப்பட்டு வரும் ம.இ.கா. இந்தியர்களின் கொஞ்ச நஞ்ச ஆதரவு வேண்டுமென்றால்  கட்சியிலிருந்து  முக்கியமானவர்களை  எல்லாம்  விரட்டிக் கொண்டிருக்க முடியாது.

'அவர்களே விலகினார்கள்,  அவர்களே வரட்டும்' என்கிற பேச்செல்லாம் எதுவும் எடுபடாது.  என்னதான்  பிரச்சனையைத் திசைதிருப்பினாலும்  பழி என்னவோ தலைவர் மேல் தான் விழும்.  இது அரசியல். காலங்காலமாக  பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!

எப்படியோ மத்திய செயற்குழு  கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள  இணக்கம் தெரிவித்திருப்பதானது  கட்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்க  மிக அவசியம்  என்பதை உணர்ந்திருக்கிறது எம்று தெரிகிறது.

ம.இ.கா. ஒரு காலத்தில்  இந்திய சமூகத்தோடு மிகவும்  ஒன்றிப் போன ஒர் அரசியல் கட்சி.  தவறான தலைவர்களால்  அதன் நிலை மிகவும் கீழ் நோக்கிப் போய்விட்டது என்பது தான் அதன் குறை.  காலஞ்சென்று துன் சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு  அக்கட்சிக்கு நல்ல தலைமைத்துவம் அமையவில்லை. அமைக்க யாரும் விடவுமில்லை.

இனி ம.இ.கா.வுக்கு வருங்காலம் என்பதாக ஒன்றுமில்லை.   பத்துமலை முருகன் திருத்தலம் போன்ற  ஒரு நிலை தான் இவர்களுக்கும் ஏற்படும். 

இந்திய சமூகத்திற்கும்  இனி எந்த ஒரு புதிய கட்சியும் - ம.,இ.கா. வைப் போன்று,  அமையப்போவதில்லை.  தேவையுமில்லை.  இந்தியர்கள் இனி எந்த ஒரு கட்சியையும் நம்பப் போவதுமில்லை.  இப்போது இந்தியர்களுக்கு அரசியல் தெளிவு உண்டு.  யாருக்கு வாக்கு அளிக்க்லாம்  என்பது அந்தந்த இடத்தில் முடிவு செய்கிற இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.  அது போதும்!

ம.இ.கா.வின் நலன் கருதி இந்தப் புதிய இணைப்பை  நாம் வரவேற்கிறோம். வெற்றி பெற வாழ்த்துகள்!

Tuesday, 30 July 2024

மணமா நாற்றமா?

 

டுரியான் பழம் என்றாலே - ஏன் - அந்தப் பெயரைச் சொன்னாலே மயங்காதவர்  யார்?

அதன் மணம் என்று வரும் போது வெவ்வேறு கருத்துகள் எழலாம். மலேசியாவில் பிறந்தவர்களுக்கு, அந்தப் பழங்களுடன் வாழ்பவர்களுக்கு,  அது மணம். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு அது  நாற்றம்.  கழுதைக்குத்  தெரியுமா கற்பூர வாசனை என்பது தான் நமது கொள்கை!

ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல.  அப்படிப்பட்ட  வாசனைக் கொண்ட டுரியான் பழத்தையும்  மிஞ்சி விட்டனர் ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள்! அது தான் விசேஷம்!  டுரியான் வாசனையே தூக்கி அடிக்கும்!  அதனால் தான் அந்த டுரியான்களில் போதைப்பொருள்  கலந்திருப்பதை எப்படிக்  கண்டு பிடித்தார்கள் என்று அதிசயக்க வேண்டியுள்ளது!  மோப்ப நாய்களை வைத்துக் கண்டு பிடித்திருக்கலாம். நாய்களுக்குப்  போதைப்பொருளைத் தவிர டுரியான் வாசனையை அறியாது.  அதனுடைய மோப்பம் என்பது போதைப்பொருள் மட்டும் தான். அதுவும் சாத்தியம் உண்டு.

கடத்திக் கொண்டு போன  அந்த மலேசியர்கள் தப்பியிருந்தால் 58 இலட்சம்  டாலர் இலாபம். அகப்பட்டதால் தண்டனையோ  ஆயுள் தண்டனையும் 50 இலட்சம் டாலர் அபராதமும்.  அது அவர்களுக்குப் போதுமா என்றால் போதாது தான்.  ஆனால் சிறையில் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்  சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். 

டுரியான் பழம் என்றாலே பழங்களின் அரசன் என்பார்கள்.  அந்த அரசனுக்கு இப்படி ஒரு நிலைமையா  என்பது தான் சோகம். போதைப்பொருள்  கடத்தலை யாரும் தற்காத்துப் பேச முடியாது.  மனித குலத்திற்கே அது சாபம்.  ஆனால் ஒரு சிலருக்கு அது இலட்சக கணக்கில் பணம் புரளும் மிகப்பெரிய வியாபாரம்!  அகப்பட்டால் அத்தோடு முடிந்தது அவர்கள் செய்யும் மனித விரோத செயல்கள்!

ஒன்று மட்டும் நமக்குப் புரியாத புதிர். போதைப்பொருளும் டுரியான் வாசமும்  ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒட்டுதல் உண்டோ?

Monday, 29 July 2024

புதிய வழிபாட்டுத் தலங்களா?

சமீபத்தில் டிக்டாக்கில் வெளியான ஒரு செய்தி.

பேராக் மாநில சட்டமன்ற,  ஆட்சிக்குழு உறுப்பினருமான  மாண்புமிகு சிவநேசன்  அவர்கள் கொடுத்த ஒரு செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதாவது பேராக் மாநிலத்தில் போதுமான இந்து கோவில்கள் உள்ளன. அதனால் மீண்டும் மீண்டும் கோவில்களைக் கட்டுவதைத் தவிருங்கள்  என்று கூறியதாக ஒரு நண்பர் செய்தி வெளியிட்டிருந்தார்.
 
அது சரியா தவறா என்பதை என்னால்  சொல்ல  முடியாது. இந்து கோவில்களுக்கு மட்டும் என்றால் யோசிக்க வேண்டிய விஷயம்.  எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் என்றால்  எந்த பிரச்சனையும்  எழாது.

சிவநேசன் அவர்களின் ஆதங்கம் நமக்குப் புரிகிறது. கோவில்கள் சொந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்தால்  பிரச்சனைகள் இல்லை.  கட்டப்பட்ட நிலம் தனியாருக்குச் சொந்தம் என்றால்  அது ஒரு தீர்க்க முடியாத  பிரச்சனை.  புதிய கோவில்கள்  அனைத்தும் முறையாகக் கட்டப்படுவதாகவே நினைக்கிறேன்.  கோவில்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் களையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ!  தெரியவில்லை!

ஒரு காலத்தில் இந்து கோவில்கள்  அனைத்தும் ஒவ்வொரு தோட்டத்திலும் இருந்தன.  அவைகள் அனைத்தும் வீடுகளின் அருகிலேயே இருந்தன. அதுவே  பழக்கத்திற்கும் வந்துவிட்டது.  கோவில்கள் தூரமாக இல்லாமல் நடந்து போகும் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்கிற ஒரு கலாச்சாரம் உருவாகிவிட்டது. கோவில்கள் தூரமாக இருந்தால் ஏதோ ஒரு வாகனத்தைப் பயன்படுத்திப் போகலாம் என்கிற எண்ணம் இன்னும் நமக்கு வரவில்லை.

புத்த விகாரங்கள்,  கிறிஸ்துவ ஆலயங்கள்  ஒவ்வொன்றும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் நாம் கார், பஸ், மோட்டார் சைக்கள், டெக்சி போன்ற வாகனங்களைத்தான்  பயன்படுத்துகிறோம். அது புழக்கத்திற்கும் வந்துவிட்டது.  புதிதாக எதுவும் தோன்றவில்லை. இந்துக்கள்  இப்போது தான் பழகி வருகின்றனர்.

சிவநேசன் அவர்கள் 'வேண்டாம்' என்று கூறுவதற்கு  வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.  இருக்கின்ற  கோவில்களை இன்னும் பெரிதுபடுத்தி, விரிவுபடுத்தி, அழகுபடுத்தி   பெரிய கோவில்களாகக் கொண்டு வந்தால் நிறைய   இந்துக்கள்  கூடுகிற இடமாக  அமையும். சமயங்களில் பக்தர்கள் கூடும் திருத்தலங்களாகவும் அமையும்.

நல்லதையே நினையுங்கள். நன்மை அடைவீர்கள்.