Saturday, 8 December 2018

அட! இதுவும் சரி தான் போலிருக்கு...!

கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் 2000 ஏக்கர் நில விவாகாரம் பற்றி இப்போது தான் வாயைத் திறந்திருக்கார் டான்ஸ்ரீ  வீரசிங்கம். (ம.இ.கா.வில் இவர் பெயர் தான் பிரபலம் அதனால் தான் இவர் பெயரைக் குறிப்பிடுவது புரிந்து கொள்ள உதவும்!)

நம்மைப் பொறுத்தவரை ம.இ.கா. வைப் பற்றிய நல்லண்ணம் நமது மக்களுக்கு எப்போதும் இருந்ததில்லை, ம.இ.கா. தலைவர்களைத் தவிர! கடந்த ஆட்சியின் போதும் இந்த நிலத்தை வைத்து இவர்கள் என்ன தான் செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு சில தினங்களுக்கு முன்னர் இந்த நிலத்தின் மூலம் ரி.ம. 7.00 லாபம் பெற்றதாக  செய்திகள் வந்தன! அதைக் கூட நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! காரணம் அவர்களின் தகுதி அவ்வளவு தான். ம.இ.கா.வினர் எந்தக் காலத்தில் தங்கள் அறிவைப் பயன் படுத்திருக்கிறார்கள் அவர்களைப்  பற்றி பெருமைப்பட? அவர்கள் ஞானசூனியங்கள் என்பது தான் நாம் அறிந்ததாயிற்றே!

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கொல்லைப்புற வழியாக எப்படி சம்பாதிப்பது என்பது மட்டும் தான்! ஆக, இந்த 2000 ஏக்கர் நிலத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இது நாள் வரை வாய்த் திறக்காதவர்கள் இப்போது வாய் திறந்திருக்கிறார்கள்!  அதுவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியினால்! இல்லாவிட்டால் அந்த நிலம் எங்கே என்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்!

விபரம் தெரியாமல் உளற வேண்டாம் என்று சொல்லக் கூடிய தைரியம் ம.இ.கா. வினருக்கு மட்டுமே உரியது என்று எடுத்துக் கொள்ளலாம்.  இது சாமிவேலு காலந்தொட்டே அவர்களுக்குக் கிடைத்த தைரியம். அந்தத் தொடர்ச்சி இன்னும் அறுபடவில்லை! 

இவர்களின் கணக்கறிக்கையைக் காண இவர்களின் கணக்காளரின்  அலுவலகத்தைப் போனால் எல்லாம் விலாவாரியாகச் சொல்லி விடுவார்களாம்!  

சீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம், மலாய்க்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் எல்லாம் அறுவடைக்குத் தயாராகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.  ம.இ.கா. வினருக்குக் கொடுத்த நிலம் .....படித்தவன் பாவம் செய்தால் போவான், போவான் ஐயோன்னு  போவான் ...என்பது பாரதி சொன்னது! நான் சொல்லவில்லை.

இவர்கள் ஐயோன்னு மட்டும் போக மாட்டார்கள், இவர்கள் குடும்பமே ஐயோன்னு போகும்!

எது எப்படி இருப்பினும் - எவ்வளவு "திறமைசாலிகளாக" இருந்தாலும்  எம்.ஏ.சி.சி. க்கும் ஒரு காலம் வரும் என்று பொறுத்திருப்போம்!

அது வரை இதுவும் சரி தான் போலிருக்கு!

Friday, 7 December 2018

இது தாண்டா ஆளுங்கட்சி...!

சமீபத்தில் ஊடகங்களில் வந்த செய்தி.

ஜொகூர் மாநிலத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள்  முன்னைய அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளிகள் கட்டப்பட்டு விட்டனவே தவிர அந்த இரு பள்ளிகளுமே இன்னும் பயன்படுத்தப்படவில்லை! வருகின்ற புதிய ஆண்டிலும் பயன்படுத்த முடியுமா என்பதும் உறுதியில்லை!

காரணம் ஒரு பள்ளிக்கூடம் கட்டி முடித்து நகராண்மைக் கழகத்தின் அனுமதிக்காகக்  காத்துக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டே அனுமதியில்லை என்றால் இந்த ஆண்டு மட்டும் அனுமதி கிடைக்குமா? இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா?  கட்டடத்தைக் கட்டுபவர்கள் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட குத்தகையாளர்கள். வெளியார்கள் குத்தகை எடுக்க அனுமதியில்லை.  அப்படியிருக்க பள்ளிக் கட்டடத்தின் கட்டடம் ஏன் தரமானதாக அமையவில்லை? கட்டடம் கட்டி முடித்தாயிற்று. குத்தகையாளர் பணத்தை வாங்கிவிட்டார். கமிஷன் வாங்க வேண்டியவர்கள் வாங்கிவிட்டார்கள்! இன்னும் யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்?  பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது  என்பது கல்வி அமைச்சுக்குத் தெரியாதா? அந்த அளவுக்கா அவர்கள் முட்டாள்களாக, மடையர்களாக  இருந்திருக்கிறார்கள்?

