Sunday 5 March 2017

காமிக்ஸ் புத்தகங்கள்.......?


பொதுவாக தமிழில் காமிக்ஸ் புத்தங்கள் எந்தக் காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய வரவேற்புப் பெற்றதில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் மட்டும் அல்ல மலேசிய நாட்டிலும் அதே நிலை தான்.

காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கான புத்தகம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அதனை அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக தமிழுலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? சிறுவர் இலக்கியம் பற்றியே பெரிதாக ஒன்றும் சொல்லுவதற்கில்லையே!

ஆனால் எனக்குத் தெரிந்தவரை சீன மாணவர்கள் தான் இந்த காமிக்ஸ் புத்தகங்களை - சும்மா விரும்பி என்று சொல்லக் கூடாது - ஒரு வெறித்தனமான ஆர்வத்துடன் படிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்! எனது பள்ளிக் காலத்தில் நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்தப் புத்தகங்கள் ஆங்கில மொழியில் - வார இதழாக - வந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரை TARZAN கதைகள் தான் மிகவும் பிரபலம். இந்த இதழின் வாசகர் வட்டம் என்றால் அது சீன மாணவர்கள் தான்! இப்பொழுதும் இந்த காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பவர்கள் சீன மாணவர்கள் தான்! இப்போது சீன மொழியில் நிறைய காமிக்ஸ் வார இதழ்கள் வருகின்றன. ஆங்கில இதழ்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது!

 
           
         
ஆனால் தமிழில்.?  தமிழர்களிடையே அவ்வளவாகக்  காமிக்ஸ்கள் வரவேற்புப் பெற வில்லை? பொருளாதரமும் ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்பதும் உண்மையே. சான்றுக்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் எனது பள்ளிக்காலத்தில் ஒரு TARZAN இதழைக் கூட வாங்கியதில்லை!  ஆனால் சீன நண்பர்களிடம் வாங்கிப் படித்திருக்கிறேன். பள்ளிக்காலத்தில் எனக்குக்  கொடுக்கப்படும் பணத்தில் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் அளவுக்கு சக்தியில்லை! அப்போதும் அதன் விலை அதிகம் தான்! சீன மாணவர்களுக்குப் பொருளாதார சக்தி உண்டு என்பதால் அவர்களால் வாங்க முடிந்தது.  இந்திய,  மாணவர்களால் வாங்க முடியவில்லை. இது முற்றிலும் பொருளாதாரக் காரணங்கள்  தான் என்பதாகவே நான் நினைக்கிறேன்.

   தமிழகத்தின் நிலை வேறாக இருக்கலாம். பெற்றோர்கள் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்துப் பிள்ளைகளைப் படிக்கத் தூண்டவில்லை. சிறுவர் இதழ்களையே படிக்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்!  குறிப்பாக அம்புலிமாமா, கண்ணன், கல்கண்டு போன்ற சிறுவர் பத்திரிக்கைகளே அவர்கள் வீடுகளில் வலம் வந்தன. ஒரு வேளை அம்புலிமாமா  அந்தக்காலத்தில் காமிக்ஸ் பாணியில் இதழ்களை வெளியிட ஆரம்பித்திருந்தால் இந்தத் துறை வெற்றிகரமானத் துறையாக அமைந்திருக்க்கலாம்.

இனி மேலும் இந்தத் துறை வளருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் வளரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. வளரும் என எதிர்பார்ப்போம்.

குறிப்பு: மேலே உள்ள காமிக்ஸ் ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது, நன்றி!

No comments:

Post a Comment