Wednesday 8 August 2018

கல்வித் தோட்டம் ...காலியா....!

பேரா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 2000  ஏக்கர் நிலம் ..... அடடா!.... இருக்கிறதா, இல்லையா என்று கூட தெரியவில்லை இப்போதைய நடப்பு அரசாங்கத்திற்கு!

அதென்னவோ ம.இ.கா. காரனுக்கு எதனைக் கொடுத்தாலும் ஒன்று: மறைத்து விடுவான்! அல்லது விழுங்கி விடுவான்!  இந்த 2000 ஏக்கர் நிலத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவும் இல்லை! புரியவும் இல்லை!

சீனர்களுக்கும் தான் நிலத்தைக் கொடுத்தார்கள். மலாய்க்கார்களுக்கும் தான் நிலத்தைக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் பள்ளி வளர்ச்சிக்காகத் தான்  கொடுத்தார்கள். இவர்களுக்கும் கல்வி வளர்ச்சிக்காகத் தான் கொடுத்தார்கள்.  சீனப்பள்ளிகளுக்கு அந்த நிலங்கள் முக்கியம். மலாய்ப் பள்ளிகளுக்கும் அந்த நிலங்கள் முக்கியம். நிலம் எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதே - ஏன் அடுத்த நிமிடமே - சீனர்களும், மலாய்க்காரர்களும் நிலத்தை எடுத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  இப்போது அங்கு செம்பனை நட்டு அறுவடையும் ஆரம்பித்து விட்டன. 

அந்தோ! நமது ம.இ.கா. சிங்கங்கள் என்ன செய்தார்கள் என்று யாருக்கும் புரியவில்லை! அந்த நிலத்தை கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்களாம். இப்போது கூட்டுறவு சங்கம் அந்த நிலத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம். இதுவும் கூட கூட்டுறவு சங்கத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் அந்த ம.இ.கா. சிங்கங்கள் "கப்சிப்" என்று வாயைப் பொத்திக் கொண்டிருக்கின்றன! எந்த ஒரு செய்தியும் வெளியே வரமாட்டேன் என்கிறது. வாயைத் திறக்கவில்லை என்றால் ஏதோ பெரிதாக பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது என்பது தான் பொருள்! அது தான் தெரியவில்லை!

இன்னொன்றும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ம.இ.கா. காரன் எதனையும் தனித்து நின்று செய்வதில்லை. கூடவே அம்னோகாரனையும் சேர்த்துக் கொள்வது! காரணம் அம்னோ உள்ளிருந்தால் பிரச்சனைகளைத் திசை திருப்பலாம்! எந்த உண்மையும் வெளி வராது.  அம்னோவின் பேரைச் சொன்னால் ம.இ.கா. வுக்கு ஒரு பாதுகாப்பு! இவனும் திருடன் அவனும் திருடன்! ஒருவன் பெரிய திருடன்! இன்னொருவன் சிறிய திருடன்! சிறிய திருடனுக்குக் கோடிகள் கிடைத்தால் போதும்! அப்படி என்றால் பெரிய திருடனுக்கு....?

நமது இந்திய சமூகம் படிக்காதவனை எல்லாம் பதவியில் வைத்து நாறிப் போன சமூகம்! குண்டர் கும்பல்கள் பதவியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் நேரிடையாகவே அனுபவித்திருக்கிறோம்! இன்னும் அவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது!

இப்போதைக்கு கல்வித் தோட்டம் காலியா அல்லது தோல்வியா என்பதைக் கூடிய சீக்கிரம் தெரிந்து கொள்வோம்! அதுவரை பொறுமை காப்போம்! பக்காத்தான் அரசாங்கம் அவர்களை விடாது என்பது மட்டும் உறுதி!

No comments:

Post a Comment