Monday, 31 March 2025
அடையாளக்கார்டுகள் எப்படி?! (23)
Sunday, 23 March 2025
என்ன தான் குறிக்கோள்? (22)
நான் படிக்கும் போதே, நான் பெரிய ஆளாக வரவேண்டும் என்று என் தந்தையார் கனவு கண்டார். அவர் படிக்காதவர். அப்படி என்ன பெரிய ஆள்? அது அவருக்கே தெரியாது! அவருடைய உலகம் எல்லாம் தோட்டம் மட்டும் தான். அவருக்குத் தெரிந்த ஆள் தோட்டங்களில் வேலை செய்யும் கிராணிமார்கள் தான் பெரிய ஆள். அதனால் தான் நான் என் தாயாருக்கு உதவி செய்யக் கூட அவர் அனுமதிப்பதில்லை. அப்படிப் போனால் தோட்டத்தில் பால்மரம் சீவுகின்ற ஆர்வம் வந்துவிடும் என்று நினைத்தவர் அவர்.
ஆனால் நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை. எனக்கு அலுவலக வேலை தான் இலக்கு. அதற்கு ஆங்கிலம் அவசியத் தேவை என்பதை நான் அறிந்திருந்தேன். அதனால் கல்வியில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது ஆங்கில மொழிக்குத்தான்.நான் தோட்டத்தில் வேலை செய்தாலும் அது அலுவலகம் மட்டுமே தவிர வேறு வேலைகளில் ஈடுபாடு இல்லை.
எனக்குக் கேரள மலையாளிகள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒரே பிரச்சனை. கொஞ்ச தலைக்கனம் அதிகம்! அரைகுறை ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு பெரிய அளவில் அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்றால் அந்தத் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும். அவர்களிடம் இருந்த ஒற்றுமையினால் அவர்கள் முன்னேறினார்கள் என்று கூறலாம்.
அவர்களுடன் நான் முதல் பதின்மூன்று அண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அது எளிதான காரியம் அல்ல! என் நண்பர் ஒருவர் சொன்னார்: "நீ அவர்களுக்குக் கிழே இருந்தால் உன்னைப் பிழிந்து எடுத்து விடுவார்கள்! அவர்கள் உனக்குக் கீழே இருந்தால் தாங்குத் தாங்கு என்று தாங்குவார்கள்!" உண்மை தான். அவர்களின் குணம் அப்படித்தான்!
எனக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது. மலாக்காவில் ஒரு வங்கியிலும் வேலை கிடைத்தது. என் தாயார் 'ரொம்ப தூரம்" என்று சொல்லி அனுமதிக்கவில்லை. அதனால் தோட்ட அலுவலகத்திலேயே ஒட்டிக்கொண்டேன்!
:
அறிவோம்:போனால் வராது என்பது நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். இதோ இந்த வினாடி இக்கட்டுரையைப் படிக்கிறீர்கள். ஓர் ஐந்து வினாடிகள் ஆகியிருக்கும். போன இந்த வினாடிகள் மீண்டும் கிடைத்துவிடுமா? போனது போனது தான்! அதனால் தான் வினாடி, நிமிடம் பார்த்து வேலைகளைச் செய்யுங்கள் என்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேறியவர்கள். நேரத்தைக் கவனிக்கவில்லை என்றால் குப்பைத்தொட்டி தான் நமக்கு அடைக்கலம்!
Thursday, 20 March 2025
இது தான் 'என்' தோட்டம்! (21)
Monday, 17 March 2025
சினிமா தியேட்டர்கள் என்ன ஆயின?(20)
Thursday, 13 March 2025
காணாமற் போன பள்ளிகள்! (19)
சீக்கியர்களின் கோயிலானா, குருத்துவாரா, சிரம்பான் (2024)
சிரம்பான் பட்டணத்தில் நுழையும் போதே பள்ளிக்கூடங்களாகவே இருக்கும்.
நான் படித்த செயின்போல் பள்ளி அதற்கு மேல் குருத்துவாராவில் பஞ்சாப் மொழி பள்ளிக்கூடம், ஜாவா லேன் தமிழ்ப்பள்ளிக்கூடம் இந்தப் பக்கம் கிறிஸ்துவ கன்னியர்களால் நடத்தப்பட்ட கான்வெண்ட் ஆங்கிலப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, கொஞசம் தள்ளிப்போனால் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, இன்னும் கொஞ்சம் தள்ளி ஆங்கிலோ சைனீஸ் ஆங்கிலப்பள்ளி (ACS) - இப்படி பள்ளிகளாகவே இருந்தன.
இன்றைய நிலை என்ன? நான் படித்த பள்ளியை இடித்துவிட்டு Wisma Punca Mas என்கிற மாபெரும் கட்டிடத்தைக்கட்டி இப்போது அது பாழடைந்து கிடக்கிறது! குருத்துவாராவில் பஞ்சாப் பள்ளிக்கூடம் போதுமான ஆதரவு இல்லாமல் அப்போதே மூடப்பட்டு விட்டது. கான்வென் பள்ளி இப்போது மரண குளமாக மாறிவிட்டது! விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இலங்கைத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர்கள் கல்யாண மண்டபமாக மாற்றி விட்டனர்! இங்கு மட்டும அல்ல மலேசியாவில் அவர்கள் நடத்திய அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் மூடிவிட்டனர்! என்ன வெறுப்போ?
சிரம்பான் பட்டணத்திற்குள் நுழையும் போதே KGV பள்ளிக்கூடமும் ரயில்வே ஸ்டேஷனும் தவிர்க்க முடியாதவை. அன்றைய ரயில்வே ஸ்டேஷனில் மணிக்கூண்டும் இருக்கும். சிரம்பான் பட்டணத்தில் நேரத்தைப் பார்க்க அது ஒன்று தான் அடையாளம். காலை நேரத்தில் பள்ளிக்கூடம் போவதற்கு முன் நேரம் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்போது கைக்கடிகாரம் எந்த மாணவனிடமும் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இப்போது மணிக்கூண்டு இருந்ததற்கான அடையாளமே இல்லை. காரணம் கைக்கடிகாரம் கட்டாத கைகளே இப்போது இல்லை!
அறிவோம்: "உன்னால் முடியாது என்று சொல்வதை வேறுயாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். உன்னால் முடியாது என்றால் வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாது என்றால் உன்னால் மட்டுமே முடியும்."
பேராசிரியை பர்வீன் சுல்தானா
Monday, 10 March 2025
Satu Makan Dua Mahu! (18)
Friday, 7 March 2025
முதன் முதல் பயன்படுத்திய பேனா! (17)
பள்ளியில் நாங்கள் பேனாக்களைப் பயன்படுத்த ஆரம்பித்த போது மையைப் பேனாக்களில் தொட்டுத்தொட்டு எழுத வேண்டும். இது தான் ஆரம்பம். அடுத்த கட்டம் தான் மை நிரப்பிய பேனாக்கள். (Fountain Pen) இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் எப்படியாவது சட்டையில் மை கொட்டிவிடும்.
அதன் பின்னர் பலவித பேனாக்கள். அப்போது பேனாக்களில் நமது பெயரைப் பொறிப்பது ஓர் அற்ப சந்தோஷம். அதாவது நான் பைலட் (Pilot) பேனா வைத்திருந்தேன். உடனே என்னுடைய பெயரை அதில் பொறிப்பது! அப்போதைய மாணவரிடேயே இருந்த வழக்கம். எவனும் திருடப்போவதில்லை. என்ன செய்ய, கூட்டத்தோடு கோவிந்தா! அவ்வளவு தான்! சீனர்களின் வியாபார யுக்தியே யுக்தி!
பெரும்பாலும் முதலாம் படிவம் வந்துவிட்டாலே சாதாரண புத்தகப் பைகளைப் (தோளில் தொங்கும்) பயன்படுத்த முடியாது. புத்தகங்கள் அதிகரிக்கும் போது இந்த வகையான ரோத்தான் பைகள்தான் தேவைப்படும். எல்லா மாணவர்களும் இந்தப்பைகளைப் பயன்படுத்தித் தான் புத்தகங்களைக் கொண்டு போக வேண்டும். நீங்கள் இடைநிலைப்பள்ளிகளில் பயில்கிறீர்கள் என்பதற்கு இது தான் அடையாளம்! நீண்ட சிலுவார் அணிவதும் இப்போது தான். மழை காலத்திற்கெல்லாம் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.
அறிவோம்: உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.
நெல்சன் மண்டேலா
Thursday, 6 March 2025
கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்! (16)
தமிழிலே இப்படி ஒரு அனுபவமொழி உண்டு. கண் கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான் என்று சொல்லுவார்கள்.
அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள். எனது நாட்டம் துப்பறியும் கதைகள், சினிமா இதழ்கள், தமிழ் நேசன், தமிழ் முரசு, தமிழ் மலர், புதிது புதிதாக வரும் மாத இதழ்கள், ஆனந்த விகடன், குமுதம்,கல்கண்டு என்று அனைத்தையும் படிப்பேன். தமிழ் முரசு நாளிதழில் வெளியான இராதா மணாளனின் "பாண்டியன் திருமேனி" தொடர், குமுதம் வார இதழிலில் வெளியான சாண்டியனின் "கடல் புறா:", இந்தியன் மூவிஸ் நியுஸ் மாத இதழில் வெளியான, தமிழ்வாணனின் "மணிமொழி என்னை மறந்துவிடு" -உள்ளூர் வார மாத இதழ்கள். இப்படி பரவலான வாசிப்பு ஏற்பட்டுவிட்டது.
இப்படி நான் படித்த பத்திரிக்கைகளில் நானே காசு போட்டு வாங்கிய பத்திரிக்கை என்றால் அது தமிழ்வாணனின் வார இதழான கல்கண்டு மட்டுமே! அதன் விலை அப்போது 15 காசு என்று நினைக்கிறேன். எனது பட்ஜெட்டில் அதற்குமேல் இடமில்லை! சினிமா இதழ்களை இதுவரை நான் காசு போட்டு வாங்கியதில்லை. அது போலத்தான் துப்பறியும் கதைகளும்!
தமிழ் நேசன் நாளிதழை பத்து வயதில் படிக்க ஆரம்பித்து சுமார் ஐம்பது வருடங்கள் மேல் படித்திருக்கிறேன். தமிழ் வாணனின் "கல்கண்டு" வார இதழை பதினாறு வயதில் படிக்க ஆரம்பித்து சுமார் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்கிறேன்.
இப்படியெல்லாம் நான் படித்தாலும் பள்ளி பாடங்களை நான் மறக்கவில்லை. அப்போது அஞ்சலில் படிக்கும் வசதிகள் இருந்தன. அப்போது சிங்கப்பூரில் இருந்த Stamford College மிகவும் பிரபலம். அங்கிருந்து நான் பல பாடங்களை எடுத்திருக்கிறேன். என்ன பயன்? ஓர் ஆசிரியரின் துணை இல்லாமல் படிப்பது அனைத்தும் வீண்! ஆங்கிலம் எனக்கு முக்கியத் தேவையாக இருந்ததால் அதன் தொடர்பில் நிறைய அஞ்சல் வழி மூலம் கற்றுக் கொண்டேன்.
எனக்கு வெளிநாடுகளில் பேனா நண்பர்கள் அதிகம். நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஒரே காரணம் தான். ஆங்கிலத்தை தவறவிடக் கூடாது என்பது தான்.
அறிவோம்: அறிஞர் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்த நேரம். அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அண்ணா நூல் ஒன்றினைப் படித்துக் கொண்டிருந்தார். அண்ணா மருத்தவரை அழைத்து தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்த பின்னர், அறுவை சிகிச்சையை ஒத்திப்போடச் சொன்னாராம். அதன் பின்னர் தான் அறுவை சிகிச்சை நடந்ததாம்.
Tuesday, 4 March 2025
செனவாங் தோட்டம் (15)
மூனாங் கட்டையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியம். வானொலியில் நேயர் விருப்பம் என்பது அந்தக் காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்தது. எனது நண்பரின் தந்தையார் எம்.கே.தியாகராஜபாகவதரின் தீவிர இரசிகர். அவர் பாகதவர் பாடிய "பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்" பாடலை கேட்க ஆசை. அவர் ஓரு கடுதாசியை எடுத்துக்கொண்டு, வீடு வீடாகச் சென்று "இந்தப் பாடல் உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டுக் கொண்டு வந்தார்! பாவம் அப்பாவி மனிதர்! பின்னர் அவர் எத்தனை நேயர்கள் கேட்டார்கள் என்கிற பட்டியலை அனுப்பி வைத்ததாக அவரின் மகன் என்னிடம் சொன்னார்! அப்போது எங்களிடம் வானோலி பெட்டி இல்லை. அதனால் அவரின் ஆசை நிறைவேறியதா என்பது தெரியவில்லை.
ஏறக்குறைய எனதுபதினைந்தாவது வயதில் எனது குடும்பம் செனவாங் தோட்டத்திற்கு மாறியது. எல்லாம் எனது கல்வியின் பொருட்டு தான். இது பள்ளி போக வசதியான இடம். எனது வயது ஒத்த நண்பர்களும் இருந்தனர்.
இது ஒரு வேறொரு உலகம். கல்விக்கு யாரும் பயன்படவில்லை. சினிமா பத்திரிக்கைகள், துப்பறியும் கதைகள் - இவைகள் தான் முதலிடம். அத்தனை சினிமா இத்ழ்களையும், துப்பறியும் கதைகளையும் படித்திருக்கிறேன். அத்தோடு திராவிட இதழ்கள். கவனச் சிதறல்கள் அதிகம்.
என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யாரும் இல்லை. கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் இந்த தோட்டாமே என் கண்ணைத் திறந்தது என்று சொல்லலாம். கொஞ்சம் பொது அறிவு கிடைத்தது. என்னிடம் எனது கம்போங் எது என்று கேட்டால் அது செனவாங் தோட்டம் என்று தான் சொல்லுவேன். அது தான் இன்றளவும் வேரூன்றி விட்டது.
அறிவோம்: நமது உடம்பில் உடைக்கமுடியாத எலும்பு எதுவென்று தெரியுமா? எது எதுவோ ஞாபகத்திற்கு வரும். ஆனால் அந்த எலும்பு மட்டும் ஞாபகத்திற்கு வராது. அது தான் நமது தாடை எலும்பு. நமது உடலில் உடைக்க முடியாத மிக உறுதியான எலும்புகளில் அதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.