Saturday, 3 December 2016

பெட்ரோல் விலை குறைந்தது! ஆனால்......!


பெட்ரோல் விலை குறைந்தது என்பது மகிழ்ச்சிக்குறிய செய்தி தான். ஆனாலும் மலேசியர்கள் மகிழ்ச்சியடைய முடியவில்லை!

காரணம் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் பெட்ரோல் விலை பதினைந்து (15)காசுகள் கூட்டப்பட்டன. அது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இப்போது குறைக்கப்பட்டதோ ஐந்தே ஐந்து (5)காசுகள் தான்!

ஏமாற்றம் தான் என்றாலும் ஏதோ அந்த அளவாவது குறைக்கப்பட்டதே என்பதில் மகிழ்ச்சியே!

ஆனால் இங்கு யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. விலை ஏற்றத்தின் போது எல்லாப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டன. அவ்வளவு தான்!  இனி மேல் பொருள்களின் விலை இறங்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை!

வியாபாரிகள் விலைகளை ஏற்றிவிட்டார்கள் என்பது வழக்கமான பல்லவி தான். ஆனால் இதற்கு அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ என்று நாம் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பதினைந்து காசுகள் ஏற்றிவிட்டு ஐந்து காசுகள் குறைக்கும் போது விலைவாசிகளில் எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை. சாதாரணக் காலங்களிலேயே ஏறிய பொருள்களின் விலை குறைக்கப்படுவதில்லை.

முன்பு பதினைந்து காசுகள் ஏற்றத்தின் போது பொருள்களின் விலை மட்டும் ஏறவில்லை.  பல பொருள்கள் அப்போதிருந்தே காண முடியவில்லை!

மக்கள் பயன்படுத்தும் மிக அத்தியாவசியமான பொருள்களான சமையல் எண்ணைய், குழந்தைகளின் பால் பவுடர்கள் பெரும்பாலும் கடைகளில் காணப்படவில்லை!  ஒரு சிலர் பேராங்காடிகளில் ஒரு சிலப் பொருள்கள் கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்படி என்றால் சிறு வியாபாரிகளின் நிலை என்ன?

மக்கள் மனதிலே வேறு ஒர் எண்ணமும் வலூவூன்றுகிறது. ஏன்? இப்போதே அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்! ஐந்து காசுகள் குறைக்கபட்டதற்கு மகிழ்ச்சியடைவதைவிட  வெகு சீக்கிரத்தில் அதாவது ஜனவரியில் இருபது (20) காசுகள் கூட்டுவது உறுதி என்பதாக இப்போதே மக்கள் கவலைப்பட  ஆரம்பித்துவிட்டார்கள்!

ஏற்றமோ, இறக்கமோ எல்லாம் நன்மைக்காக என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

Friday, 2 December 2016

தலைமறைவானவர் நாட்டில் தான் இருக்கிறார்!


இந்த நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள், மிகவும் ஆபத்தான, படு பயங்கரமானக் குற்றவாளிகள் கூட, போலிஸ் கண்களில் இருந்து தப்பித்தது கிடையாது! எப்போதோ, எங்கயோ அவர்கள் பிடிபட்டு விடுவார்கள். அல்லது சுட்டுத் தள்ளப்படுவார்கள்!

ஆனால் இந்திராவின் முன்னாள் கணவர் முகமது ரித்வான் என்னும் பத்மநாதன் மட்டும் போலிஸாரின் கண்களுக்கு அகப்படும் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை! நமது ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூட மிகவும் சலித்துக் கொள்ளக்கூடிய வகையில் இந்தத் தேடு பணி தொடர்...தொடர்ந்து ........கொண்டே ..........இருக்கிறது!

இந்த பத்மநாதன் என்னும் ரிதுவான், நீதிமன்ற உத்தரவின் படி, இந்நேரம் தனது கடைசி குழந்தையை தனது முன்னாள் மனைவியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ஒப்படைக்கவில்லை. என்று  நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்ததோ அன்றிலிருந்து அவர் காணப்படவில்லை!

பத்மநாதன் வெளி நாடுகளுக்குப் போகும் நிலையில் இல்லை.  காரணம் எல்லாச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் விழிப்பு நிலையில் உள்ளனர் என்கிறார் போலிஸ் படைத்தலைவர்.

பத்மநாதனுக்கு அவரின் கைது உத்தரவு பற்றி பெரிய விளம்பரம் கொடுத்ததனாலேயே அவர் உஷாராகி விட்டார் என்கிறார் டான்ஸ்ரீ காலிட்! அதனாலேயே அவரைக் கைது செய்ய முடியாத நிலை என்கிறார் அவர்!

போலிஸாரைக் குற்றம் சொல்ல வேண்டாம். நாங்கள் வேண்டுமென்றே அவரைக் கைது செய்யாமல் இருக்கிறோம் என்பது உண்மையல்ல! தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்கிறார் அவர்.