சரி,  இன்னொரு பள்ளிக்கூடத்திற்கு வருவோம். புதிய பள்ளிக்கூடம் கட்டிவிட்டார்கள். பள்ளிக்கூடம் தான் கட்டியிருக்கிறார்கள்.  பள்ளிக்கூடம் போவதற்கு எந்த சாலை  வசதிகளும் செய்து கொடுக்கவில்லை!  பஸ் எப்படி போகும்! கார் எப்படி போகும்! மோட்டார் சைக்கிள்கள் எப்படி போகும்! அல்லது மாணவர்கள் நடந்து போவதற்காவது பாதை வேண்டாமா! அடாடா! நினைத்தாலே புல்லரிக்கிறது! இப்படியெல்லாம் புத்திசாலிகள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது  உள்ளம் பூரிக்கிறது! அட, ஜொகூர் மாநிலத்தில் இப்படி எல்லாம் புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்றால்  சபா, சரவாக் மாநிலங்களில் எப்பேர்பட்ட புத்திசாலிகள் இருந்திருப்பார்கள்!

தமிழ்ப்பள்ளிகள் என்று நினைக்கும் போது நமக்கு உடனடியாக நினவுக்கு வருபவர் பாரிசான் அரசாங்கத்தில் துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் தான்!

என்ன செய்வது? அது தான் ஆளுங்கட்சியின் பலம்! மக்களை ஏமாற்றுவது தான் அவர்களின் பலம்! அதைப் பார்த்துக் கொண்டிருப்பது தான் நமது பலவீனம்!

Thursday, 6 December 2018

ஆலோசணை வழங்கலாம்...!

சீபீல்ட் ஆலய விவகாரம் தொடர்பில் பொது மக்கள் ஆலோசனை வழங்கலாம் - அதனை வரவேற்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறியிருப்பதை கருத்தில் கொண்டு இதனை நான் எழுதுகிறேன்.

அந்த ஆலயத்தில் நடந்த அசம்பாவிதங்களைக் கண்ணுற்று வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் இனக் கலவரங்களை ஆதரிக்க மாட்டேன்.  மே '69 கலவரத்தை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.  

இனக்கலவரத்தை பொது மக்கள் யாரும் விரும்புவதில்லை. இனக்கலவரத்தின் முக்கிய பொறுப்பாளிகள் அரசியல்வாதிகளே! அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பதவி சுகம் என்பது அவ்வளவு வலிமையானது! அதிலிருந்து விடுபடுவது என்பது சாத்தியமில்லை!

இந்த ஆலய பிரச்சனை என்பது இனக்கலவரம் அல்ல.  இது நில மேம்பாட்டாளர்கள் குண்டர் கும்பலை ஏவி விட்டு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இந்தக் கலவரம் குண்டர் கும்பலுக்கும் சம்பந்தப்பட்ட கோவில் பக்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதல் என்னும் ரீதியில் தான் நாம் பார்க்க வேண்டும். தங்களுடைய வழிப்பாட்டுத்தலம் அசிங்கப்படுத்தப் படுவதை, சிலைகள் உடைக்கப் படுவதை  எந்த ஒரு பக்தானாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, . அதனால் ஏற்பட்ட மோதல் தான் பின்னர் கலவரமாக வெடித்தது. 

காவல்துறையைப் பொறுத்தவரை இந்த ஆலய விவகாரம் என்ன என்பதை முன்னரே அறிந்தவர்கள்.  புதிது என்று  ஒன்றுமில்லை. கலவரம் வெடித்த போது அவர்கள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்திருப்பார்கள் என நம்பலாம். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வர நியாயமில்லை.

இது  வருந்தத்தக்க ஒரு கலவரம்.   ஆனால் இந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை ஏதோ குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது போல நடத்தக் கூடாது என்பதே நமது வேண்டுகோள். இதெல்லாம் நமக்கு முன்னரே ஏற்பட்ட அனுபவம். எது நடந்தாலும் அதற்கு இந்தியர்களே காரணம் என்னும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

பொது சொத்துக்களுக்குச் சேதம் என்றால் அந்தச்  சொத்துக்கள் யாருடையவை  என்பதும் முக்கியம். கார்களில் வந்தவர்கள் கலகக்காரர்கள் என்றால் அந்தக் கார்கள் ஏன் அங்கு வந்தன என்னும் கேள்வியும் எழுகின்றது. அவை பொது சொத்துக்களா? எது எப்படி இருப்பினும் நீதி நிலை பெற  வேண்டும்.  பக்தர்களை பக்தர்களாகப் பார்க்க வேண்டும். குண்டர் கும்பலை குண்டர்களாகப்  பார்க்க வேண்டும்.

உணர்வுகளைத் தூண்டும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு காவல்துறை  கண்காணிக்க வேண்டும்.

இதுவே நம் ஆலோசனை.