Friday 5 April 2019

நூறு நாளில் முடிந்ததா..?

ரந்தாவ்  இடைத் தேர்தல் பரப்புரையில் மனிதவள அமைச்சர் குலசேகரன் ஓர் அதிர்ச்சி தகவலை  வெளியிட்டிருக்கிறார்!

ஆம்! பக்காத்தான்  அரசாங்கம் தனது 14-வது பொதுத் தேர்தலில் வாக்களித்தபடி முதல் நூறு நாள்களில் பல வாக்குறுதிகளை  நிறைவேற்றிவிட்டதாக  குலசேகரன் கூறியிருக்கிறார்.  ஏதோ ஒரு சில இருக்கலாம் அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும்  என்கிறார் அமைச்சர்!

சரி! பக்காத்தான் அரசாங்கம் அப்படியே அனைத்தையும் நீறைவேற்றியதாகவே  இருக்கட்டும்.  நமக்கு ஆட்சேபனை இல்லை! 

ஆனால் நாங்கள் இன்னும் காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டிருக்கிறோமே  இந்தியர்களின் குடியுரிமை, அது என்ன வாயிற்று என்று கேட்பதில் நியாயம் இருக்கத்தான் தானே செய்கிறது. என்னய்யா இது! அறுபது வயதற்கு மேல் உள்ளவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கும் என்னும் அறிவிப்புக்குப் பின்னர்   ஒன்றையும் காணோமே!

அறுபது வயதுக்கு மேல் அவர்கள் குடுமபத்திற்கு உழைத்து சம்பாதித்துக் கொடுக்கப் போகிறார்களா! அறுபது வயது கீழ் உள்ளவர்களுக்கு எந்தக் காலத்தில்  குடியுரிமை  கிடைக்கப் போகிறது என்கிற  அறிவிப்பை ஒன்றையும் காணோமே! இளம் வயதினருக்குத் தானே குடியுரிமை என்பது முக்கியம். அவர்களுக்குத் தானே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய  கடப்பாடு இருக்கின்றது. அவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் என்ன செய்வார்கள்?  இன்று இந்திய இளைஞரிடையே உள்ள  வன்முறைகளுக்கெல்லாம் யார் காரணம்?  அவனுக்கென்று வேலை இருந்தால் அவன் ஏன் தவறான வழிக்குச் செல்லுகிறான்? மற்ற இன இளைஞர்களைப் போல அவனும் கௌரவமாக வாழத்தானே  செய்வான்!

 குலசேரகன் சொன்ன செய்தியில் இன்னொரு ஆபத்தும் ஒளிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.  அறுபது வயதுக்கு மேல் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் நூறு நாள்களில் குடியுரிமை கொடுத்து விட்டோம்.  அதனைத் தான் எங்களது தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். அதனைச் செய்து விட்டோம். அத்தோடு எங்களது கடமை முடிந்தது என்று சொல்ல வருகிறாரா குலசேகரன்?

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை தான் முதலாவது பிரச்சனையாக முன் நிற்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்காதவரை இந்த நூறு நாள் வாக்குறுதி என்பது தீராத பிரச்சனை அதனை நமது அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆக, இந்தியர்களைப் பொறுத்தவரை குடியுரிமை பிரச்சனை இன்னும் தீரவில்லை! அந்த நூறு நாள் வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை!

இதனை அமைச்சர் புரிந்து கொள்வாராக!

 

No comments:

Post a Comment