Sunday, 5 March 2017
காமிக்ஸ் புத்தகங்கள்.......?
பொதுவாக தமிழில் காமிக்ஸ் புத்தங்கள் எந்தக் காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய வரவேற்புப் பெற்றதில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் மட்டும் அல்ல மலேசிய நாட்டிலும் அதே நிலை தான்.
காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கான புத்தகம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அதனை அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக தமிழுலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? சிறுவர் இலக்கியம் பற்றியே பெரிதாக ஒன்றும் சொல்லுவதற்கில்லையே!
ஆனால் எனக்குத் தெரிந்தவரை சீன மாணவர்கள் தான் இந்த காமிக்ஸ் புத்தகங்களை - சும்மா விரும்பி என்று சொல்லக் கூடாது - ஒரு வெறித்தனமான ஆர்வத்துடன் படிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்! எனது பள்ளிக் காலத்தில் நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்தப் புத்தகங்கள் ஆங்கில மொழியில் - வார இதழாக - வந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரை TARZAN கதைகள் தான் மிகவும் பிரபலம். இந்த இதழின் வாசகர் வட்டம் என்றால் அது சீன மாணவர்கள் தான்! இப்பொழுதும் இந்த காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பவர்கள் சீன மாணவர்கள் தான்! இப்போது சீன மொழியில் நிறைய காமிக்ஸ் வார இதழ்கள் வருகின்றன. ஆங்கில இதழ்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது!
ஆனால் தமிழில்.? தமிழர்களிடையே அவ்வளவாகக் காமிக்ஸ்கள் வரவேற்புப் பெற வில்லை? பொருளாதரமும் ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்பதும் உண்மையே. சான்றுக்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் எனது பள்ளிக்காலத்தில் ஒரு TARZAN இதழைக் கூட வாங்கியதில்லை! ஆனால் சீன நண்பர்களிடம் வாங்கிப் படித்திருக்கிறேன். பள்ளிக்காலத்தில் எனக்குக் கொடுக்கப்படும் பணத்தில் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் அளவுக்கு சக்தியில்லை! அப்போதும் அதன் விலை அதிகம் தான்! சீன மாணவர்களுக்குப் பொருளாதார சக்தி உண்டு என்பதால் அவர்களால் வாங்க முடிந்தது. இந்திய, மாணவர்களால் வாங்க முடியவில்லை. இது முற்றிலும் பொருளாதாரக் காரணங்கள் தான் என்பதாகவே நான் நினைக்கிறேன்.
தமிழகத்தின் நிலை வேறாக இருக்கலாம். பெற்றோர்கள் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்துப் பிள்ளைகளைப் படிக்கத் தூண்டவில்லை. சிறுவர் இதழ்களையே படிக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்! குறிப்பாக அம்புலிமாமா, கண்ணன், கல்கண்டு போன்ற சிறுவர் பத்திரிக்கைகளே அவர்கள் வீடுகளில் வலம் வந்தன. ஒரு வேளை அம்புலிமாமா அந்தக்காலத்தில் காமிக்ஸ் பாணியில் இதழ்களை வெளியிட ஆரம்பித்திருந்தால் இந்தத் துறை வெற்றிகரமானத் துறையாக அமைந்திருக்க்கலாம்.
இனி மேலும் இந்தத் துறை வளருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் வளரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. வளரும் என எதிர்பார்ப்போம்.
குறிப்பு: மேலே உள்ள காமிக்ஸ் ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது, நன்றி!
Saturday, 4 March 2017
தமிழகத்தில் சொத்து வாங்குகிறீர்களா?
தமிழ் நாட்டில் சொத்து வாங்குவது - குறிப்பாக வீடுகள் வாங்குவது - பற்றியான செய்திகள் அடிக்கடி வருகின்றன.
பண வசதி உள்ளவர்கள் எந்த நாட்டிலும் சொத்துகள் வாங்கலாம். அதில் தடை ஏதும் இல்லை.
நமது நாட்டில் கூட சிங்கப்பூரியர்கள் கடைகள், வீடுகள் என்று ஓரளவு ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றனர். நமது நாட்டின் பண வீக்கம் சிங்கப்பூரியர்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
ஆனால் தமிழ் நாட்டில் வீடுகள் வாங்குவது என்பது மிகவும் - ஒருமுறை அல்ல, பலமுறை - யோசிக்க வேண்டிய விஷயம்.
தமிழக விற்பனையாளர்கள் இங்கு வந்து உங்களிடம் 'ஆகா! ஓகோ!' என்று பேசிவிட்டுப் போய்விடுவார்கள்! விற்பனை என்பது அவர்களது தொழில். அவ்வளவு தான். விற்றால் அவர்களுக்கு கணிசமான வருமானம். மற்றபடி அவர்கள் சொல்லுவது எல்லாம் வேத வாக்கு என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. வீடுகளை விற்கும் தொழில் நிறுவனங்களும் அப்படி ஒன்றும் நம்பத்தகுந்தவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
பெரும்பாலும் இது போன்ற தொழில்களில் உள்ளவர்கள் அரசியல் தொடர்பு உடையவர்கள்.அவர்களிடம் எல்லா வசதிகளும் உண்டு. ஏமாற்றுவதில் வல்லவர்கள்! உள்ளுர் சட்ட திட்டங்கள் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே ஏதேனும் சட்டதிட்டங்கள் இல்லையென்றாலும் அவர்களே உருவாக்கிவிடுவார்கள்! பலே கில்லாடிகள்! நீங்கள் வாங்கிய சொத்து வேறொருவர் பெயரில் பதியப்பட்டிருக்கும்! உங்கள் சொத்து என்று நீங்கள் பணம் கட்டிக் கொண்டிருப்பீர்கள்! கடைசியில் உங்களை ஏமாந்த சோணகிரியாக்கி விடுவார்கள்!
தெரிந்தவர்களையும் நம்ப வேண்டாம்! தெரியாதவர்களையும் நம்ப வேண்டாம்! சொந்தங்களையும் நம்ப வேண்டாம்! பந்தங்களையும் நம்ப வேண்டாம்!
எனது நண்பர் வங்கி ஒன்றில் பணம் வைப்புத் தொகையாக வைத்திருந்தார். கடிதப் போக்குவரத்துக்கு தனது நண்பரின் முகவரியைக் கொடுத்திருந்தார். அந்த நண்பரோ அந்த வைப்புத் தொகையை அவருடைய பெயரில் மாற்றிக் கொண்டார்! இன்னொரு நண்பர் தவணை முறை மூலம் வீடு வாங்கியிருந்தார். அங்குள்ள அவருடைய நண்பர் அனைத்தையும் கவனித்துக் கொண்டார். பணம் கட்டி முடித்ததும் நண்பர் இங்கிருந்து அங்கு பயணம் ஆனார். ஆனால் அவரால் அவருடைய வீட்டிக்குச் செல்ல முடியவில்லை! அடிதடியோடு அவரை நன்றாகக் 'கவனித்து' விட்டு திரும்பவும் இங்கு அனுப்பிவிட்டார்கள்! இதெல்லாம் அங்கு சர்வ சாதாரண விஷயம்! பணத்துக்காக அரசியல்வாதிகளின் காலில் விழுபவர்கள் எதையும் செய்வார்கள்! இதெல்லாம் சில எடுத்துக் காட்டுக்கள்!
என்னைக் கேட்டால் - உங்களிடம் பணம் இருந்தால் - ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்து வீடு வாங்கி அங்குக் குடியேறுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது.
பணம் உங்களுடையது. நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
Friday, 3 March 2017
மழையே....வா! வா!
மழை காலத்தில் மழை தொடர்ச்சியாக வருவதை யாரும் விரும்புவதில்லை.
மழை இல்லாத காலத்தில்.....? மழை இல்லாத காலத்தில் நாம் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகிறோம். கொஞ்சமா, நஞ்சமா! அவ்வளவு சிரமங்கள். முதலில் உஷ்ணம் தாங்க முடிவதில்லை. தொடர்ச்சியாக மழை பெய்தாலும் குளிர்ச்சி தாங்க முடியவில்லை!
நமது நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெப்பம் அதிகமாகவே தெரிகிறது. இன்றைய நிலையில் மின்விசிறிகளும், குளிர்சாதனப் பெட்டிகளும் பல வீடுகளில் அத்தியாவசியப் பொருளாகி விட்டன. குறைந்தபட்சம் ஒரு மின்விசிறியாவது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கும். அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம்.இப்போது நம்மால் உணர முடிகிறது.
இந்த நேரத்தில் ஒரு செய்தி எனது ஞாபகத்திற்கு வருகிறது. தமிழகத்தின் பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தனா சொன்ன ஒரு தகவல்.
வீட்டிற்கு வெளியே துணிகள் காய்ந்து கொண்டிருக்கின்றன. மழை வருவதற்கான அறிகுறி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. துணிகள் நினைந்து விட்டால்...? உடனே துணிகளை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் தாயார், துணிகளை எடுக்க வேண்டாம் என்று தடை போடுகிறார். ஏன்? துணிகளை எடுத்தால் மழை நின்று விடுமாம்! துணிகள் நினைந்தால் பரவாயில்லை. மழை வர வேண்டும். மழை தான் வேண்டும்.
அவர் சொல்வதில் சரியா! தவறா! என்று நான் பேசப்போவதில்லை. ஆனால் அப்படி சொல்வதில் அவருடைய பெருந்தன்மை தெரிகிறது. வெறும் பெருந்தன்மை என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது! தான் என்னும் சுயநலம் இல்லை. மழையோ அடிக்கடி பெய்வதில்லை. மழை பெய்கின்ற போது அதனை நிறுத்துவது பாவம். மழை பெய்யட்டும். மழை பெய்வதால் தான் மட்டும் அல்ல இந்த ஊரே பயன் அடைகிறது.
தன்னைப் பற்றி நினைக்காமல் தங்கள் ஊரைப்பற்றி நினைக்கிறார்களே அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இன்றைய நிலையில் சுயநலவாதிகளைத் தான் எங்கும் பார்க்கிறோம். பொது நலம் என்பதே கேலிக்குறிய பொருளாகிவிட்டது! தனக்கு மட்டும், தனக்கு மட்டும் என்கிற சுயநலப் போக்கு அதிகமாகி விட்டது. தான், தனது குடும்பம், தனது பிழைப்பு, தனது செல்வம் - இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். ஆனால் எந்த மனிதனும் தனித்து வாழ முடியாது! பிறர் உதவியின்றி வாழ முடியாது!
கொஞ்சமாவது பொதுநலத்தோடு வாழ முயற்சி செய்யுங்கள். மழை பொதுவானது. அந்த மழையைக் கூட - அளவுக்கு அதிகமானால் - அதனை எப்படி சேமிப்பது அல்லது பயன் உள்ள முறையில் பயன்படுத்துவது என்று யோசியுங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு.
மழையை வா! வா! என வரவேற்போம்!
Subscribe to:
Posts (Atom)