புதிதாக என்ன தொழில் செய்யலாம்?
என்னக் கேட்டால் உங்களுக்கு என்ன தொழில் தெரியுமோ அந்தத் தொழிலைச் செய்யுங்கள் என்று தான் பதில் கூறுவேன். புதிய தொழில் என்றால்? புதிதாக என்ன தொழிலைக் கற்று வைத்திருக்கிறீர்களோ அது தான் உங்களுக்குப் புதுத் தொழில். அதைச் செய்யுங்கள்.
சிறிய பட்ஜெட்.. தொழில் செய்ய வேண்டுமென்கிற பெரும் கனவு. முன்பின் அனுபவம் இல்லை. அப்போது உங்களது நிலை என்ன? உங்களுக்கு என்ன தொழில் செய்வது சரியாக வருமோ அதனை மட்டும் செய்யுங்கள். சிறிய அளவு செய்யுங்கள். கற்றுக் கொள்ளங்கள். கற்றுக் கொண்டே வளருங்கள். கற்றுக் கொண்டு வளருவது தான் சிறந்த வழி. வாய்ப்பு உள்ளவர்கள் அனுபவத்தைத் தேடிய பின்னர் தொழில் செய்ய வாருங்கள். அனுபவம் இல்லாதவர்கள் சிறுக சிறுக தொழில் செய்து கொண்டே வளருங்கள். அகலக் கால் வைக்காதீர்கள்.
யாரும் செய்யாத தொழில் என்று எதுவும் இல்லை. எல்லாத தொழிலுமே யாரோ ஒருவர் ஏற்கனவே செய்துவிட்டுத் தான் போயிருப்பார். நீங்கள் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் அதற்கான முதலீடு அதிகமாகவே வரும்.
இங்கு நாம் பேசுவது என்பது காலங்காலமாக யாரிடமோ வேலை செய்து பிழைப்பவர்களைத்தான். அவர்களைத்தான் தொழில் செய்ய முன் வாருங்கள் என்கிறோம்.
நம்மிடம் உள்ள பெரும் பயம் என்றால் தொழிலில் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது என்கிற பயம் தான். இருக்கத்தான் செய்யும். இருக்கத்தான் வேண்டும். குடும்பப் பொறுப்புள்ளவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலை செய்கின்றனர். அதனால் ஒருவர் தொழில் செய்வதில் எந்தவொரு பிரச்சனையும் எழாது. செலவுகளைப் பாதியாக குறைத்துக் கொள்ள வேண்டும். பெரிய அளவில் முதலீடுகளைப் போடாமல் சிறிய அளவிலேயே தொடங்க வேண்டும்.
புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்பதைவிட எந்தத் தொழில் செய்தால் நாம் முன்னுக்கு வர முடியும் என்பது தான் முக்கியம். விபரம் தெரிந்தவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்கலாம். ஆனால் முடிவு எடுப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தோல்வி அடைந்தவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்காதீர்கள்.
தொழில் ஒன்று தான் சமுதாயத்தில் உங்களை உயர்த்தும். தொழில் செய்கின்ற சமுதாயம் தான் உயர்ந்து நிற்கும். தொழில் செய்ய கொஞ்சம் துணிச்சல் வேண்டும். 'ரிஸ்க்' என்கிறார்களே அந்தத் துணிச்சல்.
தொழில் செய்வோம்! உயர்ந்து நிற்போம்!
No comments:
Post a Comment