Sunday 7 August 2016

நண்டு கதை - பிறந்த கதை!



நாம் அடிக்கடி பயன்படுத்தியும்,  பேசியும் வரும் இந்த  நண்டுக் கதை இப்போது உலகத்தமிழரிடையே  பரவலாகப் பேசப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை! நமது மலேசிய எல்லைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்த இந்த நண்டுக் கதை இப்போது கபாலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்டது   என்பதும்  உண்மை!

இந்த நண்டுக்ககதையின் பின்னணி என்ன, இதன் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்று கொஞ்சம் அலசலாம். இது நூறு விழுக்காடு சரி என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் ஒரளவு சரியானது என்பதே எனது ஊகம்!

இதன் பின்னணி ஓர் இருபது-இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும். அப்போது காப்புறுதித் துறையில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்  போல் நாயுடு (Dr.Paul Naidu) அவர்கள். காப்புறுதித் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான். பெரும் வெற்றியாளர். அத்துறையின் (NAMLIFA) வின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இவர் தெலுங்கு சங்கத் தலைவராகவும் பிற்காலத்தில் பதவி வகித்திருக்கிறார்.

காப்புறுதித் துறையில் மிகப்பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். இவர் மூலம் பல இளைஞர்கள்  பொருளாதார வெற்றி அடைந்திருக்கின்றனர். காப்புறுதித்துறையில் மறக்க முடியாத நபர் பால் நாயுடு.

ஓரளவு இந்தத் காப்புறுதித் துறையோடு சம்பந்தப்பட்டவன் நான். அதனால், எனக்குத் தெரிந்தவரை இந்த நண்டுக்கதையை காப்புறுதி கூட்டங்களில் அடிக்கடி சொல்லி வந்தவர் பால் நாயுடு. வேறு யாரும் இந்த நண்டுக்கதையைச் சொல்லி நான் கேட்டதில்லை! அவர் தான் இந்த நண்டுக்கதையின் மூலவர், முதல்வர் என்று சொல்லலாம்! அவரைத் தவிர வேறு யாரும் இந்த நண்டுக்கதையைப் பயன்படுத்தியதில்லை! அவர் மறைந்த பின்னர் தான் மற்றவர்கள் இந்தக் கதையைத் தொடர ஆரம்பித்தனர்!

அவருக்கு எங்கிருந்து இந்த நண்டுக்கதையைத் தேடிக் கண்டுபிடித்தார் அல்லது அவரே இந்தக் கதையை ஜோடித்தரா என்பது புரியாத புதிர்! இரண்டுமே - ஏறுவதும் இறங்குவதும் - தமிழ்  நண்டுகள் என்பதாகத்தான் அவர் அடையாளங் காட்டுகிறார்!

அவர் நோக்கம் நல்ல நோக்கமாகவே இருந்திருக்கக் கூடும். அவரை யாரும் குறை சொன்னது இல்லை. நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர்.  ஆனாலும் இப்போதைய நிலையில் தமிழக,  தெலுங்கு தேசத் தலைவர்களின் தமிழர் எதிர்ப்புப் போக்கைப் பார்க்கின்ற போது நாமும் இவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது!

இதன் மூலம் தமிழர்களிடையே ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறாரா என்னும் எண்ணம்வருவது இயற்கையே! தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை இல்லை என்று சொல்லியே ஓர் ஒற்றுமை இல்லாத சூழல் உருவாகிவிட்டது! அதே போல இந்த நண்டுக்கதையையும் சொல்லி தமிழர்கள் ஒருவருக்கொருவர்  முன்னேறாதவாறு ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது!

இந்தத் தவறானப் போக்கிலிருந்து நாம் விடுபட வேண்டும். நம்மிடையே ஒற்றுமை உண்டு என்பதை வலியுறுத்த வேண்டும். நண்டுக் கதை நமக்குறியது அல்ல என்பதைத் தெளிவாக்கப்பட வேண்டும்.

நாம்  என்ன செய்யலாம்? தமிழர்கள் ஒற்றுமையானவர்கள் என்பது ஒன்று. மற்றொன்று நண்டுக்கதை தமிழர்களுக்கு உரியது அல்ல என்பது.அது தான் உண்மையும் கூட! இதுபற்றி பேசாமலும், எழுதாலும் இருந்தாலே போதும். தமிழ் நண்டுகள் மேலே ஏறுமே தவிர எந்த நண்டுகளையும் இழுக்காது என்பதை உலகிற்கு நிருபிக்க வேண்டும்! வாழ்க தமிழர்!

1 comment: