Friday 8 September 2017

சும்மா, வெறுமனே இருக்க முடியாது...!


"அதனால் என்ன, எனக்குக் கண்பார்வை இல்லை என்பதற்காக வெறுமனே உட்கார்ந்து இருக்க முடியாது" இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல:

இதோ மேலே படத்தில் நீல உடையில் இருக்கிறாரே, அவர் தான் மகாவித்யா. வயது 22. இலக்கியத் துறையில் பட்டம் பெற வேண்டும் என்னும் வேட்கையோடு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். நமது நாட்டின் மற்றைய பல்கலைக்கழகங்கள் அவரை உதாசீனப்படுத்தினாலும் பினாங்கு அறிவியல் பல்கழைக்கழகம் அவரை ஏற்றுக் கொண்டது. 

பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவரான மகாவித்யா குழைந்தையாய் இருந்த போதே தந்தையை இழந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தாயார் சீதா லட்சுமி மார்பகப் புற்று நோயால் இறந்து போனார். தனது 11-வது வயதில் நெருப்புக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தனது இரு கண்களையும் இழந்தார்.  அவரது வாழ்க்கையில் பல சோதனைகளும், வேதனைகளும் தொடர்ந்தாலும் எதற்கும் அவர் அடி பணியவில்லை; கருமமே கண்ணாய் இருந்தார்; தனது கல்வியில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தினார்.

இன்று நாட்டின் புகழ் பெற்ற கல்வி நிறுவமான பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார். எதிர்காலத்தில் நல்லதொரு கல்வியாளராக வர வேண்டும் என்பதே அவரது இலட்சியம். புதிய இடம், புதிய சூழல் என்கின்ற தயக்கம் இருந்தாலும் எத்தனையோ முட்டுக்கட்டைகளை முறியடித்த நான் இதனையும் முறியடிப்பேன் என்கிறார் மகாவித்யா.

அவர் எந்தக் காலத்திலும் வெறுமனே ஓய்ந்திருந்தது இல்லை. தனது எதிர்கால கல்விக்கு என்ன என்ன தேவையோ அத்தனையும் கற்றிருக்கிறார். கண்பார்வை இழந்தவர்களுக்கான பிரையில் முறை கல்வியையும் அவர் கற்றிருக்கிறார்.

ஆசிரியர் ஆவதே எனது இலட்சியம் என்னும் கனவோடு களம் புகுந்திருக்கிறார் வித்யா. அவர் வெற்றி உறுதி என்பதில் நமக்கு ஐயமில்லை.

நமக்கு அவர் தரும் பாடம்: என்னால் சும்மா வெறுமனே இருக்க முடியாது! அடுத்தது என்ன?  அடுத்தது என்ன? அது தான் எனது தேடல்.

நாமும் அப்படித்தான் சிந்திக்க வேண்டும். அடுத்தது என்ன?


No comments:

Post a Comment