Thursday, 6 October 2016
முதலையை செருப்பால் விரட்டிய பெண்மணி!
ஒரு பழைய தமிழ்ப்படப் பாடல் ஒன்று உண்டு. அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்த சொர்க்கவாசல் படத்தில் கே.ஆர்.ராமசாமி ஒரு பாடல் பாடுவார். அதில் ஒரு வரி: சீறி வந்த புலியதனை முறத்தினாலே அடித்து சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாலே!
இந்தப் பாடல் வரிகள் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்குத் தெரியாது. அது பற்றி நாம் யோசிப்பதும் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் அது சாத்தியமாகக் கூட இருந்திருக்கலாம்! ஒரு வேளை புலியைக் கூட பூனையைப் போல அந்தக் காலப் பெண்கள் நினைத்திருக்கலாம்!
முறத்தால் துரத்தியடித்த மறத்தியின் நினைவாக மாமல்லபுரத்தில் ஒரு புலியை முறத்தால் துரத்தியடிப்பது போன்று ஒரு சிற்பத்தைக் கூட தமிழக அரசு நிறுவியிருக்கின்றதாம்!
முன்பெல்லாம் இது ஒரு கற்பனை என்று நினைக்கப்பட்ட இந்த செய்தி இப்போது உண்மையாக இருக்கும் என்று தான் நினைக்கத் தோனறுகிறது!
காரணம் அப்படி ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆஸ்திரேலியாவில் ஒரு பூங்காவில் தனது நாய்க்குட்டியுடன் முதலைகள் குளத்தின் கரையருகே முதலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவர் அறியாமல் அவரது வீரத்தைக் காட்ட ஒரு சம்பவம் நடந்தது. அவரைப் பார்த்து முதலை ஒன்று அவரை நெருங்கிக் கொண்டிருந்தது! மற்றவர்களாக இருந்தால் அலறி அடித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்திருப்பார்கள்! அல்லது முதலை அவர்களைக் காலி செய்திருக்கும்! ஆனால் அந்தப் பெண்மணி ஓடவும் இல்லை! அலறவும் இல்லை! மிகச் சர்வ சாதாரணமாக தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி, கையில் அடித்து ஓசை எழுப்பி, அந்த முதலையை அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டி அடித்தார்! அந்த முதலையும் 'என்னமோ, ஏதோ' என்று பதுங்கி, பின்வாங்கி இடத்தைக் காலி செய்தது!
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாம்! அவர் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருந்தார் என்பதை அவர் ஊணர்திருந்தாரா என்பது தெரியவில்லை!
ஒன்று புரிகிறது! மனிதனைப் பார்த்து எல்லா மிருகங்களும் பயப்படத்தான் செய்கின்றன! நாமும் அவைகளைப் பார்த்து பயப்படுகின்றோம்; அவைகளும் நம்மைப் பார்த்து பயப்படுகின்றன!
அப்படியென்றால் பலியை முறத்தால் அடித்து விரட்டினாரே அது எப்படி உண்மையில்லாமல் போயிருக்கும்? இது நம் கண் முன்னால் நடந்தது. அது கண் முன் நடக்கவில்லை என்பதால் உண்மையில்லாம் போய்விடுமா!
இந்த சிங்கார மறத்திகளை வாழ்த்துவோம்!
இன்னொரு இந்தியர் கட்சியா..?
மலேசிய இந்தியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. இன்னொரு புதிய கட்சி இந்நாட்டு இந்தியர்களுக்குச் சேவை செய்ய களத்தில் இறங்க உள்ளது. ஆனால் ஒரு வித்தியாசம். இம்முறை வயதான இந்தியர்களை ஒதுக்கிவிட்டு இளம் தலைமுறையினருக்காக ஒரு கட்சி உதயமாக உள்ளது!
