Wednesday, 8 August 2018

கல்வித் தோட்டம் ...காலியா....!

பேரா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 2000  ஏக்கர் நிலம் ..... அடடா!.... இருக்கிறதா, இல்லையா என்று கூட தெரியவில்லை இப்போதைய நடப்பு அரசாங்கத்திற்கு!

அதென்னவோ ம.இ.கா. காரனுக்கு எதனைக் கொடுத்தாலும் ஒன்று: மறைத்து விடுவான்! அல்லது விழுங்கி விடுவான்!  இந்த 2000 ஏக்கர் நிலத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவும் இல்லை! புரியவும் இல்லை!

சீனர்களுக்கும் தான் நிலத்தைக் கொடுத்தார்கள். மலாய்க்கார்களுக்கும் தான் நிலத்தைக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் பள்ளி வளர்ச்சிக்காகத் தான்  கொடுத்தார்கள். இவர்களுக்கும் கல்வி வளர்ச்சிக்காகத் தான் கொடுத்தார்கள்.  சீனப்பள்ளிகளுக்கு அந்த நிலங்கள் முக்கியம். மலாய்ப் பள்ளிகளுக்கும் அந்த நிலங்கள் முக்கியம். நிலம் எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதே - ஏன் அடுத்த நிமிடமே - சீனர்களும், மலாய்க்காரர்களும் நிலத்தை எடுத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  இப்போது அங்கு செம்பனை நட்டு அறுவடையும் ஆரம்பித்து விட்டன. 

அந்தோ! நமது ம.இ.கா. சிங்கங்கள் என்ன செய்தார்கள் என்று யாருக்கும் புரியவில்லை! அந்த நிலத்தை கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்களாம். இப்போது கூட்டுறவு சங்கம் அந்த நிலத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம். இதுவும் கூட கூட்டுறவு சங்கத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் அந்த ம.இ.கா. சிங்கங்கள் "கப்சிப்" என்று வாயைப் பொத்திக் கொண்டிருக்கின்றன! எந்த ஒரு செய்தியும் வெளியே வரமாட்டேன் என்கிறது. வாயைத் திறக்கவில்லை என்றால் ஏதோ பெரிதாக பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது என்பது தான் பொருள்! அது தான் தெரியவில்லை!

இன்னொன்றும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ம.இ.கா. காரன் எதனையும் தனித்து நின்று செய்வதில்லை. கூடவே அம்னோகாரனையும் சேர்த்துக் கொள்வது! காரணம் அம்னோ உள்ளிருந்தால் பிரச்சனைகளைத் திசை திருப்பலாம்! எந்த உண்மையும் வெளி வராது.  அம்னோவின் பேரைச் சொன்னால் ம.இ.கா. வுக்கு ஒரு பாதுகாப்பு! இவனும் திருடன் அவனும் திருடன்! ஒருவன் பெரிய திருடன்! இன்னொருவன் சிறிய திருடன்! சிறிய திருடனுக்குக் கோடிகள் கிடைத்தால் போதும்! அப்படி என்றால் பெரிய திருடனுக்கு....?

நமது இந்திய சமூகம் படிக்காதவனை எல்லாம் பதவியில் வைத்து நாறிப் போன சமூகம்! குண்டர் கும்பல்கள் பதவியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் நேரிடையாகவே அனுபவித்திருக்கிறோம்! இன்னும் அவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது!

இப்போதைக்கு கல்வித் தோட்டம் காலியா அல்லது தோல்வியா என்பதைக் கூடிய சீக்கிரம் தெரிந்து கொள்வோம்! அதுவரை பொறுமை காப்போம்! பக்காத்தான் அரசாங்கம் அவர்களை விடாது என்பது மட்டும் உறுதி!

கேள்வி - பதில் (82)

கேள்வி

கலைஞர் மறைவு பற்றி...........?

பதில்

எதிர்பார்த்தது தான்.   95 வயது வரை வாழ்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. கலைஞர் வாழ்ந்திருக்கிறார்.  கடந்த ஒரு வருடமாக அவர் வாழவில்லை.  மருத்துவர்களின் உதவியால் ஏதோ நகர்த்தப்பட்டிருக்கிறார்.  அவர் எழுதவில்லை, படிக்கவில்லை, பேசவில்லை என்றால் அவைகள் எல்லாம் அவரது இயல்பு வாழ்க்கை அல்ல.

அவரைப் பற்றியான பழைய ஞாபங்கள் கிளர்ந்து எழுகின்றன.  பராசக்தி படம் வந்த நேரம்.  சிவாஜி பேசிய அந்த வசனங்கள் அந்தக் கால பொடிசுகள் முதல் இளைஞர்கள் வரை அந்த வசனங்களைப் பேசிப் பேசி தங்களை சிவாஜி கணேசனாகவே நினைத்துக் கொண்டனர்!  அந்த வசனங்களைப் பேசியவர் முன்னணியில் நிற்கின்றாரா அல்லது எழுதியவர் முன்னணியில் நிற்கின்றாரா என்று பார்த்தால் கலைஞர் தான் முன்னணியில் நிற்கின்றார். காரணம் தொடர்ந்தாற் போல் வந்த அவருடைய படங்களான மனோகரா, திரும்பிப்பார், பணம் இன்னும் தொடர்ந்தாற் போல் வந்த குறிப்பாக இல்லற ஜோதியில் வந்த "அனார்கலி" நாடகம்,  "அசோக சக்கரவர்த்தி"  ஓரங்க நாடகம் மறக்க முடியாத இலக்கியங்கள்.  

சிவாஜி கணேசன் போய்க் கொண்டிருந்த வேகத்தில் கலைஞரும் திரைப்படம், அரசியல் என இரு வழிச் சாலையில் பயணம் செய்த கொண்டிருந்தார்! கலைஞர் வேகத்தில் குறையவில்லை. அந்த வேகம் கடைசிக் காலம் வரை அவரிடம் தொடர்ந்தது . அரசியலும், எழுத்தும் அவருடைய இரு கண்கள்! இரண்டுமே அவரிடமிருந்து பிரியவில்லை! கடந்த ஓராண்டைத் தவிர!

பராசக்தி திரைப்படத்தோடு அவருடனான எனது தொடர்பு விட்டுவிடவில்லை. அப்போது எனது நண்பர் சுகுமாறன் தமிழ் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அவர் கலைஞரின் புத்தகங்களை விரும்பி வாசிப்பவர். அதனால் நானும் அவருடைய புத்தகங்களை "ஓசியில்" படிக்கும் வழக்கமுண்டு. வாங்கிப் படிக்கின்ற அளவுக்கு வயசும் போதாது,  காசும் இல்லை! அப்போது நான் படித்த, இப்போது எனது  நினைவுக்கு வருவது கலைஞர் எழுதிய "நான்சன்ஸ்",  "நேருவே திரும்பிப்போ!" புத்தகங்கள் மட்டுமே!  அவர் வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா, திரும்பிப்பார்  போன்ற திரைவசனங்களைப் படித்ததாக ஞாபகம் உண்டு, இப்போது என்னிடம் உள்ள அவருடைய புத்தகம் "நெஞ்சுக்கு நீதி" மட்டுமே! இப்போது என்னுடைய ரசனை மாறிவிட்டது. அதனால் அவ்வப்போது நாளிதழ்களில் வரும் கட்டுரைகளோடு சரி!

கலைஞர் தனது தமிழால் தமிழர்களைக் கட்டிப் போட்டவர். அவரது பேச்சால் தமிழ் இளைஞர்களை மயங்க வைத்தவர். தமிழ் மொழி தான் அவரது ஆயுதம்.  தமிழை வைத்து தமிழர்களைத் தனது வசம் இழுத்தவர். இந்த அளவுக்குத் தமிழை வேறு யாரும் பயன் படுத்தியதில்லை. அதனால் தான் தமிழ் என்றால் கலைஞர் என்று நாம் சொல்லுகிறோம்.

இந்த நூற்றாண்டில் தமிழ் என்றால் கலைஞர் தான்! மறக்க முடியாத மனிதர். தமிழக சரித்திரத்தில் அவருக்கு நிரந்தர இடம் உண்டு, 

அவருடைய மறைவு அவருடைய குடும்பத்திற்கு மட்டும் அல்ல தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பு.

அனுதாபம் என்பதைத் தவிர, வேறு என்ன சொல்ல?


 

Sunday, 5 August 2018

சாமிவேலுவின் வழியில் நஜிப்...!

சாமிவேலு தனது  அரசியல் அஸ்தமன காலத்தில் ஒரு பேரிடரைச் சந்தித்தார். அவர் ம.இ.கா. கூட்டங்களுக்கோ அல்லது அரசியல் கூட்டங்களுக்கோ அல்லது தேர்தல் பரப்புரைகளுக்கோ கலந்து கொண்டால் அது தோல்வியில் முடியும் என்பதாக ஒரு கருத்து நிலவியது. அவர் எத்துணை வலிமையான பேச்சாளர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இருந்தாலும் அரசியலின் கடைசி காலத்தில் அவரால் பேர் போட முடியவில்லை. அவரை ஒரு கூட்டத்தில் பார்த்தாலே அது "விளங்காது" என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவருடைய செல்வாக்கு கரைந்து போனது! இப்போதெல்லாம் அவரை நாம் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை.

இப்போது நஜிப்பின் நிலமையும் அதே தான் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இப்போது தான் ஆரம்பம். உடனடியாகத் தெரியாவிட்டாலும்  போகப் போக நாமே அதனைப் பேச ஆரம்பித்து விடுவோம். 

இப்போது நடைப்பெற்ற  சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில்  பாரிசான் நேசனல் தோல்வி கண்டது ஒன்றும் ஆச்சரியம்  அல்ல. இது எதிர்பார்த்தது தான். இன்னும் இரண்டு இடைத் தேர்தல்கள். இங்கும் பாரிசான் நேசனல் தோல்வியைத் தழுவும் என்று தான் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் நஜிப் பரப்புரை செய்ய வருவார். மீண்டும் மீண்டும் நான் குற்றவாளி அல்ல என்று தான் பேசுவார். மகாதிரை குற்றம் சொல்லியாக வேண்டும்.  நிதி அமைச்சரைக் குற்றம் சொல்லியாக வேண்டும். இப்போதைய ஆட்சி சரியல்ல என்று குற்றம் சொல்ல வேண்டும். ஆனால் பிரதமர் மகாதிரோ தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டே நல்ல பேயர் வாங்கிவிடுவார்!  மக்கள் யாரும் நஜிப்பை நம்பப் போவதில்லை.  அப்புறம் அம்னோ கட்சியினரே நஜிப்பை புறம் தள்ளி விடுவர். "நீங்கள் இனி பிரச்சாரத்திற்கு வந்து விட வேண்டாம்! நீங்கள் வந்தால் தோல்வி நிச்சயம்!" என்பதாக அவரை ராசி இல்லாத மனிதராக ஆக்கி விடுவர்!

இது நடக்கும்.  இருவருக்கும்   ஒரே ராசி தான்! அது தான் "ஊழல்" என்னும் ராசி!  இருவருமே முடி சூடா மன்னராக வாழ்ந்தவர்கள்; மக்களின் பொதுப் பணத்தில், தங்களின் பணத்தில் அல்ல! 

அரசியலில் ஊழல் செய்தவர்களின் கடைசி காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இவர்கள் இருவருமே போதும்!  வேறு சான்றுகள் வேண்டாம்!