Friday 2 December 2016

தலைமறைவானவர் நாட்டில் தான் இருக்கிறார்!


இந்த நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள், மிகவும் ஆபத்தான, படு பயங்கரமானக் குற்றவாளிகள் கூட, போலிஸ் கண்களில் இருந்து தப்பித்தது கிடையாது! எப்போதோ, எங்கயோ அவர்கள் பிடிபட்டு விடுவார்கள். அல்லது சுட்டுத் தள்ளப்படுவார்கள்!

ஆனால் இந்திராவின் முன்னாள் கணவர் முகமது ரித்வான் என்னும் பத்மநாதன் மட்டும் போலிஸாரின் கண்களுக்கு அகப்படும் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை! நமது ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூட மிகவும் சலித்துக் கொள்ளக்கூடிய வகையில் இந்தத் தேடு பணி தொடர்...தொடர்ந்து ........கொண்டே ..........இருக்கிறது!

இந்த பத்மநாதன் என்னும் ரிதுவான், நீதிமன்ற உத்தரவின் படி, இந்நேரம் தனது கடைசி குழந்தையை தனது முன்னாள் மனைவியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ஒப்படைக்கவில்லை. என்று  நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்ததோ அன்றிலிருந்து அவர் காணப்படவில்லை!

பத்மநாதன் வெளி நாடுகளுக்குப் போகும் நிலையில் இல்லை.  காரணம் எல்லாச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் விழிப்பு நிலையில் உள்ளனர் என்கிறார் போலிஸ் படைத்தலைவர்.

பத்மநாதனுக்கு அவரின் கைது உத்தரவு பற்றி பெரிய விளம்பரம் கொடுத்ததனாலேயே அவர் உஷாராகி விட்டார் என்கிறார் டான்ஸ்ரீ காலிட்! அதனாலேயே அவரைக் கைது செய்ய முடியாத நிலை என்கிறார் அவர்!

போலிஸாரைக் குற்றம் சொல்ல வேண்டாம். நாங்கள் வேண்டுமென்றே அவரைக் கைது செய்யாமல் இருக்கிறோம் என்பது உண்மையல்ல! தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்கிறார் அவர்.

போலிஸ் படைத் தலைவரின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லக்கூடிய நிலைமையில் நாம் இல்லை. "வேண்டுமென்றே அவரைக்கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்" என்று மக்கள் பேசுவதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்! நன்றி! அவருக்கு அதிகப்படியான விளம்பரம் கிடைத்ததானாலேயே அவர் தலைமறைவாகிவிட்டார் என்பதும் நம்பக்குட்டியதாக இல்லை. தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தவிர மற்றபடி பெரிய அளவில் எந்த ஊடகங்களும் ரித்துவானைப் பற்றிய செய்திகளைப் போடுவதில்லை.

இருந்தாலும் போலிஸார் இன்னும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துகொண்டு வருவதாக அவர் கூறியிருப்பதை வரவேற்போம்! இது மிகவும் சாதாரண ஒரு வழக்கு. நிச்சயம் போலிஸார் இதற்கு ஒரு முடிவு காண்பார்கள் என நம்புவோம்!



No comments:

Post a Comment