Sunday 10 September 2017

திறன் உண்டு; தக்க தலைமை இல்லை!



காற்பந்து உலகில் பீட்டர் வேலப்பன் என்றால் தெரியாதார் யாருமில்லை.  ஆனால் ஒன்று. இவர் மலேசிய முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவரல்ல. பின்னணியில் இருந்து செயல்படுபவர். எத்தனையோ ஆட்டக்காரர்கள் வந்து போய்விட்டனர். ஆனால் இவரோ நீ....ண்...ட  காலம் மலேசியக் காற்பந்துத் துறையில் இருந்தவர்.

வயதோ 82. அவரிடம் காற்பந்து பற்றிப் பேசினால் 8 வயது பையானாக மாறி விடுவார்! அந்தச் சுறுசுறுப்பு, அந்தத் துடிதுடிப்பு இன்னும் குறையவில்லை. காற்பந்தே அவரது வாழ்க்கை. காற்பந்தே அவரது சுவாசிப்பு. காற்பந்தே அவரது ஒவ்வொரு நாடித் தூடிப்பிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

நெகிரி செம்பிலான், சிலியோ தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் பீட்டர் வேலப்பன்.  ஆரம்பக் கல்வி சிலியோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில். அதன் பின்னர் சிரம்பானில் ஏ.சி.எஸ். ஆங்கிலப் பள்ளியில். சீனியர் கேம்பிரிஜ் முடித்த பின்னர் ஆசிரியர் பயிற்சிக்காக இங்கிலாந்து சென்றார். அதன்       பின்னர்,  தான் படித்த ஏ.சி.எஸ். பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் மீண்டும், ஓர் ஆண்டு, இங்கிலாந்திற்கு விளையாட்டுத் துறை சம்பந்தமான பயிற்சி பெற அனுப்பப்பட்டார். மீண்டும் மலேசியா திரும்பி தனது கல்வி சேவையைத் தொடர்ந்தார். அவர் தொடர்ந்து தனது மேற்கல்வியைத் தொடர கானடா நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அதனை முடித்த பின்னர் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அத்தோடு தனது 17 ஆண்டுகால அரசுப் பணியிலிருந்து விலகி தனியார் துறைக்கு மாறினார்.

தனியார் துறைக்கு மாறினாலும் காற்பந்து விளையாட்டு மேல் அவருக்கு இருந்த ஈடுபாடு குறையவில்லை. 1963 - ல்  மலேசிய காற்பந்து சங்கத்தின் துணைச் செயளாலராக பதவியில் அமர்ந்தார்.  அப்போது அதன் தலைவராக இருந்தவர் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள். அப்போது ஆரம்பித்த அவரின் காற்பந்து பயணம் ...தொடர்ந்து....தொடர்ந்து..... ஏதோ ஓரு வகையில் இன்றும் அவருடன் பயணம் செய்கிறது! காற்பந்து தொடர்பில் சுமார் 230 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். 12 ஃபிபா உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்றவர். ஜெர்மனியில் நடந்த 1972 ஒலிம்பிக் போட்டியில் மலேசிய காற்பந்து குழுவுக்கு நிர்வாகியாக் இருந்தவர். இன்னும் பல, பல, பல.

இன்றைய காற்பந்து நிலவரம் எப்படி?  "காற்பந்தின் பொற்காலம் என்றால் அது முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானோடு முடிந்து விட்டது. இப்போது அம்னோ அரசியல்வாதிகள் எல்லாப் பதவிகளையும் நிரப்பிவிட்டனர். பதவி தான் இருக்கிறது; காற்பந்து இல்லை! இன ரீதியில் செயல்படுவதால் காற்பந்து போட்டிகள் சொல்லும்படியாக இல்லை!" என்கிறார்.

நமக்குத் திறன் உண்டு. திறமைக்குப் பஞ்சம் இல்லை. ஆற்றல் உண்டு. ஆனால் தக்க தலைமை இல்லை. அதனால் உலகளவில் நமக்கான வாய்ப்புக்கள் குறைந்து விட்டன.

இந்த வயதிலும் ஏதோ ஒரு வகையில் காற்பந்து துறையில் தனது பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார், பீட்டர் வேலப்பன்.

இனி வருங்காலங்களில், ஒரு தமிழர், இந்த அளவு உயரத்தைக் காற்பந்துத் துறையில் எட்ட முடியுமா? முடியும் என்றே எண்ணுவோம்.  எதுவும் நடக்கலாம்! இது மட்டும் நடக்கலாமலா போய்விடும்!



No comments:

Post a Comment