இப்படி ஒர் இளம் தலைமுறையினருக்காக ஒரு கட்சி அமையப்போவதாக ஆளுங்கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரஸ்ஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான டத்தோ ஜி.குமார் அம்மான் ஓர் அறிவிப்பைச் செய்திருப்பதாகப் பத்திரிக்கைச் செய்தி ஒன்று கூறுகிறது.
வாழ்த்துகிறோம்! வரவேற்கிறோம்!
மலேசிய இந்தியர்கள் மலேசிய நாட்டின் மூன்றாவது பெரிய இனம். மலாய்க்காரர், சீனர் அதற்கு அடுத்து இந்தியர். மலேசிய இந்தியர்களுக்குச் சேவை செய்ய ஆறு நாளிதழ்கள்! மலேசிய இந்தியர்களுக்குச் சேவை செய்ய ஏகப்பட்ட அரசியல் கட்சிகள்! ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா.) - இரண்டாகப் பிளவுப்பட்டுக் கிடக்கிறது. ஏற்கனவே ம.இ.கா. விலிருந்து பிரிந்து வெளியேறிய இன்னொரு கட்சி ஐ.பி.எப். இரண்டாகப் பிளவுப்பட்டுக் கிடக்கிறது. இன்னொன்று மக்கள் முற்போக்கு கட்சி. பல இன கட்சி என்று சொல்லப்பட்டாலும் அது இந்தியர்களையே அதிகம் சார்ந்து நிற்கிறது.
இங்குக் குறிப்படப்பட வேண்டிய ஒன்று. அதிகமான மலாய்க்கரர்களைக் கொண்ட இந்நாட்டில் மூன்று மலாய்ப் பத்திரிக்ககைகள் தான் வெளியாகின்றன. இரண்டாவது அதிகமான சீனர்கள், மூன்று சீனப்பத்திரிக்கைகள் தான் வெளியாகின்றன. மூன்றாவது இடத்தில் இருக்கும் நமக்கு ஆறு தமிழ்மொழி பத்திரிக்கைகள்!
தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலையாயக் குறிக்கோள் என்ன? பிளவுப்பட்டுக் கிடக்கும் அரசியல் கட்சிகளில் உள்ள இந்தியர்களை மேலும் மேலும் பிளவு படுத்துவது! இந்தியர்களை அடித்துக் கொள்ள வைப்பது. இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைப்பது. எல்லா இந்தியர்களையும் பிரித்து ஆளுக்கொரு கட்சிகளிள் சேர்த்துக் கொள்வது! ஆனால் இந்தக் கட்சிகள் எவ்வளவு தான் பிரிந்திருந்தாலும், அடித்துக் கொண்டாலும் ஒன்றே ஒன்றில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. இந்தியர்கள் அனைவரும் ஆடாமல் அசையாமல், அலுங்காமல் குலுங்காமல் அனைத்து இந்தியரும் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்! தேர்தல் வரும்போது அரசாங்கத்துக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும்! இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் மிக மிக ஒற்றுமையாக இருக்கின்றன.
காரணம் உண்டு. இந்தியர்களுக்காகப் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் இந்தக் கட்சிகள் அனைத்தும் பிரதமருக்குப் பிளவு படாத ஆதரவைக் கொடுக்கின்றன. அதனால் இவர்களுக்கு நேரம் காலம் சரியாக இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் அதிர்ஷ்டம் அடிக்கலாம்! ஏதாவது ஒரு துணையமைச்சர் பதவி கிடைக்கக் கூடிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் மேலவை (Senate) உறுபினர் ஆகலாம். அல்லது அரசாங்க அமைப்புக்களில் ஏதேனும் பதவிகள் கிடைக்கலாம். இல்லாவிட்டால் அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கோ அல்லது இந்திய வியாபாரிகளுக்கென்றோ பல கோடிகள் ஒதுக்கும் போது இவர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இப்படி எத்தனையோ பயன்கள் இருக்கும் போது இந்தக் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
இந்தக் கட்சிகள் மூலம் சராசரி இந்தியனுக்கு என்ன லாபம் என்று நாம் விவாதம் செய்வதில் எந்த அர்த்தமுமில்லை. இதுவரையில் எந்த ஒரு பயனும் இல்லாத போது புதிதாக என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? ஏதோ தலைமைத்துவ பதவியில் இருப்பவருக்காவது பதவி கிடைக்கிறதே என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்!
