காற்பந்து உலகில் பீட்டர் வேலப்பன் என்றால் தெரியாதார் யாருமில்லை. ஆனால் ஒன்று. இவர் மலேசிய முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவரல்ல. பின்னணியில் இருந்து செயல்படுபவர். எத்தனையோ ஆட்டக்காரர்கள் வந்து போய்விட்டனர். ஆனால் இவரோ நீ....ண்...ட காலம் மலேசியக் காற்பந்துத் துறையில் இருந்தவர்.
வயதோ 82. அவரிடம் காற்பந்து பற்றிப் பேசினால் 8 வயது பையானாக மாறி விடுவார்! அந்தச் சுறுசுறுப்பு, அந்தத் துடிதுடிப்பு இன்னும் குறையவில்லை. காற்பந்தே அவரது வாழ்க்கை. காற்பந்தே அவரது சுவாசிப்பு. காற்பந்தே அவரது ஒவ்வொரு நாடித் தூடிப்பிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.
நெகிரி செம்பிலான், சிலியோ தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் பீட்டர் வேலப்பன். ஆரம்பக் கல்வி சிலியோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில். அதன் பின்னர் சிரம்பானில் ஏ.சி.எஸ். ஆங்கிலப் பள்ளியில். சீனியர் கேம்பிரிஜ் முடித்த பின்னர் ஆசிரியர் பயிற்சிக்காக இங்கிலாந்து சென்றார். அதன் பின்னர், தான் படித்த ஏ.சி.எஸ். பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் மீண்டும், ஓர் ஆண்டு, இங்கிலாந்திற்கு விளையாட்டுத் துறை சம்பந்தமான பயிற்சி பெற அனுப்பப்பட்டார். மீண்டும் மலேசியா திரும்பி தனது கல்வி சேவையைத் தொடர்ந்தார். அவர் தொடர்ந்து தனது மேற்கல்வியைத் தொடர கானடா நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அதனை முடித்த பின்னர் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அத்தோடு தனது 17 ஆண்டுகால அரசுப் பணியிலிருந்து விலகி தனியார் துறைக்கு மாறினார்.
தனியார் துறைக்கு மாறினாலும் காற்பந்து விளையாட்டு மேல் அவருக்கு இருந்த ஈடுபாடு குறையவில்லை. 1963 - ல் மலேசிய காற்பந்து சங்கத்தின் துணைச் செயளாலராக பதவியில் அமர்ந்தார். அப்போது அதன் தலைவராக இருந்தவர் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள். அப்போது ஆரம்பித்த அவரின் காற்பந்து பயணம் ...தொடர்ந்து....தொடர்ந்து..... ஏதோ ஓரு வகையில் இன்றும் அவருடன் பயணம் செய்கிறது! காற்பந்து தொடர்பில் சுமார் 230 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். 12 ஃபிபா உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்றவர். ஜெர்மனியில் நடந்த 1972 ஒலிம்பிக் போட்டியில் மலேசிய காற்பந்து குழுவுக்கு நிர்வாகியாக் இருந்தவர். இன்னும் பல, பல, பல.
இன்றைய காற்பந்து நிலவரம் எப்படி? "காற்பந்தின் பொற்காலம் என்றால் அது முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானோடு முடிந்து விட்டது. இப்போது அம்னோ அரசியல்வாதிகள் எல்லாப் பதவிகளையும் நிரப்பிவிட்டனர். பதவி தான் இருக்கிறது; காற்பந்து இல்லை! இன ரீதியில் செயல்படுவதால் காற்பந்து போட்டிகள் சொல்லும்படியாக இல்லை!" என்கிறார்.
நமக்குத் திறன் உண்டு. திறமைக்குப் பஞ்சம் இல்லை. ஆற்றல் உண்டு. ஆனால் தக்க தலைமை இல்லை. அதனால் உலகளவில் நமக்கான வாய்ப்புக்கள் குறைந்து விட்டன.
இந்த வயதிலும் ஏதோ ஒரு வகையில் காற்பந்து துறையில் தனது பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார், பீட்டர் வேலப்பன்.
இனி வருங்காலங்களில், ஒரு தமிழர், இந்த அளவு உயரத்தைக் காற்பந்துத் துறையில் எட்ட முடியுமா? முடியும் என்றே எண்ணுவோம். எதுவும் நடக்கலாம்! இது மட்டும் நடக்கலாமலா போய்விடும்!
"அதனால் என்ன, எனக்குக் கண்பார்வை இல்லை என்பதற்காக வெறுமனே உட்கார்ந்து இருக்க முடியாது" இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல:
இதோ மேலே படத்தில் நீல உடையில் இருக்கிறாரே, அவர் தான் மகாவித்யா. வயது 22. இலக்கியத் துறையில் பட்டம் பெற வேண்டும் என்னும் வேட்கையோடு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். நமது நாட்டின் மற்றைய பல்கலைக்கழகங்கள் அவரை உதாசீனப்படுத்தினாலும் பினாங்கு அறிவியல் பல்கழைக்கழகம் அவரை ஏற்றுக் கொண்டது.
பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவரான மகாவித்யா குழைந்தையாய் இருந்த போதே தந்தையை இழந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தாயார் சீதா லட்சுமி மார்பகப் புற்று நோயால் இறந்து போனார். தனது 11-வது வயதில் நெருப்புக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தனது இரு கண்களையும் இழந்தார். அவரது வாழ்க்கையில் பல சோதனைகளும், வேதனைகளும் தொடர்ந்தாலும் எதற்கும் அவர் அடி பணியவில்லை; கருமமே கண்ணாய் இருந்தார்; தனது கல்வியில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தினார்.
இன்று நாட்டின் புகழ் பெற்ற கல்வி நிறுவமான பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். எதிர்காலத்தில் நல்லதொரு கல்வியாளராக வர வேண்டும் என்பதே அவரது இலட்சியம். புதிய இடம், புதிய சூழல் என்கின்ற தயக்கம் இருந்தாலும் எத்தனையோ முட்டுக்கட்டைகளை முறியடித்த நான் இதனையும் முறியடிப்பேன் என்கிறார் மகாவித்யா.
அவர் எந்தக் காலத்திலும் வெறுமனே ஓய்ந்திருந்தது இல்லை. தனது எதிர்கால கல்விக்கு என்ன என்ன தேவையோ அத்தனையும் கற்றிருக்கிறார். கண்பார்வை இழந்தவர்களுக்கான பிரையில் முறை கல்வியையும் அவர் கற்றிருக்கிறார்.
ஆசிரியர் ஆவதே எனது இலட்சியம் என்னும் கனவோடு களம் புகுந்திருக்கிறார் வித்யா. அவர் வெற்றி உறுதி என்பதில் நமக்கு ஐயமில்லை.
நமக்கு அவர் தரும் பாடம்: என்னால் சும்மா வெறுமனே இருக்க முடியாது! அடுத்தது என்ன? அடுத்தது என்ன? அது தான் எனது தேடல்.
நாமும் அப்படித்தான் சிந்திக்க வேண்டும். அடுத்தது என்ன?
காலையில் நல்லதொரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. மிகவும் பாராட்டுதலுக்கு உரிய செய்தி. தனி மனித முயற்சிகள் எப்படி மக்களுக்குப் பயன் தரக் கூடிய முயற்சியாக மாறுகிறது என்பதற்குச் சான்று பகர்கின்ற ஒரு செய்தி.
ஷியாம்லால் (42 வயது)
இந்தியா, சத்திஷ்கர் மாநிலத்தில், கோரியா மாவட்டம், சிர்மிரி என்னும் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் (மேலே) ஷியாம்லால். 27 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கிராமத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் அவருக்கு மனதிலே ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது. தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஒற்றை ஆளாக மண்வெட்டியை எடுத்தார். அவருடைய கிராம மக்கள் அவருக்கு உதவியாக இல்லை. நையாண்டியும், நக்கலும் தான் அவர்களிடமிருந்து வந்தது. அவர் கவலைப்படவில்லை. 27 ஆண்டுகளாக தனி ஆளாக தனது வேலையை ஆரம்பித்தார். குளம் வெட்ட ஓர் இடத்தைக் கண்டு பிடித்து....மண்வெட்டியை எடுத்தவர் தான் ... இன்னும் அவர் நிறுத்திய பாடில்லை!
குளம் வெட்டி, மழை நீரை சேமித்தால், தண்ணீர் பிரச்சனை தீரும் என்று அவர் சொன்ன போது யாரும் கேட்கவில்லை. அப்போது அவருக்கு வயது 15! வயது ஒரு தடை! அவர்களுக்கு உதவ அரசு தயாராக இல்லை. அவர்கள் ஏழைகள்! பின் யார் தான் செய்வது? தனது ஊறவுகள் தொலை தூரம் சென்று தண்ணீருக்காக அலைவது அவரது கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.
இப்போது குளத்தை வெட்டி பெரிய அளவில் கொண்டு வந்து விட்டார். இப்போது மழை பெய்தால் மழை நீர் சேமிக்கப் படுகிறது. கிராமத்து மக்களும் இப்போது குளத்தின் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கால்நடைகளும் பயனடைகின்றன.
ஷியாம்லால் என்ன சொல்லுகிறார்: எங்கள் கிராமத்திற்குத் தண்ணீர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் அரசு தரப்பிலிருந்து இந்த 26 ஆண்டுகளாக எனக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் எங்களது சட்டமன்ற உறுப்பினர் வந்தார். பணம் கொடுப்பதாகச் சொன்னார். அது வாயளவில் நிற்கிறது. கலெக்டர் வந்தார். உதவுவதாகக் கூறி சென்றிருக்கிறார். பார்ப்போம்!
ஆனாலும் ஷியாம்லால் இன்னும் தனது பணியை நிறுத்தவில்லை. இன்னும் வெட்டிக் கொண்டே இருக்கிறார். 27 ஆண்டுகளாக உழைத்து வந்திருக்கிறார். அது அவர் வெட்டி வளர்த்த குளம். அதுவும் அவருக்கு ஒரு பிள்ளை மாதிரி! சும்மா விட்டு விட முடியுமா?
தனி மனிதனால் என்ன செய்ய முடியும் என்கிறோம். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு ஷியாம்லால். ஒரு தனி மனிதனின் முயற்சி. இப்போது ஒரு கிராமமே பயனடைகிறது.
ஆக, உன்னால், என்னால், நம்மால் - முடியும் தம்பி!