Friday, 5 April 2019

நூறு நாளில் முடிந்ததா..?

ரந்தாவ்  இடைத் தேர்தல் பரப்புரையில் மனிதவள அமைச்சர் குலசேகரன் ஓர் அதிர்ச்சி தகவலை  வெளியிட்டிருக்கிறார்!

ஆம்! பக்காத்தான்  அரசாங்கம் தனது 14-வது பொதுத் தேர்தலில் வாக்களித்தபடி முதல் நூறு நாள்களில் பல வாக்குறுதிகளை  நிறைவேற்றிவிட்டதாக  குலசேகரன் கூறியிருக்கிறார்.  ஏதோ ஒரு சில இருக்கலாம் அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும்  என்கிறார் அமைச்சர்!

சரி! பக்காத்தான் அரசாங்கம் அப்படியே அனைத்தையும் நீறைவேற்றியதாகவே  இருக்கட்டும்.  நமக்கு ஆட்சேபனை இல்லை! 

ஆனால் நாங்கள் இன்னும் காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருக்கிறோமே  இந்தியர்களின் குடியுரிமை, அது என்ன வாயிற்று என்று கேட்பதில் நியாயம் இருக்கத்தான் தானே செய்கிறது. என்னய்யா இது! அறுபது வயதற்கு மேல் உள்ளவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கும் என்னும் அறிவிப்புக்குப் பின்னர்   ஒன்றையும் காணோமே!

அறுபது வயதுக்கு மேல் அவர்கள் குடுமபத்திற்கு உழைத்து சம்பாதித்துக் கொடுக்கப் போகிறார்களா! அறுபது வயது கீழ் உள்ளவர்களுக்கு எந்தக் காலத்தில்  குடியுரிமை  கிடைக்கப் போகிறது என்கிற  அறிவிப்பை ஒன்றையும் காணோமே! இளம் வயதினருக்குத் தானே குடியுரிமை என்பது முக்கியம். அவர்களுக்குத் தானே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய  கடப்பாடு இருக்கின்றது. அவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் என்ன செய்வார்கள்?  இன்று இந்திய இளைஞரிடையே உள்ள  வன்முறைகளுக்கெல்லாம் யார் காரணம்?  அவனுக்கென்று வேலை இருந்தால் அவன் ஏன் தவறான வழிக்குச் செல்லுகிறான்? மற்ற இன இளைஞர்களைப் போல அவனும் கௌரவமாக வாழத்தானே  செய்வான்!

 குலசேரகன் சொன்ன செய்தியில் இன்னொரு ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.  அறுபது வயதுக்கு மேல் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் நூறு நாள்களில் குடியுரிமை கொடுத்து விட்டோம்.  அதனைத் தான் எங்களது தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். அதனைச் செய்து விட்டோம். அத்தோடு எங்களது கடமை முடிந்தது என்று சொல்ல வருகிறாரா குலசேகரன்?

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை தான் முதலாவது பிரச்சனையாக முன் நிற்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்காதவரை இந்த நூறு நாள் வாக்குறுதி என்பது தீராத பிரச்சனை அதனை நமது அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆக, இந்தியர்களைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை இன்னும் தீரவில்லை! அந்த நூறு நாள் வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை!

இதனை அமைச்சர் புரிந்து கொள்வாராக!

 

Thursday, 4 April 2019

கேள்வி - பதில் (97)

கேள்வி

வருகின்ற தமிழகத் தேர்தலில் மக்களின் மன நிலைமை எப்படி இருக்கும்?

பதில்

வழக்கம் போல் தான் இருக்கும் என்றே  கணிக்கப்படுகிறது. திராவிடக் கட்சிகளை விட்டு மக்கள் எங்கும் போய்விடக் கூடாது என்பதில் திராவிடக் கட்சிகள் கவனமாக இருக்கின்றன. 

இன்னொரு பக்கம் திராவிடக் கட்சிகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று  தமிழர் தேசியக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.

மக்களோ யார் இலஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தான் வாக்கு  என்று வழக்கம் போல தேர்தலை மிக  எளிதாக எடுத்துக் கொள்ளுகின்றனர்! இலஞ்சம் என்றால் ஆயிரம், ஐயாயிரம் இல்லை! பத்தாயிரம் வரை பேரம் பேசப்படுகிறது என்கிறார்கள்!  ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால்?  எண்ணிப் பாருங்கள்.  வெறும் நூறு நூறு ரூபாய் நோட்டுக்களையே பார்ப்பாவர்களுக்கு .....நிலைமை என்ன?

பெரும்பான்மையான  தமிழ் மக்களை திராவிடக் கட்சிகள்  அவர்களது ஆட்சியில் தொடர்ந்து  வறுமையில் வைத்திருக்கின்றனர்.  குடிகாரர்களாய் வைத்திருக்கின்றனர். இது தான் திராவிடக் கட்சிகளின் திறமை. இப்படி இருந்தால் தான் தமிழர்கள் தொடர்ந்து  தங்களை ஆதரிப்பார்கள்  என்கிற உள் நோக்கம் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றது!

இலஞ்சத்தை வைத்தே இது நாள் வரை ஆட்சியிலிருந்தவர்கள் திராவிடக் கட்சியினர்!  இலஞ்சம் அவர்களுக்குத் தொடர்ந்து கை கொடுக்கும் என்று இன்னும் நம்புகின்றனர். பழைய தலைமுறை "உதய சூரியன், இரட்டை இலை"  என்று பழக்கப்படுத்திக் கொண்டனர்!   புதிய தலைமுறை தான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.  அத்தோடு தமிழகத்தில் சமீப காலங்களில்  ஏற்பட்ட பல போராட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை  ஏதேனும் மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வருமா  என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மக்கள் மன நிலையில்  கொஞ்சமாவது  மாற்றம் ஏற்படும் என்றே தோன்றுகிறது.

இனி திராவிடக் கட்சிகள் நூறு விழுக்காடு ஆட்சியினை கொண்டு வர இயலாது! இங்கும் இனி கூட்டாட்சி என்கிற நிலை தான் ஏற்படும்!

இது கௌரவமா...?

நமது தமிழ்ப்பள்ளிகள்  பல சாதனைகள் புரிகின்றன.

அதுவும் நாடளவில் மட்டும் அல்ல உலக அளவிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர். அனைத்தும் அறிவியல் போட்டிகள். அறிவியலில் பங்கு பெற்று தங்கப் பதக்கங்களை வெல்வது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. உலக நாடுகளில் உள்ள பல பள்ளிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. அவைகளோடு போட்டிப் போட்டு பதக்கங்களை வெல்வது என்பது மிகவும் போற்றத்தக்கது.

இந்த நேரத்தில் பல்ளி ஆசிரியர்களையும் நாம் நினவு கூறுகிறோம். அவர்கள் தங்களின் கடின உழைப்பைக் கொடுக்கின்றனர். மாணவர்களுக்குத்  தூண்டுகோளாக இருக்கின்றனார்.  த்மிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர். இந்த மாணவர்களில் பலர் நாளை மருத்துவர்களாக வரலாம் விஞ்ஞானிகளாக வரலாம். அல்லது இன்னும் பல கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.  எதுவும் நடக்கலாம்!

இந்த நேரத்தில் நாம் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ஏன் இந்திய இயக்கங்களாகவே இருக்கின்றன?  அப்படி  என்றால்  கல்வி  அமைச்சு, இந்த  மாணவர்களை, நாட்டிற்குப்  பெருமை  சேர்த்த இந்த  மணவர்களை, உதாசீனப் படுத்துகிறதா என்னும் கேளவி எழுவதை மறுப்பதற்கில்லை.  

நமக்குத் தெரிந்தவரை இந்திய இயக்கங்கள் தான் இந்த மாணவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தைக்  கொடுக்கின்றன. பாரிசான் கட்சி ஆட்சியிலும் இது தான் நடந்தது.  இப்போது  பக்காத்தான் கட்சியின்  ஆட்சியிலும் அது தான் நடக்கிறது. 

சமீபத்தில்  நடந்த  - மாணவர்களைக் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு ஒன்றில் - மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர்   நீர்வளம்,  நிலம் மற்றும்  இயற்கைவளத் துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். 

டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்த மாணவர்களைக் கல்வி அமைச்சு ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது தான் எனது வருத்தம். இங்குத் தலைமை தாங்க வேண்டியவர் கல்வி அமைச்சர் அல்லது துணைக் கல்வி அமைச்சர். துணைக் கல்வி அமைச்சார் ஏன்றால் அது தான் இந்த மாணவர்களுக்குச் சரியான அங்கீகாரம். கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமையை ஏற்றுக் கொண்டது என்பது பொருள். அதைத்தான் நான்  விரும்புகிறேன். 

 துணைக் கல்வி அமைச்சர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத வரை கல்வி அமைச்சு இந்த மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கவில்லை என்று சொல்லாமல்  சொல்லுகிறார்கள்!

அது வரை நாம் தான்  ஊர் கூடி கும்மியடித்துக் கொண்டு இருக்க வேண்டும்!