பேராக் மாநில சட்டமன்ற, ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அவர்கள் கொடுத்த ஒரு செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதாவது பேராக் மாநிலத்தில் போதுமான இந்து கோவில்கள் உள்ளன. அதனால் மீண்டும் மீண்டும் கோவில்களைக் கட்டுவதைத் தவிருங்கள் என்று கூறியதாக ஒரு நண்பர் செய்தி வெளியிட்டிருந்தார்.
அது சரியா தவறா என்பதை என்னால் சொல்ல முடியாது. இந்து கோவில்களுக்கு மட்டும் என்றால் யோசிக்க வேண்டிய விஷயம். எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் என்றால் எந்த பிரச்சனையும் எழாது.
சிவநேசன் அவர்களின் ஆதங்கம் நமக்குப் புரிகிறது. கோவில்கள் சொந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் பிரச்சனைகள் இல்லை. கட்டப்பட்ட நிலம் தனியாருக்குச் சொந்தம் என்றால் அது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை. புதிய கோவில்கள் அனைத்தும் முறையாகக் கட்டப்படுவதாகவே நினைக்கிறேன். கோவில்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் களையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ! தெரியவில்லை!
ஒரு காலத்தில் இந்து கோவில்கள் அனைத்தும் ஒவ்வொரு தோட்டத்திலும் இருந்தன. அவைகள் அனைத்தும் வீடுகளின் அருகிலேயே இருந்தன. அதுவே பழக்கத்திற்கும் வந்துவிட்டது. கோவில்கள் தூரமாக இல்லாமல் நடந்து போகும் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்கிற ஒரு கலாச்சாரம் உருவாகிவிட்டது. கோவில்கள் தூரமாக இருந்தால் ஏதோ ஒரு வாகனத்தைப் பயன்படுத்திப் போகலாம் என்கிற எண்ணம் இன்னும் நமக்கு வரவில்லை.
புத்த விகாரங்கள், கிறிஸ்துவ ஆலயங்கள் ஒவ்வொன்றும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் நாம் கார், பஸ், மோட்டார் சைக்கள், டெக்சி போன்ற வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறோம். அது புழக்கத்திற்கும் வந்துவிட்டது. புதிதாக எதுவும் தோன்றவில்லை. இந்துக்கள் இப்போது தான் பழகி வருகின்றனர்.
சிவநேசன் அவர்கள் 'வேண்டாம்' என்று கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இருக்கின்ற கோவில்களை இன்னும் பெரிதுபடுத்தி, விரிவுபடுத்தி, அழகுபடுத்தி பெரிய கோவில்களாகக் கொண்டு வந்தால் நிறைய இந்துக்கள் கூடுகிற இடமாக அமையும். சமயங்களில் பக்தர்கள் கூடும் திருத்தலங்களாகவும் அமையும்.
நல்லதையே நினையுங்கள். நன்மை அடைவீர்கள்.
No comments:
Post a Comment