நான் படித்த காலத்தில் இருந்த சினிமா தியேட்டர்கள் இன்று ஒன்றுகூட இல்லை.
அன்று மிகப்பிரபலமாக விளங்கிய அல்லது தமிழ்ப்படங்களின் காவலன் என்றால் அது இந்த சபையார் தியேட்டர் தான். முன் வரிசை என்றால் 40 காசு டிக்கெட். அதற்குத்தான் முதலிடம், அடிபிடி சண்டை எல்லாம்!
தோட்டப்புறங்களில் பெண்கள்யாரும் படம் பார்க்கப் போனால் என் தாயார் கலந்துகொள்வார். நானும் சேர்ந்து கொள்வேன்! என் தந்தையார் படம் பார்த்ததாகச் சரித்திரம் இல்லை.
இந்த நேரத்தில் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.பக்கத்து வீட்டில் சின்னையா என்கிற பெரியவர் இருந்தார். இவர் வேலை முடிந்ததும் சிரம்பானுக்குச் சைக்கிளில் கிளம்பிவிடுவார். ஒன்று கள் குடிக்க இன்னொன்று படம் பார்க்க! இவர் பார்க்காத படங்களே இல்லை என்று சொல்லிவிடலாம். அத்தோடு வரப்போகும் படங்களுக்கான விளம்பரம் அதனையும் கையோடு எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். தான் பார்த்த படங்களின் பெயரையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவிடுவார்! அந்த பட விளம்பரங்களை ஒரு சாக்குப்பையில் போட்டு வைத்திருந்தார்! ஒரு நாள், அவர் பார்த்த படங்கள் அந்த விளம்பரங்கள் அனைத்தையும் என்னிடம் காட்டினார்! அன்று தொலைகாட்சி, வானொலி இல்லாத காலங்களில் நம் மக்கள் எப்படியெல்லாம் பொழுதைப் போக்கியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? இப்போதும் இருக்கலாம் யார் கண்டார்?
நான் எல்லாகாலங்களிலும் விரும்பிப் பார்க்கும் படங்கள் என்றால் அது ஜெமினி கணேசன் நடித்த படங்கள் தான். அந்தக் காலத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவர் நடித்த "மனம் போல மாங்கல்யம்" படத்தைப் பார்த்திலிருந்து நான் அவரது இரசிகன்! ஆனால் ஒன்று, பார்ப்பதோடு சரி! அதற்கு மேல் இல்லை!
அறிவோம்: நோன்பு என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான். இஸ்லாமியர்களின் நோன்பு என்பது காலை மணி ஏழு மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை. மாலை ஏழு மணியிலிருந்து காலை ஏழு மணி வரை சாப்பிட தடையேதுமில்லை.மலேசிய இஸ்லாமியரிடையே இந்த நோன்பு காலத்தில் தான் அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன என்று குப்பைகள் அள்ளும் நிறுவனமான "இண்டா வாட்டர்" கூறுகிறது. கிறிஸ்துவ மதத்திலும் 40 நாள்கள் நோன்பு அனுசரிக்கப்படுகிறது. முக்கியமாகச் சொல்லப்படுவது புலால் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது தான். காலை மாலை நோன்பு உண்டு. வெள்ளிக்கிழமைகளில் நிச்சயமாக புலால் உணவுகள் வேண்டாம். இந்து மதத்தில் தான் மிகக் கடுமையான நோன்பு முறை உண்டு. காலையிலிருந்து அடுத்த நாள் காலை வரை பட்டினி போட வேண்டும். இதைவிட இன்னும் கடுமையான விரதங்கள் எல்லாம் உண்டு. நமது நோன்பு பிரபலமடையவில்லை என்றால் அரசாங்கத் தலையீடு இல்லை!
No comments:
Post a Comment