Friday 3 March 2017

மழையே....வா! வா!


மழை காலத்தில் மழை தொடர்ச்சியாக வருவதை யாரும் விரும்புவதில்லை.

மழை இல்லாத காலத்தில்.....?  மழை இல்லாத காலத்தில் நாம் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகிறோம். கொஞ்சமா, நஞ்சமா! அவ்வளவு சிரமங்கள். முதலில் உஷ்ணம் தாங்க முடிவதில்லை. தொடர்ச்சியாக மழை பெய்தாலும் குளிர்ச்சி தாங்க முடியவில்லை!

நமது நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெப்பம் அதிகமாகவே தெரிகிறது. இன்றைய நிலையில் மின்விசிறிகளும், குளிர்சாதனப் பெட்டிகளும் பல வீடுகளில் அத்தியாவசியப் பொருளாகி விட்டன. குறைந்தபட்சம் ஒரு மின்விசிறியாவது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கும். அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம்.இப்போது நம்மால் உணர முடிகிறது.

இந்த நேரத்தில் ஒரு செய்தி எனது ஞாபகத்திற்கு வருகிறது. தமிழகத்தின் பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தனா சொன்ன ஒரு தகவல்.

வீட்டிற்கு வெளியே துணிகள் காய்ந்து கொண்டிருக்கின்றன. மழை வருவதற்கான அறிகுறி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. துணிகள் நினைந்து விட்டால்...?  உடனே துணிகளை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் தாயார், துணிகளை எடுக்க வேண்டாம் என்று தடை போடுகிறார். ஏன்?  துணிகளை எடுத்தால் மழை நின்று விடுமாம்! துணிகள் நினைந்தால் பரவாயில்லை. மழை வர வேண்டும். மழை தான் வேண்டும்.

அவர் சொல்வதில் சரியா! தவறா! என்று நான் பேசப்போவதில்லை. ஆனால் அப்படி சொல்வதில் அவருடைய பெருந்தன்மை தெரிகிறது. வெறும் பெருந்தன்மை என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது!  தான் என்னும் சுயநலம் இல்லை.  மழையோ அடிக்கடி பெய்வதில்லை. மழை பெய்கின்ற போது அதனை நிறுத்துவது பாவம். மழை பெய்யட்டும். மழை பெய்வதால் தான்  மட்டும் அல்ல இந்த ஊரே  பயன் அடைகிறது.

தன்னைப் பற்றி நினைக்காமல் தங்கள் ஊரைப்பற்றி நினைக்கிறார்களே அவர்கள் போற்றப்பட  வேண்டியவர்கள். இன்றைய நிலையில் சுயநலவாதிகளைத் தான் எங்கும் பார்க்கிறோம். பொது நலம் என்பதே கேலிக்குறிய பொருளாகிவிட்டது! தனக்கு மட்டும், தனக்கு மட்டும் என்கிற சுயநலப் போக்கு அதிகமாகி விட்டது. தான், தனது குடும்பம், தனது பிழைப்பு, தனது செல்வம் - இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். ஆனால் எந்த மனிதனும் தனித்து வாழ முடியாது! பிறர் உதவியின்றி வாழ முடியாது!

கொஞ்சமாவது பொதுநலத்தோடு வாழ முயற்சி செய்யுங்கள். மழை பொதுவானது. அந்த மழையைக் கூட - அளவுக்கு அதிகமானால் - அதனை எப்படி சேமிப்பது அல்லது பயன் உள்ள முறையில் பயன்படுத்துவது என்று யோசியுங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு.

மழையை வா! வா! என வரவேற்போம்!

No comments:

Post a Comment