Friday 7 December 2018

இது தாண்டா ஆளுங்கட்சி...!

சமீபத்தில் ஊடகங்களில் வந்த செய்தி.

ஜொகூர் மாநிலத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள்  முன்னைய அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளிகள் கட்டப்பட்டு விட்டனவே தவிர அந்த இரு பள்ளிகளுமே இன்னும் பயன்படுத்தப்படவில்லை! வருகின்ற புதிய ஆண்டிலும் பயன்படுத்த முடியுமா என்பதும் உறுதியில்லை!

காரணம் ஒரு பள்ளிக்கூடம் கட்டி முடித்து நகராண்மைக் கழகத்தின் அனுமதிக்காகக்  காத்துக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டே அனுமதியில்லை என்றால் இந்த ஆண்டு மட்டும் அனுமதி கிடைக்குமா? இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா?  கட்டடத்தைக் கட்டுபவர்கள் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட குத்தகையாளர்கள். வெளியார்கள் குத்தகை எடுக்க அனுமதியில்லை.  அப்படியிருக்க பள்ளிக் கட்டடத்தின் கட்டடம் ஏன் தரமானதாக அமையவில்லை? கட்டடம் கட்டி முடித்தாயிற்று. குத்தகையாளர் பணத்தை வாங்கிவிட்டார். கமிஷன் வாங்க வேண்டியவர்கள் வாங்கிவிட்டார்கள்! இன்னும் யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்?  பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது  என்பது கல்வி அமைச்சுக்குத் தெரியாதா? அந்த அளவுக்கா அவர்கள் முட்டாள்களாக, மடையர்களாக  இருந்திருக்கிறார்கள்?

சரி,  இன்னொரு பள்ளிக்கூடத்திற்கு வருவோம். புதிய பள்ளிக்கூடம் கட்டிவிட்டார்கள். பள்ளிக்கூடம் தான் கட்டியிருக்கிறார்கள்.  பள்ளிக்கூடம் போவதற்கு எந்த சாலை  வசதிகளும் செய்து கொடுக்கவில்லை!  பஸ் எப்படி போகும்! கார் எப்படி போகும்! மோட்டார் சைக்கிள்கள் எப்படி போகும்! அல்லது மாணவர்கள் நடந்து போவதற்காவது பாதை வேண்டாமா! அடாடா! நினைத்தாலே புல்லரிக்கிறது! இப்படியெல்லாம் புத்திசாலிகள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது  உள்ளம் பூரிக்கிறது! அட, ஜொகூர் மாநிலத்தில் இப்படி எல்லாம் புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்றால்  சபா, சரவாக் மாநிலங்களில் எப்பேர்பட்ட புத்திசாலிகள் இருந்திருப்பார்கள்!

தமிழ்ப்பள்ளிகள் என்று நினைக்கும் போது நமக்கு உடனடியாக நினவுக்கு வருபவர் பாரிசான் அரசாங்கத்தில் துணைக்கல்வி அமைச்சராக இருந்த கமலநாதன் தான்!

என்ன செய்வது? அது தான் ஆளுங்கட்சியின் பலம்! மக்களை ஏமாற்றுவது தான் அவர்களின் பலம்! அதைப் பார்த்துக் கொண்டிருப்பது தான் நமது பலவீனம்!

No comments:

Post a Comment