போலிஸ் படைத் தலைவரின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லக்கூடிய நிலைமையில் நாம் இல்லை. "வேண்டுமென்றே அவரைக்கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்" என்று மக்கள் பேசுவதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்! நன்றி! அவருக்கு அதிகப்படியான விளம்பரம் கிடைத்ததானாலேயே அவர் தலைமறைவாகிவிட்டார் என்பதும் நம்பக்குட்டியதாக இல்லை. தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தவிர மற்றபடி பெரிய அளவில் எந்த ஊடகங்களும் ரித்துவானைப் பற்றிய செய்திகளைப் போடுவதில்லை.

இருந்தாலும் போலிஸார் இன்னும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துகொண்டு வருவதாக அவர் கூறியிருப்பதை வரவேற்போம்! இது மிகவும் சாதாரண ஒரு வழக்கு. நிச்சயம் போலிஸார் இதற்கு ஒரு முடிவு காண்பார்கள் என நம்புவோம்!



Thursday, 1 December 2016

குழந்தைகள் விற்பனையா..?


சமீப காலங்களில்,  உலகளவில்,  மலேசியா பற்றிய செய்திகள் கேட்பதற்கு வருத்தம் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மோசமான  ஊழல் சம்பந்தமான  செய்திகள் ஒரு பக்கம். இப்போது படிப்படியாக இறங்கி எல்லா மட்டத்திலும் வெவ்வேறு வகையில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சில நாள்களுக்கு முன்னர் ஆள் கடத்தல் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.அதற்கும் மலேசியா பெரிய அளவில் பேசப்பட்டது!

குழந்தைகள் கடத்தல் என்பது எப்போதுமே உள்ள ஒரு குற்றச்சாட்டு. ஆனால் எதற்குமே சரியான பதில் இல்லை!

இப்போது குழந்தைகள் கடத்தல் இல்லை. குழந்தைகள் விற்பனை என்பதாக ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அல்ஜஸீரா தொலைக்காட்சி நிலையம்,  சமீபத்திய தனது செய்தித் தொகுப்பொன்றில்  மலேசியாவை குழந்தைகள் விற்பனை மையமாக சித்தத்திரிக்கிறது அல்ஜஸீரா. மலேசியாவுக்கு இது மிகவும் சங்கடத்துக்குறிய செய்தி என்பதில் ஐயமில்லை.

அல்ஜஸீரா கொடுக்கும் மேலும் அதிர்ச்சிக்குறிய  செய்தி: இந்த குழந்தைகள் விற்பனையில் டாக்டர்கள்,  அராசங்க  அதிகாரிகள்,  தேசிய பதிவு இலாகா அதிகாரிகள், காவல் துறையினர் போன்றவர்கள் பலர் சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் செய்தி தான்! .

சராசரி மலேசியர்களோடு ஒப்பிடும் போது மேற் குறிப்பிட்டவர்கள் அனைவருமே நல்ல நிலையில் உள்ளவர்கள். அதாவது வருமானம் என்று வரும்போது கொஞ்சம் அதிக சம்பாத்தியம் உள்ளவர்கள்!  ஆனாலும் இவர்களெல்லாம் இது போன்ற ஊழல்களில் ஈடுபடும் போது - ஊழல் என்பதைவிட இதுவும் பயங்கரவாதம் தான் - பொது மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை! இப்படி படித்தவன் எல்லாம் பண்பற்ற முறையில் நடந்து கொண்டால் நாடு எங்கு நோக்கிச் செல்கிறது என்று தான் நாமும் கேட்க வேண்டி இருக்கிறது!

இந்த செய்திகள் வந்த அடுத்த நாளே காவல்துறை தலைவர், காலிட் அபு பக்கர் இதனை மறுத்துள்ளார்!  சட்டதிட்டங்கள் எல்லாம் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் குழந்தைகள் விற்பனை என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.  பொதுவாகவே காவல் துறைத் தலைவர் எந்த விஷயமானாலும் முதலில் மறுப்பதும் பின்னர் 'நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பதும் அவரின் இயல்பு!

ஆனாலும் காவல்துறையினரால்  இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறியும் போது நமக்கும் ஆறுதலாக இருக்கிறது! தனியார் துறை தான் அவர்களின் இலக்கு என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

பொதுவாகவே மலேசியர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது நாம் கேட்டிராத ஒன்று. வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் பெண்கள் ஒரு சில கிளினிக்குகளை மட்டுமே, தேர்ந்தெடுத்து  பயன்படுத்தி  வருகின்றனர். இங்கு தான் தவறான பல நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன. இவைகள் எல்லாம் காவல்துறைக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. வரம்புகள் மீறப்படுகின்றன.

யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை! காரணம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் 'பெரிய' மனிதர்களாக வெளியே உலா வருகின்றனர்! யார் என்ன செய்ய?

இவ்வளவு இடர்பாடுகளிலும் ஒரு சிலர் துணிந்து இது போன்ற செய்திகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர்!

அதற்காக நாம் அல்ஜஸீரா தொலைக்காட்சி நிருபரைப்  பாராட்ட வேண்டும்.

காவல்துதுறை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்ப்போம். சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய புள்ளிகளாக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு!