Thursday, 6 October 2016
முதலையை செருப்பால் விரட்டிய பெண்மணி!
ஒரு பழைய தமிழ்ப்படப் பாடல் ஒன்று உண்டு. அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்த சொர்க்கவாசல் படத்தில் கே.ஆர்.ராமசாமி ஒரு பாடல் பாடுவார். அதில் ஒரு வரி: சீறி வந்த புலியதனை முறத்தினாலே அடித்து சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாலே!
இந்தப் பாடல் வரிகள் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்குத் தெரியாது. அது பற்றி நாம் யோசிப்பதும் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் அது சாத்தியமாகக் கூட இருந்திருக்கலாம்! ஒரு வேளை புலியைக் கூட பூனையைப் போல அந்தக் காலப் பெண்கள் நினைத்திருக்கலாம்!
முறத்தால் துரத்தியடித்த மறத்தியின் நினைவாக மாமல்லபுரத்தில் ஒரு புலியை முறத்தால் துரத்தியடிப்பது போன்று ஒரு சிற்பத்தைக் கூட தமிழக அரசு நிறுவியிருக்கின்றதாம்!
முன்பெல்லாம் இது ஒரு கற்பனை என்று நினைக்கப்பட்ட இந்த செய்தி இப்போது உண்மையாக இருக்கும் என்று தான் நினைக்கத் தோனறுகிறது!
காரணம் அப்படி ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆஸ்திரேலியாவில் ஒரு பூங்காவில் தனது நாய்க்குட்டியுடன் முதலைகள் குளத்தின் கரையருகே முதலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவர் அறியாமல் அவரது வீரத்தைக் காட்ட ஒரு சம்பவம் நடந்தது. அவரைப் பார்த்து முதலை ஒன்று அவரை நெருங்கிக் கொண்டிருந்தது! மற்றவர்களாக இருந்தால் அலறி அடித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்திருப்பார்கள்! அல்லது முதலை அவர்களைக் காலி செய்திருக்கும்! ஆனால் அந்தப் பெண்மணி ஓடவும் இல்லை! அலறவும் இல்லை! மிகச் சர்வ சாதாரணமாக தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி, கையில் அடித்து ஓசை எழுப்பி, அந்த முதலையை அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டி அடித்தார்! அந்த முதலையும் 'என்னமோ, ஏதோ' என்று பதுங்கி, பின்வாங்கி இடத்தைக் காலி செய்தது!
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாம்! அவர் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருந்தார் என்பதை அவர் ஊணர்திருந்தாரா என்பது தெரியவில்லை!
ஒன்று புரிகிறது! மனிதனைப் பார்த்து எல்லா மிருகங்களும் பயப்படத்தான் செய்கின்றன! நாமும் அவைகளைப் பார்த்து பயப்படுகின்றோம்; அவைகளும் நம்மைப் பார்த்து பயப்படுகின்றன!
அப்படியென்றால் பலியை முறத்தால் அடித்து விரட்டினாரே அது எப்படி உண்மையில்லாமல் போயிருக்கும்? இது நம் கண் முன்னால் நடந்தது. அது கண் முன் நடக்கவில்லை என்பதால் உண்மையில்லாம் போய்விடுமா!
இந்த சிங்கார மறத்திகளை வாழ்த்துவோம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment