மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஆறு மாநிலங்கள். கிளந்தான், திரங்காணு, பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்கள் நடைபெறும்.
ஆனால் எப்போதுமே ஒன்றை நாம் கவனிக்கிறோம். தேர்தல் வருகின்ற காலத்தில் எதிர்தரப்பினர் ஒன்றை மட்டும் உறுதியாக பிடித்துக் கொள்கின்றனர். தேர்தல் காலத்திற்கென்றே வருகின்ற சளிகாய்ச்சல்! இந்த சளிகாய்ச்சல் வரும் போதெல்லாம் அவர்களுக்கு உதறல் எடுத்துவிடும். "இஸ்லாம்! மலாய் மொழி!" இந்த இரண்டும் தான் இவர்களுக்குச் சளிகாய்ச்சலை ஏற்படுத்தும் வியாதியாக மாறிவிடும்.
எனக்குத் தெரிந்துவரை இந்த இரண்டுக்கும் அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டது? அவர்கள் சொல்லுகின்ற ஆபத்து என்பது அபத்தம் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் பேசுகின்றவை முட்டாள்களுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அங்கும் அவர்களுக்குப் பிரச்சனைகள் உண்டு.
நம் நாட்டை பொறுத்தவரை இஸ்லாமிய சமுதாயம் படித்த சமுதாயம் என்பது நமக்குத் தெரியும். படித்தவர்கள் அதிகம் உள்ள சமுதாயம் என்பதும் உண்மை. எல்லாத் தேர்தல் காலங்களிலும் "ஐயோ இஸ்லாமுக்கு ஆபத்து!" ஐயோ மலாய் மொழிக்கு ஆபத்து!" என்று எதிர்தரப்பு அரசியல்வாதிகள் கூச்சலிடுவது எதற்கு என்று மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
என்னைப் போன்ற சராசரி மனிதர்கள் கூட இஸ்லாமுக்கோ, மலாய் மொழிக்கோ எந்த ஆபத்தும் இதுவரை வந்ததில்லை என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் இவர்களுக்கோ இந்த 'ஐயோ ஆபத்து' எந்த நேரத்திலும் வரலாம்! இவர்களோ ஐயோ ஆபத்து என்று கூக்குரலிடுவார்கள்! ஆர்ப்பாட்டங்களை ஏவி விடுவார்கள்! கடைசியில் பார்த்தால் எதுவும் நடந்திருக்காது!
இப்படி ஒரு அபத்தத்தை இவர்கள் ஏன் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்? நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. இஸ்லாமிய மதத்தினர் வேறு மதங்களுக்கு மாறக்கூடிய வாய்ப்பு உண்டா? மற்ற நாடுகளில் உண்டு. நமது நாட்டில் நிச்சயமாக இல்லை. கதவை இறுக்கமாக மூடி வைத்திருக்கிறார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் எந்த ஓட்டையும் இல்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது பற்றி பேசினாலே காவல்துறை அடுத்த நாளே வீட்டு வாசலில் நிற்கும். இப்படிப்பட்ட ஒரு சூழலில் எப்படி மதமாற்றம் செய்ய முடியும்? இதை எதிர்தரப்பு அரசியல்வாதிகள் தெரியாமலா இருக்கிறார்கள்? எல்லாப் பக்கங்களிலும் இரும்பு கதவுகளைப் போட்டு பூட்டிவிட்டு 'குத்துதே! குடையுதே!' என்றால் யாரை ஏமாற்றும் வேலை?
அரசியல்வாதிகள் தங்களது இலாபத்திற்காக இது போன்ற பிரச்சனைகளை எழுப்புவதை அரசாங்கம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்! தேவையான பிரச்சனைகளை எழுப்பாமல் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பி நாட்டில் அமையின்மையை உண்டாக்குபவர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டும். வாழ்க மலேசியா!
No comments:
Post a Comment