Sunday, 4 August 2019

நமக்குத் தேவை சமுதாய நலன்..!

நமது நாட்டில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் பத்திரிக்கைகளில்  வாசகர்களால், அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஒன்று அடுத்த பிரதமர்:  பிரதமர் மகாதிர் ஒப்புக் கொண்டது போல எப்போது அன்வாருக்கு அவர் வழி விடுவார் என்பது பற்றி அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள, ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர், பொது மக்கள் அனைவரும் ஒட்டி, வெட்டி பேசி வருகின்றனர்!  இது அனைத்து மலேசியர்களுக்கான ஒரு பிரச்சனை. நல்லது கெட்டது பற்றி விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

இரண்டாவது இந்திய சமூகம் பற்றியது.  மித்ரா நிதி ஒதுக்கிடு. முன்பு பாரிசான் ஆட்சியில் இதனை செடிக் என்று அழைத்தார்கள். பெயர் தான் வேறு. மற்றபடி நோக்கம் எல்லாம் ஒன்று தான். 

இந்திய சமுகத்தைப் பொறுத்தவரை நமக்கு மித்ரா தான் முக்கியமாகத் தெரிகிறது.

காரணம் இந்திய சமூகம் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது. செடிக் அமைக்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் சரியாகத்தான் இருந்தது. இந்தியர் முன்னேற்றம் என்பது தான் அதன் சுருக்கம்.  ஆனால் அது ஆர்மபித்து ஒரு சில நாள்களிலேயே  அது ம.இ.கா. கொள்ளையர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டது. அதன் பின்னர் அது காணாமல் போய் விட்டது!  இந்தியர்களின் நலன் காற்றில் பறந்து விட்டது!

இப்போது புதிய  பக்காத்தான் அர்சாங்கம்  அதே காரணங்களுக்காக - இந்தியர் நலன் காக்க - மித்ரா என்னும் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இந்த முறை அது அதன் நோக்கத்திலிருந்து தவறக் கூடாது என்பதில்  அனவருமே மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.  ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பொது மக்களும் இப்போது இந்த நிதி ஒதுக்கீட்டில் ஆர்வங்காட்டுகின்றனர்.  இந்த நிதி இந்தியர்களுக்குப் போய்ச் சேருகின்றதா என்பதில் அரசியல்வாதிகள், ஊடகங்கள் அனைத்தும் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். 

பிரச்சனை இப்போது இதற்கு பொறுப்பு ஏற்றிருக்கும்  பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேள்விகளுக்கான பதிலைச் சொல்லாமல் மழுப்பலையே தனது பதிலாகச் சொல்லி வருகின்றார்! அவர் சொல்லுகின்ற பதிலே மித்ரா அதன் நோக்கத்தை நோக்கி நகரவில்லை என்பதைக் காட்டிக் கொடுக்கிறது!

ஏதும் தவறுகள் நடக்கின்றதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  அப்படி நடக்கக் கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். வேதமூர்த்தி சரியான பாதையில் தான் போகின்றாரா என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.  ஆனால் வரும்!

நாம் சொல்ல வருவதெல்லாம் இந்திய சமுதாயத்தின் நலன் முக்கியம். அவர்களின் பொருளாதார முன்னேற்றம் முக்கியம். அதனை நோக்கி மித்ரா செல்ல வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

நமக்கு வேண்டியது சமுதாய நலன்! தனிப்பட்ட மனிதரின் நலன் அல்ல!

Saturday, 3 August 2019

"மித்ரா" தப்புமா...!

அரசாங்கம் என்ன தான் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக பல நிதி ஒதுக்கீடுகளைச் செய்தாலும்  அது என்னவோ நம்மிடம் வந்து சேருவதில்லை!  என்ன சாபக்கேடோ தெரியவில்லை.  ஏதாவது  கோமாளிகள் இடை இடையே வந்து சேர்ந்து விடுகிறார்கள்! இந்தக் கோமாளிகள் எல்லாம் கோமான்களாக ஆக வேண்டும் எனும் வேட்கை இருப்பதால்  ஒதுக்கப்பட்ட பணம் நம்மை விட்டு ஒதுங்கிப்போய் விடுகிறது!

"செடிக்" தான் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது என்றால்  இப்போது "மித்ரா" வுக்கும் அதே நிலை தானா என்று யோசிக்க வேண்டியுள்ளது. உரியவர்கள் சரியான பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்கள். 

மித்ராவை பற்றை ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கான பதிலைச் சொல்ல அமைச்சர் வேதமூர்த்தி கடமைப்பட்டிருக்கிறார்.  அவர் வேறு ஒரு இயக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது அவர் தனது கடமையில் இருந்து தவறுகிறார் என்றே நினைக்க வேண்டியுள்ளது.

தவறுவது மட்டும் அல்ல ஏன் தடுமாறுகிறார் என்று நாமும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.  வேதமூர்த்தி நேர்மையான மனிதர் என்று பொதுவாகவே அவர் மீது ஓர் அபிப்பிராயம் உண்டு.  அப்படி ஓர் அபிப்பிராயத்தின் மீது நமக்கே கொஞ்சம் சந்தேகம் ஏற்பட வைக்கிறது அவரது நடவடிக்கை.