பராவியில்லை! இவர்களையும் வரவேற்போம்!
Saturday, 1 October 2016
அழகுக்கலையா..? அவசரம் வேண்டாம்!
இன்று நமது பெண்களிடையே, - குறிப்பாக இடை நிலைப்பபள்ளிகளிலிருந்து வெளியாகும் மாணவிகள் - அழகுக்கலைப் பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே!
ஆனால் அவர்கள் தங்களது கல்வித்தரத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டால் அது தான் நமக்கு உண்மையான மகிழ்ச்சி!
இன்று, அழகுக்கலை அல்லது ஒப்பனைக்கலை அல்லது பியூட்டிஷியன் என்று சொல்லப்படும் பயிற்சிகளுக்கு ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரத்துப்படுகின்றன. இதில் சொந்தப் பணம் போட்டு பயிற்சி பெறுபவரும் உண்டு; அரசாங்கக் கடன் பெற்று பயிற்சி பெறுபவரும் உண்டு.
இங்கு நாம் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று: பள்ளிகளிலிருந்து வெளியாகும் மாணவிகளில் ஏன் இந்தப் பயிற்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். தீடீரென ஏன் அழகுக்கலை மீது மோகம்?
முக்கியமான ஒன்று: இவர்கள் பெரும்பாலும் கல்வியில் பின் தங்கிய மாணவிகள் அல்லது கல்வியில் நாட்டம் இல்லாத மாணவிகள் என்று சொல்லலாம். கல்வியில் நாட்டமில்லாததால் தங்களது பெற்றோர்களிடம் அவர்களது கவனத்தைத் திசை திருப்ப அழகுக்கலைப் பயிற்சி என்று சொல்லி கல்வியைப் பின் தள்ளிவிடுகின்றனர். இதற்கு ஓரளவு இந்தப் பயிற்சிகள் கொடுக்கும் பள்ளிகளும் ஒரு காரணம். அவர்கள் பலவிதமான யுக்திகளப் பயன்படுத்தி இந்த மாணவிகளைக் கவர்ந்து இழுக்கின்றனர்! அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தேவை பணம் மட்டும் தான்! சமுதாய நோக்கம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை!
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு அரசாங்கம் ஏகப்பட்ட பயிற்சிகளைக் கொடுக்கின்றது.. எந்தவித பணமும் செலவு இல்லாமல் பல பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அரசாங்கம் கொடுக்கின்ற பயிற்சிகள் மூலம் மாணவர்கள் தங்களது கல்வித்தகுதிகளை உயர்த்திக் கொள்ளலாம். அரசாங்க மூலம் கிடைக்கின்ற பயிற்சிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கத்திலும் ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகள் உண்டு. சான்றிதழ், டிப்ளோமா என்று அனைத்துக்கும் உரிய அங்கீகாரம் உண்டு.
இந்த அழகுக்கலைப் பயிற்சிகள் மூலம் என்ன சாதிக்கப்போகிறோம்? கடைசியில் பார்த்தால் ஒன்றும் இருக்காது! வேலை தேடி யாரிடம் போவீர்கள்? எத்தனை இந்தியர்கள் அழகு நிலையம் வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்? வைத்து நடத்துபவர்களே பிழைப்புக்கு வழியில்லாமல் தடுமாறுகிறார்கள்!
