Sunday, 23 March 2025

என்ன தான் குறிக்கோள்? (22)

சிறு வயதிலிருந்தே எனக்கோர் குறிக்கோள் இருந்தது.  ஒரு வேளை அது என் தந்தையாரிடமிருந்து வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

நான் படிக்கும் போதே,   நான் பெரிய ஆளாக வரவேண்டும்  என்று என் தந்தையார்  கனவு கண்டார்.  அவர் படிக்காதவர்.  அப்படி என்ன பெரிய ஆள்? அது அவருக்கே தெரியாது!  அவருடைய உலகம் எல்லாம் தோட்டம் மட்டும் தான். அவருக்குத் தெரிந்த ஆள் தோட்டங்களில் வேலை செய்யும் கிராணிமார்கள் தான் பெரிய ஆள். அதனால் தான் நான் என் தாயாருக்கு உதவி செய்யக் கூட அவர் அனுமதிப்பதில்லை. அப்படிப் போனால்  தோட்டத்தில் பால்மரம் சீவுகின்ற ஆர்வம்   வந்துவிடும் என்று நினைத்தவர் அவர்.

ஆனால்  நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை. எனக்கு அலுவலக வேலை தான்  இலக்கு.  அதற்கு ஆங்கிலம் அவசியத் தேவை  என்பதை  நான் அறிந்திருந்தேன். அதனால் கல்வியில் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது  ஆங்கில மொழிக்குத்தான்.நான் தோட்டத்தில் வேலை செய்தாலும் அது அலுவலகம் மட்டுமே தவிர வேறு வேலைகளில் ஈடுபாடு இல்லை.

எனக்குக் கேரள மலையாளிகள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு.  ஒரே பிரச்சனை. கொஞ்ச தலைக்கனம் அதிகம்! அரைகுறை ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு பெரிய அளவில் அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்றால் அந்தத் துணிச்சலை நாம் பாராட்ட வேண்டும். அவர்களிடம் இருந்த ஒற்றுமையினால் அவர்கள் முன்னேறினார்கள் என்று கூறலாம்.

அவர்களுடன்  நான் முதல் பதின்மூன்று அண்டுகள்  வேலை செய்திருக்கிறேன். அது எளிதான காரியம் அல்ல! என் நண்பர் ஒருவர் சொன்னார்: "நீ அவர்களுக்குக் கிழே இருந்தால்  உன்னைப் பிழிந்து எடுத்து விடுவார்கள்! அவர்கள் உனக்குக் கீழே இருந்தால்  தாங்குத் தாங்கு என்று தாங்குவார்கள்!" உண்மை தான். அவர்களின் குணம் அப்படித்தான்!

எனக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது.  மலாக்காவில் ஒரு வங்கியிலும் வேலை கிடைத்தது.  என் தாயார் 'ரொம்ப தூரம்" என்று சொல்லி  அனுமதிக்கவில்லை. அதனால் தோட்ட அலுவலகத்திலேயே  ஒட்டிக்கொண்டேன்!


:

 அறிவோம்:போனால் வராது என்பது நேரத்திற்கு மட்டுமே பொருந்தும். இதோ இந்த வினாடி இக்கட்டுரையைப் படிக்கிறீர்கள். ஓர் ஐந்து வினாடிகள் ஆகியிருக்கும். போன இந்த வினாடிகள்  மீண்டும் கிடைத்துவிடுமா? போனது போனது தான்! அதனால் தான் வினாடி, நிமிடம் பார்த்து வேலைகளைச் செய்யுங்கள் என்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேறியவர்கள். நேரத்தைக் கவனிக்கவில்லை என்றால்  குப்பைத்தொட்டி தான் நமக்கு அடைக்கலம்!

No comments:

Post a Comment