Thursday 6 December 2018

ஆலோசணை வழங்கலாம்...!

சீபீல்ட் ஆலய விவகாரம் தொடர்பில் பொது மக்கள் ஆலோசனை வழங்கலாம் - அதனை வரவேற்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறியிருப்பதை கருத்தில் கொண்டு இதனை நான் எழுதுகிறேன்.

அந்த ஆலயத்தில் நடந்த அசம்பாவிதங்களைக் கண்ணுற்று வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் இனக் கலவரங்களை ஆதரிக்க மாட்டேன்.  மே '69 கலவரத்தை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.  

இனக்கலவரத்தை பொது மக்கள் யாரும் விரும்புவதில்லை. இனக்கலவரத்தின் முக்கிய பொறுப்பாளிகள் அரசியல்வாதிகளே! அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பதவி சுகம் என்பது அவ்வளவு வலிமையானது! அதிலிருந்து விடுபடுவது என்பது சாத்தியமில்லை!

இந்த ஆலய பிரச்சனை என்பது இனக்கலவரம் அல்ல.  இது நில மேம்பாட்டாளர்கள் குண்டர் கும்பலை ஏவி விட்டு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இந்தக் கலவரம் குண்டர் கும்பலுக்கும் சம்பந்தப்பட்ட கோவில் பக்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதல் என்னும் ரீதியில் தான் நாம் பார்க்க வேண்டும். தங்களுடைய வழிப்பாட்டுத்தலம் அசிங்கப்படுத்தப் படுவதை, சிலைகள் உடைக்கப் படுவதை  எந்த ஒரு பக்தானாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, . அதனால் ஏற்பட்ட மோதல் தான் பின்னர் கலவரமாக வெடித்தது. 

காவல்துறையைப் பொறுத்தவரை இந்த ஆலய விவகாரம் என்ன என்பதை முன்னரே அறிந்தவர்கள்.  புதிது என்று  ஒன்றுமில்லை. கலவரம் வெடித்த போது அவர்கள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்திருப்பார்கள் என நம்பலாம். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் வர நியாயமில்லை.

இது  வருந்தத்தக்க ஒரு கலவரம்.   ஆனால் இந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை ஏதோ குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது போல நடத்தக் கூடாது என்பதே நமது வேண்டுகோள். இதெல்லாம் நமக்கு முன்னரே ஏற்பட்ட அனுபவம். எது நடந்தாலும் அதற்கு இந்தியர்களே காரணம் என்னும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

பொது சொத்துக்களுக்குச் சேதம் என்றால் அந்தச்  சொத்துக்கள் யாருடையவை  என்பதும் முக்கியம். கார்களில் வந்தவர்கள் கலகக்காரர்கள் என்றால் அந்தக் கார்கள் ஏன் அங்கு வந்தன என்னும் கேள்வியும் எழுகின்றது. அவை பொது சொத்துக்களா? எது எப்படி இருப்பினும் நீதி நிலை பெற  வேண்டும்.  பக்தர்களை பக்தர்களாகப் பார்க்க வேண்டும். குண்டர் கும்பலை குண்டர்களாகப்  பார்க்க வேண்டும்.

உணர்வுகளைத் தூண்டும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு காவல்துறை  கண்காணிக்க வேண்டும்.

இதுவே நம் ஆலோசனை.

No comments:

Post a Comment