அப்படியே உங்களுக்கு அதிதீவிரமான ஆர்வம் இந்தத் துறையில் இருந்தால் - இருந்தால் மட்டுமே - சீனர்கள் நடத்துகின்ற பயிற்சிப்பள்ளிகளில் கலந்து உங்களது பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அவர்களிடம் பயிற்சி பெற்றால் மட்டுமே நீங்கள் சீனர்களின் அழகு நிலையங்களில் பணி புரியலாம். சீனர்களுக்கான சந்தை என்பது பெரிது. பயிற்சி இருந்தால் - திறமை இருந்தால் - மட்டுமே அவர்களிடம் வேலை செய்ய முடியும். சும்மா, அரைகுறை வேலையெல்லாம் அவர்களிடம் எடுபடாது!
சமீபத்தில் அழகுக்கலையில் பயிற்சி பெற்ற - சீனரிடம் வேலை செய்த - ஒரு பெண் சொன்னார்: நொந்து நூலாகவிட்டேன் என்று! பிறகு சொந்தமாகக் கடை வைத்தார். அதனையும் இழுத்து மூடிவிட்டார்! இப்போது: கையில் ஒரு பையைத் தூக்கிக்கொண்டு தொழிற்சாலை ஒன்றில் "ஆப்பரேட்டர்" வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்! அப்பா-அம்மா செலவு செய்து படிக்கவைத்த "அழகுக்கலை" ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது!
பெண்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். அரசாங்கம் உங்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் கொடுக்கின்றது.அவர் சொன்னார், இவர் சொன்னார், கூட்டாளி சொன்னார், பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார் - என்றெல்லாம் சொல்லி, எதை எதையோ நினைத்து உங்களின் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள். இந்தப் பயிற்சி நிலையங்கள் ஐயாயிரம், பத்தாயிரம் என்று உங்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகின்றனர்! அவ்வளவும் உங்களின் பெற்றோர்கள் உழைத்துச் சம்பாதித்தப் பணம். அதனை வீணடிக்க உங்களுக்கு உரிமையில்லை.
முடிந்தவரை உங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள். கல்வி மட்டும் தான் உங்களின் எதிர்காலத்திற்கு - எந்தக்காலத்திற்கும் உத்தரவாதமாக இருக்கும்.
அழகுக்கலையோ, ஒப்பனைக்கலையோ அது ஒரு பகுதி நேரமாகத்தான் உங்களுக்கு உதவியாக இருக்கும்.. காரணம் அதற்கானச் சந்தையைப் பிடிப்பதற்கு நீண்ட நாளாகும். முதலில் உங்களுக்கு நல்ல பயிற்சி தேவை. அதற்கு உங்களுக்கு அனுபவம் தேவை. ஒரளவு சந்தையைப் பிடித்த பின்னர் தான் நீங்கள் சொந்தமாக ஒரு நிலையத்தை ஆரம்பிப்பதைப் பற்றி சிந்திக்க முடியும்.
சொந்தத் தொழில் செய்வதை நான் ஊக்குவிக்கிறேன். ஆனால் இங்கு நீங்கள் அழகுக்கலையைப் படிக்க நினைப்பதற்கான நோக்கம் சரியாக இல்லை. கல்வி கற்பதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக அழகுக்கலையைப் பற்றிக் கொள்ளுகிறீர்கள். கல்வி கற்பதலிருந்து இப்போது நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நீங்களும் ஒரு காலத்தில் ஒரு பையைத் தூக்கிக்கொண்டு ஏதோ ஒரு தொழிற்சாலயில் ஆபரேட்டர் வேலைக்குத் தான் போக வேண்டி வரும்!
நமக்கு ஒரு தொழிற்கல்வி தேவை தான். அதற்காகத்தான் அரசாங்கம் ஏகப்பட்ட தொழிற்கல்லூரிகளைக் கட்டி வைத்திருக்கிறது. நல்லதொரு பயிற்சியைப் பெறுங்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிவகைகளை கொஞ்சம் சிரத்தை எடுத்துது ஆராயுங்கள். ஒரு அடிப்படை கல்வியாவது உங்களுக்குத் தேவை.
அழகுக்கலையா? அவசரப்படாதீர்கள்! சிந்தித்துச் செயல்படுங்கள்! வாழ்க வளமுடன்!
Subscribe to:
Posts (Atom)