தமிழ்ப்பள்ளிகளின் மலாய் மொழி தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்தபடி இல்லை என சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.
அது ஏன் என்பது ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. மலாய் மொழி ஆசிரியர்களின் குறைபாடு அல்லது ஏதோ எங்கோ சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒரு காலகட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களை ஞாபகப்படுத்துகிறேன். தேசிய பள்ளிகளில் வேண்டாத மலாய் ஆசிரியர்களைத் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தள்ளி விடுவதாக நான் கேள்விப்பட்டதுண்டு. அதாவது பொறுப்பற்ற, சோம்பேறிகளை இந்தப்பக்கம் தள்ளிவிடுவதுண்டு! அவர்கள் பள்ளிகளுக்கு வருவதும் இல்லை, பாடங்களைப் படித்துக் கொடுப்பதும் இல்லை, கேள்விகள் கேட்க ஆள்களும் இல்லை! சுதந்திரமான மனிதர்கள்! ஆனால் காலங்கள் மாறிவிட்டன. இப்போது அந்த நிலைமை இல்லை என்றே நினைக்கிறேன்.
தமிழ்ப்பள்ளிகள் பல சாதனைகள் செய்கின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக உலக அளவில் பரிசுகள் பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தேசிய மொழி என்ன அந்த அளவுக்குக் கடினமானதா?
அதுவும் நமது குழந்தைகளுக்கு எந்த மொழியாக இருந்தாலும் பிச்சு உதறுவார்கள்! அது அவர்களது இரத்தத்தில் உள்ள விஷயம். எப்படியிருந்தாலும் கல்வி அமைச்சு சொல்லுவதை நாம் அலட்சியப்படுத்த முடியாது. கொஞ்சம் சிரத்தை எடுத்தால் நமது குழந்தைகள் சாதிப்பார்கள்.
இந்த விஷயத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இல்லாமல் ஆசிரியர்களாலும் ஒன்றும் செய்ய இயலாது. ஆசிரியர்களுடன் கலந்து பேசி மொழி வளர்ச்சிக்கு எது நல்லதோ அதனைச் செய்யும் பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அது நிதி உதவியாகக் கூட இருக்கலாம். எப்படிச் சுற்றி வந்தாலும் பணம் தான் பேசும். அதற்கு ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல.
தேசிய மொழியில் பின்னடைவு என்பது நமது பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று தான் சொல்ல வேண்டும். எந்த சவால்களாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நமது ஆசிரியர்கள் தயாராகவே இருப்பார்கள் என நம்பலாம். இதற்கு முன்னர் பின்னப்பட்ட அத்தனை சவால்களையும் முறியடித்துத் தான் இன்றை நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். சவால்கள் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. மாற்றங்கள் வரும் போது சவால்களும் வரத்தான் செய்யும்.
இந்தப் பின்னடைவையும் நம்மால் வெற்றிகொள்ள முடியும் எனபது உறுதி!
No comments:
Post a Comment