Thursday, 1 December 2016
குழந்தைகள் விற்பனையா..?
சமீப காலங்களில், உலகளவில், மலேசியா பற்றிய செய்திகள் கேட்பதற்கு வருத்தம் அளிப்பதாகத்தான் இருக்கிறது.
அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மோசமான ஊழல் சம்பந்தமான செய்திகள் ஒரு பக்கம். இப்போது படிப்படியாக இறங்கி எல்லா மட்டத்திலும் வெவ்வேறு வகையில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சில நாள்களுக்கு முன்னர் ஆள் கடத்தல் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.அதற்கும் மலேசியா பெரிய அளவில் பேசப்பட்டது!
குழந்தைகள் கடத்தல் என்பது எப்போதுமே உள்ள ஒரு குற்றச்சாட்டு. ஆனால் எதற்குமே சரியான பதில் இல்லை!
இப்போது குழந்தைகள் கடத்தல் இல்லை. குழந்தைகள் விற்பனை என்பதாக ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அல்ஜஸீரா தொலைக்காட்சி நிலையம், சமீபத்திய தனது செய்தித் தொகுப்பொன்றில் மலேசியாவை குழந்தைகள் விற்பனை மையமாக சித்தத்திரிக்கிறது அல்ஜஸீரா. மலேசியாவுக்கு இது மிகவும் சங்கடத்துக்குறிய செய்தி என்பதில் ஐயமில்லை.
அல்ஜஸீரா கொடுக்கும் மேலும் அதிர்ச்சிக்குறிய செய்தி: இந்த குழந்தைகள் விற்பனையில் டாக்டர்கள், அராசங்க அதிகாரிகள், தேசிய பதிவு இலாகா அதிகாரிகள், காவல் துறையினர் போன்றவர்கள் பலர் சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் செய்தி தான்! .
சராசரி மலேசியர்களோடு ஒப்பிடும் போது மேற் குறிப்பிட்டவர்கள் அனைவருமே நல்ல நிலையில் உள்ளவர்கள். அதாவது வருமானம் என்று வரும்போது கொஞ்சம் அதிக சம்பாத்தியம் உள்ளவர்கள்! ஆனாலும் இவர்களெல்லாம் இது போன்ற ஊழல்களில் ஈடுபடும் போது - ஊழல் என்பதைவிட இதுவும் பயங்கரவாதம் தான் - பொது மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை! இப்படி படித்தவன் எல்லாம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டால் நாடு எங்கு நோக்கிச் செல்கிறது என்று தான் நாமும் கேட்க வேண்டி இருக்கிறது!
இந்த செய்திகள் வந்த அடுத்த நாளே காவல்துறை தலைவர், காலிட் அபு பக்கர் இதனை மறுத்துள்ளார்! சட்டதிட்டங்கள் எல்லாம் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் குழந்தைகள் விற்பனை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று அவர் கூறியிருக்கிறார். பொதுவாகவே காவல் துறைத் தலைவர் எந்த விஷயமானாலும் முதலில் மறுப்பதும் பின்னர் 'நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பதும் அவரின் இயல்பு!
ஆனாலும் காவல்துறையினரால் இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறியும் போது நமக்கும் ஆறுதலாக இருக்கிறது! தனியார் துறை தான் அவர்களின் இலக்கு என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
பொதுவாகவே மலேசியர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது நாம் கேட்டிராத ஒன்று. வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் பெண்கள் ஒரு சில கிளினிக்குகளை மட்டுமே, தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தான் தவறான பல நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன. இவைகள் எல்லாம் காவல்துறைக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. வரம்புகள் மீறப்படுகின்றன.
யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை! காரணம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் 'பெரிய' மனிதர்களாக வெளியே உலா வருகின்றனர்! யார் என்ன செய்ய?
இவ்வளவு இடர்பாடுகளிலும் ஒரு சிலர் துணிந்து இது போன்ற செய்திகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர்!
அதற்காக நாம் அல்ஜஸீரா தொலைக்காட்சி நிருபரைப் பாராட்ட வேண்டும்.
காவல்துதுறை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்ப்போம். சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய புள்ளிகளாக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment