Sunday 5 August 2018

சாமிவேலுவின் வழியில் நஜிப்...!

சாமிவேலு தனது  அரசியல் அஸ்தமன காலத்தில் ஒரு பேரிடரைச் சந்தித்தார். அவர் ம.இ.கா. கூட்டங்களுக்கோ அல்லது அரசியல் கூட்டங்களுக்கோ அல்லது தேர்தல் பரப்புரைகளுக்கோ கலந்து கொண்டால் அது தோல்வியில் முடியும் என்பதாக ஒரு கருத்து நிலவியது. அவர் எத்துணை வலிமையான பேச்சாளர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இருந்தாலும் அரசியலின் கடைசி காலத்தில் அவரால் பேர் போட முடியவில்லை. அவரை ஒரு கூட்டத்தில் பார்த்தாலே அது "விளங்காது" என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவருடைய செல்வாக்கு கரைந்து போனது! இப்போதெல்லாம் அவரை நாம் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை.

இப்போது நஜிப்பின் நிலமையும் அதே தான் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இப்போது தான் ஆரம்பம். உடனடியாகத் தெரியாவிட்டாலும்  போகப் போக நாமே அதனைப் பேச ஆரம்பித்து விடுவோம். 

இப்போது நடைப்பெற்ற  சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில்  பாரிசான் நேசனல் தோல்வி கண்டது ஒன்றும் ஆச்சரியம்  அல்ல. இது எதிர்பார்த்தது தான். இன்னும் இரண்டு இடைத் தேர்தல்கள். இங்கும் பாரிசான் நேசனல் தோல்வியைத் தழுவும் என்று தான் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் நஜிப் பரப்புரை செய்ய வருவார். மீண்டும் மீண்டும் நான் குற்றவாளி அல்ல என்று தான் பேசுவார். மகாதிரை குற்றம் சொல்லியாக வேண்டும்.  நிதி அமைச்சரைக் குற்றம் சொல்லியாக வேண்டும். இப்போதைய ஆட்சி சரியல்ல என்று குற்றம் சொல்ல வேண்டும். ஆனால் பிரதமர் மகாதிரோ தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டே நல்ல பேயர் வாங்கிவிடுவார்!  மக்கள் யாரும் நஜிப்பை நம்பப் போவதில்லை.  அப்புறம் அம்னோ கட்சியினரே நஜிப்பை புறம் தள்ளி விடுவர். "நீங்கள் இனி பிரச்சாரத்திற்கு வந்து விட வேண்டாம்! நீங்கள் வந்தால் தோல்வி நிச்சயம்!" என்பதாக அவரை ராசி இல்லாத மனிதராக ஆக்கி விடுவர்!

இது நடக்கும்.  இருவருக்கும்   ஒரே ராசி தான்! அது தான் "ஊழல்" என்னும் ராசி!  இருவருமே முடி சூடா மன்னராக வாழ்ந்தவர்கள்; மக்களின் பொதுப் பணத்தில், தங்களின் பணத்தில் அல்ல! 

அரசியலில் ஊழல் செய்தவர்களின் கடைசி காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இவர்கள் இருவருமே போதும்!  வேறு சான்றுகள் வேண்டாம்!


No comments:

Post a Comment