பொதுவாக அரசியல் என்றாலே நமக்குத் தெரியும்.  நேர்மையாளர்கள் குறைவாகவே இருப்பார்கள்!  இப்போது ஓர் நேர்மையற்ற  ஆட்சியை வீழ்த்தி  பக்காத்தான் கூட்டணியைப்  பதவியில் அமர்த்தியிருக்கிறோம். பதவிக்கு வந்தவ்ர்கள் உடனடியாக த்ங்களது கைவரிசையைக் காட்ட மாட்டார்கள்!  அத்ற்கெல்லாம் நாள் பிடிக்கும்! மற்றபடி இவர்கள் உத்தமர்கள் என்று நாம் நம்ப வேண்டியதில்லை! 

வேதமூர்த்தி புதிதாக ஓர் அரசியல் கட்சியை ஆர்ம்பித்திருக்கிறார். அவருக்கும் பணத் தேவை உண்டு. ஆனால் இதற்கும் அதற்கும் முடிச்சுப் போட தேவை இல்லை.  

ஆனால் கேள்வி எல்லாம் ஏன் இப்படி நம்மை யோசிக்க வைக்கிறார் என்பது தான்!  இயக்கங்கள், மன்றங்கள், அமைப்புக்கள். நிலையங்கள் - இப்படி எதுவாக இருந்தாலும் ஒருவரிடமே மொத்தமாக பல இலட்சங்கள், பல கோடிகள் என்றால் சந்தேகங்கள் வரத் தான் செய்யும்.  வாங்கியவர்கள் ஏற்கனவே "செய்திகளில்" அடிபட்டவர்கள்!  

நேரடியாக பணத்தை வெளியாக்க முடியாது என்பதிலும் சரியாக இல்லை. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு  எப்படிக் கடன் கொடுக்கப் போகிறீர்கள?  தொழிலை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு எப்படி உதவ முடியும்? அதனை நீங்கள் நேரடியாகத் தான் செய்ய முடியும். 

"மித்ரா" மூலம் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.  இந்த சமுதாயம் பயனுறும் என எதிர்பார்க்கிறோம்.  வெட்டிப்பேச்சுப் பேசிக் கொண்டும், நீயா நானா போட்டிப் போடவும்  இங்கு இடம் இல்லை! அதை நீதிமன்றத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

மித்ரா எந்தத் தடையும் இல்லாமல், தனது பணியைத் தொடர வேண்டும்!

Friday, 2 August 2019

ஏன் முடியாது...?

மித்ரா நிதியை நேரடியாக யாருக்கும் தர முடியாது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி  கூறியிருப்பதைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. 

முன்பு செடிக் நிர்வாகத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றிய போது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன என்பது வேதமூர்த்திக்குத் தெரியாது என்று அவர் சொன்னாலும் நாம் நம்ப தயாராக இல்லை.  இப்போது அதே நடைமுறையைத் தான் மித்ராவும் பின் பற்றும் என்று வேதா கூறுவது நமக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. 

முந்தைய நடைமுறையில் தவறுகள் நடந்தது என்றால் இன்றைய நடைமுறையில் அதனை எப்படி சரி செய்வது  என்று அமைச்சர் யோசித்திருக்க வேண்டும்.  இருபத்தெட்டு ஊழியர்களைக் கொண்டு இயங்கும் மித்ரா - அந்த மித்ரா ஊழியர்களிடம் எந்த அளவுக்கு அவர் ஆலோசனை பெற்றிருக்கிறார்?   அவர்களை வெறும் ஊழியர்களாக நினைக்காமல் அவர்களுக்கும் அறிவு உண்டு ஆற்றல் உண்டு என்று ஒரு தலைவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு வேளை அவர்கள் அதற்குத் தகுதி அற்றவர்கள் என்று  அவர் நினைத்திருக்கலாம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அமைச்சர் இப்போது பக்காத்தான் அரசாங்கத்தில் பணி புரிகிறார் என்று முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  மாநில அளவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்திருக்க வேண்டும்.  ஒவ்வொரு  மாநிலத்திற்குமான மித்ராவின் தேவை எவ்வளவு  என்பதை அவரது அலுவலகமே முடிவு செய்து, நிதி ஒதுக்கீடுகளை அவர்களுக்கான தேவைகளை ஒதுக்கியிருக்கலாம்.  களத்தில் இருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.   மக்களின் பிரச்சனைகளை அவர்கள் அறிந்தவர்கள். 

எல்லாக் குறை கூறல்களையும்  இப்போது அமைச்சர் மீதே விழுந்திருக்கிறது.  அவர் முன்பு பாரிசான் அரசாங்கம் செய்த  அதே தவறுகளை இவர் செய்திருக்கிறார். செடிக் நிதி என்பது ம.இ.கா. வின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களின் நோக்கம் வேறு.  திருட்டு மட்டுமே அவர்களது நோக்கம். இங்கு நோக்கமே வேறு.   நிதி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது தான். 

ஆனால் நினைத்தவாறு நிதி மக்களிடம் போய்ச் சேரவில்லை.  அமைச்சர் வேதமூர்த்தி சொல்லுகின்ற காரணங்கள் மக்களிடம் எடுபடாது.   அவரின் நேர்மை இப்போது கேள்விக்குறியாக உள்ளது. 

மேலும் மற்ற இந்திய அமைச்சர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் கைகோர்த்து செல்ல வேண்டும். சென்ற முறை ம.இ.கா. அவரைப் புறக்கணித்தது. ஆனால் அமைச்சர் இப்போது  பக்காத்தானைப் புறக்கணிக்கிறார்! 

உங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை.  ஆனால் இந்த சாமுதாயத்தைப் பற்றி எங்களுக்குக் கவலையுண்டு.  அதனால் முடியாது என்று சொல்லுவதை விட்டுவிட்டு எப்படி முடியும் என்பதை யோசியுங்கள்!

முடியும்! ஏன் முடியாது?