முதலில் சிறு சிறு தொழில்களில் ஈடுபடுங்கள். பெரும் முதலீடுகள் இல்லாமல் சிறிய முதலீட்டில் உங்களது வர்த்தகத்தை ஆரம்பியுங்கள்.
முதல் முதலீடு உங்கள் பணமாகத்தான் இருக்க வேண்டும்.கடன் வாங்கித்தான் ஒரு சிறிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் நீங்கல் அவசரப்பட வேண்டியத் தேவை இல்லை. முதலில் உங்கள் சேமிப்புத்தான் உங்களைக் காப்பாற்றும். முதலில் சேமியுங்கள் அப்புறம் தான் தொழில். காரணம் சேமிப்பு இல்லாதவர்கள் வெறும் வாய்ப்பேச்சு வீரர்கள். அதில் சந்தேகமில்லை.
சேமிப்புக்கும் தொழில்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சேமிப்பு ஒரு தடவையோடு முடிந்து போகிற காரியம் இல்லை.அது எப்போதும் தொடர வேண்டும். அப்போது தான் தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போவது இயல்பாக வரும்.
எத்தனையோ ஆண்டுகள் "மித்ரா" அமைப்பைக் கரித்துத் துப்பிக் கொண்டிருந்தோம். அவர்கள் கடன் கொடுக்கவில்லையே என்று சும்மா தலையில் கையை வைத்துக்கொண்டா இருந்தோம்? நம்மால் என்ன முடியுமோ அந்த முயற்சிகளைக் கைவிட வில்லையே. கடன உடன வாங்கியாவது வேலைகள் நடந்து கொண்டுதானே இருந்தன. கையில் என்ன இருந்ததோ அதனை வைத்தே செயல்பட்டுக் கொண்டு தானே இருந்தோம்?
எது நடந்தாலும் சரி "எல்லாம் நனமைக்கே!" என்று துணிந்து தொழில் செய்ய இறங்கிவிட வேண்டும். எல்லாவற்றையும் விட நம்பிக்கையோடு இறங்க வேண்டும். என்னால் முடியும் என்பது தான் நம்பிக்கை. அது இல்லாமல் எந்தத் தொழிலும் வெற்றி பெற முடியாது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் வேலை செய்தாலே போதுமானது. உங்களுடைய உணவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் சேர்ந்து தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆரம்ப காலத்தில் ஒரு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அந்த சிக்கல்களைப் பார்த்து யாரும் ஓடிப்போவதில்லை. துணிந்து நின்று பிரச்சனைகளை எதிர்நோக்கத் தான் வேண்டும்.
தொழில் செய்வதில் பிரச்சனைகள் உண்டு. இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் என்பதை வாய்ப்புகளாகப் பயன்படுத்தி அவைகளைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொல்ள வேண்டும்.
பிரச்சனைகள் என்பது நமக்குப் புதிதல்ல. எல்லாகாலத்திலும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவைகளைத் தீர்க்காமலா விட்டுவிடுகிறோம்? நம்மால் முடிந்ததைச் செய்து பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கண்டு விடுகிறோம். எல்லாமே அப்படித்தான்.
தொழில் செய்வதில் பிரச்சனைகள் உண்டு. அவைகளைத் தீர்க்கக் கூடிய திறனும் சாமர்த்தியமும் நமக்கு உண்டு. எல்லாவற்றையும் சமாளித்துத் தான் நாம் முன்னேற வேண்டும்.
இனி வருங்காலங்களில் தொழில் செய்வதில் நாம் கவனம் செலுத்துவோம். நம்மால் முடியும் என்பது நல்ல விஷயம். காலத்தை இனி கடத்த வேண்டாம்.
இனி வர்த்தகம் செய்வோம். வளர்ச்சி அடைவோம். வாழ்ந்து காட்டுவோம்.
No comments:
Post a Comment