Thursday 6 October 2016

இன்னொரு இந்தியர் கட்சியா..?


மலேசிய இந்தியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. இன்னொரு புதிய கட்சி இந்நாட்டு இந்தியர்களுக்குச் சேவை செய்ய களத்தில் இறங்க உள்ளது. ஆனால் ஒரு வித்தியாசம். இம்முறை வயதான இந்தியர்களை ஒதுக்கிவிட்டு இளம் தலைமுறையினருக்காக ஒரு கட்சி உதயமாக உள்ளது!

இப்படி ஒர் இளம் தலைமுறையினருக்காக ஒரு கட்சி அமையப்போவதாக ஆளுங்கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரஸ்ஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான டத்தோ ஜி.குமார் அம்மான் ஓர் அறிவிப்பைச் செய்திருப்பதாகப் பத்திரிக்கைச் செய்தி ஒன்று கூறுகிறது.

வாழ்த்துகிறோம்! வரவேற்கிறோம்!

மலேசிய இந்தியர்கள் மலேசிய நாட்டின் மூன்றாவது பெரிய இனம். மலாய்க்காரர், சீனர் அதற்கு அடுத்து இந்தியர். மலேசிய இந்தியர்களுக்குச் சேவை  செய்ய ஆறு நாளிதழ்கள்! மலேசிய இந்தியர்களுக்குச் சேவை செய்ய ஏகப்பட்ட அரசியல் கட்சிகள்! ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா.) - இரண்டாகப் பிளவுப்பட்டுக் கிடக்கிறது. ஏற்கனவே ம.இ.கா. விலிருந்து பிரிந்து வெளியேறிய இன்னொரு கட்சி ஐ.பி.எப். இரண்டாகப் பிளவுப்பட்டுக் கிடக்கிறது. இன்னொன்று மக்கள் முற்போக்கு கட்சி.  பல இன கட்சி என்று சொல்லப்பட்டாலும்  அது இந்தியர்களையே அதிகம் சார்ந்து நிற்கிறது.

இங்குக் குறிப்படப்பட வேண்டிய ஒன்று. அதிகமான மலாய்க்கரர்களைக் கொண்ட இந்நாட்டில் மூன்று மலாய்ப் பத்திரிக்ககைகள் தான் வெளியாகின்றன. இரண்டாவது அதிகமான சீனர்கள், மூன்று சீனப்பத்திரிக்கைகள் தான் வெளியாகின்றன.  மூன்றாவது இடத்தில் இருக்கும்  நமக்கு ஆறு தமிழ்மொழி பத்திரிக்கைகள்!

தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலையாயக் குறிக்கோள் என்ன? பிளவுப்பட்டுக் கிடக்கும் அரசியல் கட்சிகளில் உள்ள இந்தியர்களை மேலும் மேலும் பிளவு படுத்துவது! இந்தியர்களை அடித்துக் கொள்ள வைப்பது. இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைப்பது. எல்லா இந்தியர்களையும் பிரித்து  ஆளுக்கொரு கட்சிகளிள் சேர்த்துக் கொள்வது! ஆனால்  இந்தக் கட்சிகள் எவ்வளவு தான் பிரிந்திருந்தாலும், அடித்துக் கொண்டாலும்  ஒன்றே ஒன்றில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. இந்தியர்கள் அனைவரும் ஆடாமல் அசையாமல்,  அலுங்காமல் குலுங்காமல் அனைத்து இந்தியரும் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்! தேர்தல் வரும்போது அரசாங்கத்துக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும்!  இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் மிக மிக ஒற்றுமையாக இருக்கின்றன.

காரணம் உண்டு. இந்தியர்களுக்காகப் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் இந்தக் கட்சிகள் அனைத்தும் பிரதமருக்குப் பிளவு படாத ஆதரவைக் கொடுக்கின்றன. அதனால் இவர்களுக்கு நேரம் காலம் சரியாக இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் அதிர்ஷ்டம் அடிக்கலாம்! ஏதாவது ஒரு துணையமைச்சர் பதவி கிடைக்கக் கூடிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் மேலவை (Senate) உறுபினர் ஆகலாம். அல்லது அரசாங்க அமைப்புக்களில் ஏதேனும் பதவிகள் கிடைக்கலாம். இல்லாவிட்டால் அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கோ அல்லது இந்திய வியாபாரிகளுக்கென்றோ பல கோடிகள் ஒதுக்கும் போது இவர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இப்படி எத்தனையோ பயன்கள் இருக்கும் போது இந்தக் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!

இந்தக் கட்சிகள் மூலம் சராசரி இந்தியனுக்கு என்ன லாபம் என்று நாம் விவாதம் செய்வதில் எந்த அர்த்தமுமில்லை. இதுவரையில் எந்த ஒரு பயனும் இல்லாத போது புதிதாக என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? ஏதோ தலைமைத்துவ பதவியில் இருப்பவருக்காவது பதவி கிடைக்கிறதே என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்!

பராவியில்லை! இவர்களையும் வரவேற்போம்!


No comments:

Post a Comment