Saturday 4 March 2017

தமிழகத்தில் சொத்து வாங்குகிறீர்களா?


தமிழ் நாட்டில் சொத்து வாங்குவது - குறிப்பாக வீடுகள் வாங்குவது - பற்றியான செய்திகள் அடிக்கடி வருகின்றன.

பண வசதி உள்ளவர்கள் எந்த நாட்டிலும் சொத்துகள் வாங்கலாம். அதில் தடை ஏதும் இல்லை.

நமது நாட்டில் கூட சிங்கப்பூரியர்கள் கடைகள், வீடுகள் என்று ஓரளவு ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றனர். நமது நாட்டின் பண வீக்கம் சிங்கப்பூரியர்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆனால் தமிழ் நாட்டில் வீடுகள் வாங்குவது என்பது மிகவும் - ஒருமுறை அல்ல, பலமுறை - யோசிக்க வேண்டிய விஷயம்.

தமிழக விற்பனையாளர்கள் இங்கு வந்து உங்களிடம் 'ஆகா! ஓகோ!'  என்று பேசிவிட்டுப் போய்விடுவார்கள்! விற்பனை என்பது அவர்களது தொழில். அவ்வளவு தான். விற்றால் அவர்களுக்கு கணிசமான வருமானம்.  மற்றபடி அவர்கள் சொல்லுவது எல்லாம் வேத வாக்கு என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. வீடுகளை விற்கும் தொழில் நிறுவனங்களும் அப்படி ஒன்றும் நம்பத்தகுந்தவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பெரும்பாலும் இது போன்ற தொழில்களில் உள்ளவர்கள் அரசியல்  தொடர்பு உடையவர்கள்.அவர்களிடம் எல்லா வசதிகளும் உண்டு. ஏமாற்றுவதில் வல்லவர்கள்! உள்ளுர் சட்ட திட்டங்கள் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே ஏதேனும் சட்டதிட்டங்கள் இல்லையென்றாலும் அவர்களே உருவாக்கிவிடுவார்கள்! பலே கில்லாடிகள்! நீங்கள் வாங்கிய சொத்து வேறொருவர் பெயரில் பதியப்பட்டிருக்கும்! உங்கள்  சொத்து என்று நீங்கள் பணம் கட்டிக் கொண்டிருப்பீர்கள்! கடைசியில் உங்களை ஏமாந்த சோணகிரியாக்கி விடுவார்கள்!

தெரிந்தவர்களையும் நம்ப வேண்டாம்! தெரியாதவர்களையும் நம்ப வேண்டாம்! சொந்தங்களையும் நம்ப வேண்டாம்! பந்தங்களையும் நம்ப வேண்டாம்!

எனது நண்பர் வங்கி ஒன்றில் பணம் வைப்புத் தொகையாக வைத்திருந்தார். கடிதப் போக்குவரத்துக்கு தனது நண்பரின் முகவரியைக் கொடுத்திருந்தார். அந்த நண்பரோ அந்த வைப்புத் தொகையை அவருடைய பெயரில் மாற்றிக் கொண்டார்!  இன்னொரு நண்பர் தவணை முறை மூலம் வீடு  வாங்கியிருந்தார். அங்குள்ள அவருடைய நண்பர் அனைத்தையும் கவனித்துக் கொண்டார். பணம் கட்டி முடித்ததும் நண்பர் இங்கிருந்து அங்கு பயணம் ஆனார். ஆனால் அவரால் அவருடைய வீட்டிக்குச் செல்ல முடியவில்லை!  அடிதடியோடு அவரை நன்றாகக் 'கவனித்து' விட்டு திரும்பவும் இங்கு அனுப்பிவிட்டார்கள்! இதெல்லாம் அங்கு சர்வ சாதாரண விஷயம்! பணத்துக்காக அரசியல்வாதிகளின் காலில் விழுபவர்கள் எதையும் செய்வார்கள்! இதெல்லாம் சில எடுத்துக் காட்டுக்கள்!

என்னைக் கேட்டால் - உங்களிடம் பணம் இருந்தால் - ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்து வீடு வாங்கி அங்குக் குடியேறுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது.

பணம் உங்களுடையது. நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment