Saturday 1 October 2016

அழகுக்கலையா..? அவசரம் வேண்டாம்!


இன்று நமது பெண்களிடையே, -  குறிப்பாக இடை நிலைப்பபள்ளிகளிலிருந்து வெளியாகும் மாணவிகள் - அழகுக்கலைப் பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே!

ஆனால் அவர்கள் தங்களது  கல்வித்தரத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டால் அது தான் நமக்கு உண்மையான மகிழ்ச்சி!

இன்று,  அழகுக்கலை அல்லது ஒப்பனைக்கலை அல்லது பியூட்டிஷியன் என்று சொல்லப்படும்  பயிற்சிகளுக்கு  ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரத்துப்படுகின்றன. இதில் சொந்தப்  பணம் போட்டு பயிற்சி பெறுபவரும் உண்டு; அரசாங்கக் கடன் பெற்று பயிற்சி பெறுபவரும் உண்டு.

இங்கு நாம் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று:  பள்ளிகளிலிருந்து வெளியாகும் மாணவிகளில் ஏன் இந்தப் பயிற்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். தீடீரென ஏன் அழகுக்கலை மீது மோகம்?

முக்கியமான ஒன்று: இவர்கள் பெரும்பாலும் கல்வியில் பின் தங்கிய மாணவிகள் அல்லது கல்வியில் நாட்டம் இல்லாத மாணவிகள் என்று சொல்லலாம். கல்வியில் நாட்டமில்லாததால் தங்களது பெற்றோர்களிடம் அவர்களது கவனத்தைத் திசை திருப்ப அழகுக்கலைப் பயிற்சி என்று சொல்லி கல்வியைப் பின் தள்ளிவிடுகின்றனர். இதற்கு ஓரளவு இந்தப் பயிற்சிகள் கொடுக்கும் பள்ளிகளும் ஒரு காரணம். அவர்கள் பலவிதமான யுக்திகளப் பயன்படுத்தி இந்த மாணவிகளைக் கவர்ந்து இழுக்கின்றனர்! அவர்களைப்  பொறுத்தவரை அவர்களுக்குத் தேவை பணம் மட்டும் தான்! சமுதாய  நோக்கம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை!

கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு அரசாங்கம் ஏகப்பட்ட பயிற்சிகளைக் கொடுக்கின்றது.. எந்தவித பணமும் செலவு இல்லாமல் பல பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அரசாங்கம் கொடுக்கின்ற பயிற்சிகள் மூலம் மாணவர்கள் தங்களது கல்வித்தகுதிகளை  உயர்த்திக் கொள்ளலாம். அரசாங்க மூலம் கிடைக்கின்ற பயிற்சிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கத்திலும் ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகள் உண்டு. சான்றிதழ், டிப்ளோமா என்று அனைத்துக்கும் உரிய அங்கீகாரம் உண்டு.

இந்த அழகுக்கலைப் பயிற்சிகள் மூலம் என்ன சாதிக்கப்போகிறோம்? கடைசியில் பார்த்தால் ஒன்றும் இருக்காது! வேலை தேடி யாரிடம் போவீர்கள்? எத்தனை இந்தியர்கள் அழகு நிலையம் வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்? வைத்து நடத்துபவர்களே பிழைப்புக்கு வழியில்லாமல் தடுமாறுகிறார்கள்!

அப்படியே உங்களுக்கு அதிதீவிரமான ஆர்வம் இந்தத் துறையில் இருந்தால் - இருந்தால் மட்டுமே - சீனர்கள் நடத்துகின்ற பயிற்சிப்பள்ளிகளில் கலந்து உங்களது பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அவர்களிடம் பயிற்சி பெற்றால் மட்டுமே நீங்கள் சீனர்களின் அழகு நிலையங்களில் பணி புரியலாம். சீனர்களுக்கான சந்தை என்பது பெரிது. பயிற்சி இருந்தால் - திறமை இருந்தால் - மட்டுமே அவர்களிடம் வேலை செய்ய முடியும். சும்மா, அரைகுறை வேலையெல்லாம் அவர்களிடம் எடுபடாது!

சமீபத்தில் அழகுக்கலையில் பயிற்சி பெற்ற - சீனரிடம் வேலை செய்த - ஒரு பெண் சொன்னார்: நொந்து நூலாகவிட்டேன் என்று! பிறகு சொந்தமாகக் கடை வைத்தார். அதனையும் இழுத்து மூடிவிட்டார்! இப்போது: கையில் ஒரு பையைத் தூக்கிக்கொண்டு தொழிற்சாலை ஒன்றில் "ஆப்பரேட்டர்" வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்!  அப்பா-அம்மா செலவு செய்து படிக்கவைத்த "அழகுக்கலை" ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது!

பெண்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். அரசாங்கம் உங்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் கொடுக்கின்றது.அவர் சொன்னார், இவர் சொன்னார், கூட்டாளி சொன்னார், பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார் - என்றெல்லாம் சொல்லி, எதை எதையோ நினைத்து உங்களின் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள். இந்தப் பயிற்சி நிலையங்கள் ஐயாயிரம், பத்தாயிரம் என்று உங்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகின்றனர்! அவ்வளவும் உங்களின் பெற்றோர்கள் உழைத்துச் சம்பாதித்தப் பணம். அதனை வீணடிக்க உங்களுக்கு உரிமையில்லை.

முடிந்தவரை உங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளுங்கள். கல்வி மட்டும் தான் உங்களின் எதிர்காலத்திற்கு - எந்தக்காலத்திற்கும் உத்தரவாதமாக இருக்கும்.

அழகுக்கலையோ, ஒப்பனைக்கலையோ அது ஒரு பகுதி நேரமாகத்தான் உங்களுக்கு உதவியாக இருக்கும்.. காரணம் அதற்கானச் சந்தையைப் பிடிப்பதற்கு நீண்ட நாளாகும்.  முதலில் உங்களுக்கு நல்ல பயிற்சி தேவை. அதற்கு உங்களுக்கு அனுபவம் தேவை. ஒரளவு சந்தையைப் பிடித்த பின்னர் தான் நீங்கள் சொந்தமாக ஒரு நிலையத்தை ஆரம்பிப்பதைப் பற்றி சிந்திக்க முடியும்.

சொந்தத் தொழில் செய்வதை நான் ஊக்குவிக்கிறேன். ஆனால் இங்கு நீங்கள் அழகுக்கலையைப் படிக்க நினைப்பதற்கான நோக்கம் சரியாக இல்லை. கல்வி கற்பதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக அழகுக்கலையைப் பற்றிக் கொள்ளுகிறீர்கள். கல்வி கற்பதலிருந்து இப்போது நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நீங்களும் ஒரு காலத்தில் ஒரு பையைத் தூக்கிக்கொண்டு ஏதோ ஒரு தொழிற்சாலயில் ஆபரேட்டர் வேலைக்குத் தான் போக வேண்டி வரும்!

நமக்கு ஒரு தொழிற்கல்வி தேவை தான். அதற்காகத்தான் அரசாங்கம் ஏகப்பட்ட தொழிற்கல்லூரிகளைக் கட்டி வைத்திருக்கிறது. நல்லதொரு பயிற்சியைப் பெறுங்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிவகைகளை கொஞ்சம் சிரத்தை எடுத்துது ஆராயுங்கள். ஒரு அடிப்படை கல்வியாவது உங்களுக்குத் தேவை.

அழகுக்கலையா? அவசரப்படாதீர்கள்!  சிந்தித்துச் செயல்படுங்கள்! வாழ்க வளமுடன்!




No comments:

Post a Comment