Friday 19 August 2016

திருமண விருந்தா? கொஞ்சம் கவனியுங்கள்!


திருமண விருந்துகள், பிறந்த நாள் விழா விருந்துகள், பெருநாட்கால விருந்துகள் இப்படி ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி விருந்துகள் நம்மிடையே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இங்கு நான் விருந்துகளைக் குறைச் சொல்லவில்லை. ஆனால் இந்த விருந்துகளுக்குச் செல்லுகிறோமே நமது பங்கு என்ன என்பது  பற்றித்தான் நாம் குறைச் சொல்ல  வேண்டியுள்ளது.

திருமண விருந்துகளுக்குச் செல்லுபவர்கள் கணவன் மனைவி பிள்ளைகள் என அனைவரும் செல்லுவது என்பது கட்டாயம் என்பது உண்மை.உறவுகள் என்னும் போது வேறு வழியில்லை போய் தான் ஆக வேண்டும்.

ஆனால் இந்தத் தாய்மார்கள் செய்கின்ற அட்டூழியங்கள்  நம்மைக் கண்ணிர் வடிக்க வைக்கின்றன.இன்றைய இளம் தாய்மார்களுக்குத் தங்கள் குழைந்தைகள் எவ்வளவு தான் சாப்பிடுவார்கள் என்னும் அளவு  கூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள்!

சின்னத்திரை நாடகங்களையெல்லாம் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் இவர்களுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல்  இருப்பது நமக்கு வேதனையை அளிக்கிறது!

ஒரு மூன்று, நான்கு வயது குழந்தைக்கு ஒரு தாய் எந்த அளவு  சாப்பிடுவாரோ அதே அளவு சாப்பாட்டை அவருடைய குழந்தைக்கும் ஒரு தட்டில் வைத்து கொடுக்கும் கொடுமையை என்னவென்பது? அந்தத் தாய்க்கே தெரியும் அந்தக் குழந்தையால் அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட முடியாது என்பது.. ஆனாலும் அவர் அப்படித்தான் வைத்துக் கொடுக்கிறார்!  இத்தனைக்கும் அவர் குழந்தையிடம் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். அப்படியென்றால் அவர் படித்தவர் தானே! ஆங்கிலத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லையோ?

ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் சிரமப்படுபவர்கள் நமது நாட்டிலும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். அது மட்டும் அல்ல. நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் தீடீரென கணவன் இறந்து போனால் அந்தக் குடும்பங்கள் நடுவீதிக்கு வந்து விடுகிறார்கள் என்பதையும் இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு குடும்பம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வெறும் இன்ஸ்டண்ட் மீ (NOODLES)  சாப்பிட்டு உயிர் வாழ்வதாக செய்திகள் வெளியாயின.

உணவை மதியுங்கள்; மிதியாதீர்கள்.  நாளை மிதிப்படாதீர்கள்!  அது விருந்தாக இருந்தாலும் மருந்து போல பாவியுங்கள்! விருந்து தானே என்று அலட்சியப்படுத்தாதீர்கள். எங்கு சாப்பிட்டாலும் அது உணவு தான்.

No comments:

Post a Comment