Friday 5 August 2016

பூனை குறுக்கே போனால் என்ன?



காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது பூனை குறுக்கே போனால், சகுனம் சரியில்லை என்று சொல்லுபவர்கள் நம்மிடையே உண்டு! பூனையிலும் கூட கறுப்பு, வெள்ளை என்று வண்ணம் பார்ப்பவர்கள் வேறு!

இதெல்லாம் தமிழ்ச் சினிமா நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள்!

சீனர்களும்,, இந்தியர்களும் அதிகமாக வசிக்கும் வீடமைப்புப் பகுதிகளில் நாய்களைத்தான் நாம் அதிகம் பார்க்க முடியும். பொதுவாகவே  நாம்,  நாய் விரும்பிகள்! மலாய்க்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பூனைகள் அதிகம் பார்க்கலாம். முஸ்லிம்கள் நாய் வளர்ப்பதை விரும்புவதில்லை!

நாய்கள் குறுக்கே போனால் ஏதேனும் சகுனம் இருக்கிறதா என்பது தெரியவில்லை!  ஆனால் என்னைப் போல மலாய் இனத்தவர் வாழ்கின்ற பகுதிகளில் வசிப்பவர்கள் இந்தப் பூனை பிரச்சனையை எப்படி சமாளிப்பது? எந்த நேரத்திலும் பூனைகள் குறுக்கே மறுக்கே நடந்து கொண்டு தான் இருக்கும்! அவைகளுக்குக் கால நேரம் இல்லை!  எலிகளைக் காவு கொள்ள இரவு நேரம் தான் அவைகளுக்கு நல்ல சகுனம்! பகல் நேரத்தில் தூங்கிக் கொண்டும், கனவு கண்டு கொண்டும் இப்படி அப்படி நடந்து கொண்டும் இருக்கும்!

சரி! நான் ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறேன். காலையில் காரில் போகும் போது பூனையைக் கண்டால் "ஆகா! இன்று அற்புதமான நாள்! வெற்றி! அனைத்திலும்  வெற்றி!" என்று மகிழ்ச்சியடைவேன்!  வேறு மாதிரி சொல்ல எனக்குப் பழக்கமில்லை!

வெற்றி தான் வாழ்க்கை என்று எந்நேரமும் மனதில் எண்ண ஓட்டம் ஆக்கிரமித்திக் கொண்டிருக்கும் போது நாம் ஏன் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும்?  நேர்மறையாகவே சிந்திப்போமே!

நம்மிடையே பலவிதமான நம்பிக்கைகளும், சகுனங்களும் வேருன்றிவிட்டன. அது எப்படி, காரணங்கள் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரியாது! ஏதோ நமக்குத் தேவைப்பட்ட போது இப்படிச் சில நம்பிக்கைகளை நாம் வளர்த்துக் கொண்டோம்!

தொலைத் தொடர்புகள் குறைவாக இருந்த காலக்கட்டத்தில் தோட்டப்புறங்களில்  பல சகுனங்கள், பல நம்பிக்கைகள்! அதில் ஒன்று காக்காய் கத்தினால் உடனே "ஊரிலிருந்து தபால் வரும்" என்று நம்பிக்கை! அப்படி வந்தும் இருக்கிறது! இதுக்கும் அதுக்கும் என்னத் தொடர்பு என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது! ஆனால் அது நடந்தது! அந்தக் காலக்  கட்டத்தில் காக்காய்களைத் தோட்டப்புறங்களில் பார்ப்பதும் அரிது! வீட்டிற்குள் பட்டாம்பூச்சி புகுந்துவிட்டால் "இன்று யாரோ, விருந்தாளி வீட்டிற்கு வருகிறார்! என்று சொல்லுவார்கள்! அதுவும் நடந்திருக்கிறது! நாய் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டே இருந்தால் ஏதோ மரணம் நிகழப்போவது என்று ஊகிக்கலாம்! இவைகள் எல்லாம் அந்தக் காலத்தில் தோட்டுப்புற  சூழக்கு ஏற்ப ஏற்பட்ட சகுனங்கள் அல்லது நம்பிக்கைகள்! நம்மைச் சுற்றி  இருக்கும் உயிரினங்களுக்கும் நமது உள்ளுணவர்களுக்கும்
ஏதோ ஓர் தொடர்பு இருக்கிறது போலும்!

இப்போது இவைகள் எல்லா மறக்கப்பட்டு விட்டன!  காரணம் இப்போது எல்லா வீடுகளிலும் நாய்கள், எல்லா வீடுகளிலும் பூனைகள், காக்காய்கள் தங்க இடம் இல்லாமல் அவைகளும் நம்மைச் சுற்றி வந்துவிட்டன! குரங்குகள் சுற்றிக் கொண்டிருந்த இடங்களை நாம் வளைத்துப் போட்டு விட்டோம்! இப்போது குரங்களும் நம்மைச் சுற்றி ஊர்வலம் வந்து கொண்டிருக்கின்றன!

ஒரு முறை நான் தனி ஆளாகக் காரில் போய்க் கொண்டிருந்த போது ஒரு காக்கை ஒரு பாம்பை அதன் தலையில் கொத்தோ கொத்தென்று கொத்திக் கொண்டே  பாதையில் இழுத்துக்கொண்டிருந்தது. பாம்பின் மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன். மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. அன்று என் மனைவி மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு  அதிலிருந்து மீள நீண்ட நாள்காளாகின! இதற்கும் அதற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா என்பது எனக்குத் தெரியவில்லை! அப்போதெல்லாம் இப்போது போல எதனையும் நேர்மறையாக எண்ணும் பழக்கம் ஏற்படவில்லை!

இது போன்ற நிகழ்வுகள் ஏதோ ஒன்றினைச் சொல்ல வருகின்றனவா  என்னவோ தெரியவில்லை!

ஆனாலும் சகுனங்கள் பெரும்பாலும் மூட நம்பிக்கைகளே! பூனைக்கு ஒரு சகுனம், பல்லிக்கு ஒரு சகுனம், காக்கைக்கு ஒரு சகுனம் - இப்படி சகுனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது வாழ்க்கை முறையையே குட்டிச்சுவராக்கிக் கொண்டவர்கள் நாம்!

நாம் பெரும்பாலும் சகுனங்களை நம்புபவர்கள் அல்ல! ஆனால் நமது சினிமாப் படங்கள், சின்னத்திரைகள் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு இந்தச் சகுனங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன!

இனி பூனை குறுக்கே போனால் என்ன? போனால் பொன் கிடைக்கும் ஏன்று நினைத்துக் கொள்ளுங்கள்! அப்படி கிடைக்காவிட்டாலும் ஏதாவது நல்லது நடக்கும்!  என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!





No comments:

Post a Comment