காலையில் நல்லதொரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. மிகவும் பாராட்டுதலுக்கு உரிய செய்தி. தனி மனித முயற்சிகள் எப்படி மக்களுக்குப் பயன் தரக் கூடிய முயற்சியாக மாறுகிறது என்பதற்குச் சான்று பகர்கின்ற ஒரு செய்தி.
ஷியாம்லால் (42 வயது)
இந்தியா, சத்திஷ்கர் மாநிலத்தில், கோரியா மாவட்டம், சிர்மிரி என்னும் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் (மேலே) ஷியாம்லால். 27 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கிராமத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் அவருக்கு மனதிலே ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது. தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஒற்றை ஆளாக மண்வெட்டியை எடுத்தார். அவருடைய கிராம மக்கள் அவருக்கு உதவியாக இல்லை. நையாண்டியும், நக்கலும் தான் அவர்களிடமிருந்து வந்தது. அவர் கவலைப்படவில்லை. 27 ஆண்டுகளாக தனி ஆளாக தனது வேலையை ஆரம்பித்தார். குளம் வெட்ட ஓர் இடத்தைக் கண்டு பிடித்து....மண்வெட்டியை எடுத்தவர் தான் ... இன்னும் அவர் நிறுத்திய பாடில்லை!
குளம் வெட்டி, மழை நீரை சேமித்தால், தண்ணீர் பிரச்சனை தீரும் என்று அவர் சொன்ன போது யாரும் கேட்கவில்லை. அப்போது அவருக்கு வயது 15! வயது ஒரு தடை! அவர்களுக்கு உதவ அரசு தயாராக இல்லை. அவர்கள் ஏழைகள்! பின் யார் தான் செய்வது? தனது ஊறவுகள் தொலை தூரம் சென்று தண்ணீருக்காக அலைவது அவரது கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.
இப்போது குளத்தை வெட்டி பெரிய அளவில் கொண்டு வந்து விட்டார். இப்போது மழை பெய்தால் மழை நீர் சேமிக்கப் படுகிறது. கிராமத்து மக்களும் இப்போது குளத்தின் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கால்நடைகளும் பயனடைகின்றன.
ஷியாம்லால் என்ன சொல்லுகிறார்: எங்கள் கிராமத்திற்குத் தண்ணீர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் அரசு தரப்பிலிருந்து இந்த 26 ஆண்டுகளாக எனக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் எங்களது சட்டமன்ற உறுப்பினர் வந்தார். பணம் கொடுப்பதாகச் சொன்னார். அது வாயளவில் நிற்கிறது. கலெக்டர் வந்தார். உதவுவதாகக் கூறி சென்றிருக்கிறார். பார்ப்போம்!
ஆனாலும் ஷியாம்லால் இன்னும் தனது பணியை நிறுத்தவில்லை. இன்னும் வெட்டிக் கொண்டே இருக்கிறார். 27 ஆண்டுகளாக உழைத்து வந்திருக்கிறார். அது அவர் வெட்டி வளர்த்த குளம். அதுவும் அவருக்கு ஒரு பிள்ளை மாதிரி! சும்மா விட்டு விட முடியுமா?
தனி மனிதனால் என்ன செய்ய முடியும் என்கிறோம். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு ஷியாம்லால். ஒரு தனி மனிதனின் முயற்சி. இப்போது ஒரு கிராமமே பயனடைகிறது.
ஆக, உன்னால், என்னால், நம்மால் - முடியும் தம்பி!
No comments:
Post a Comment