மித்ரா நிதியை நேரடியாக யாருக்கும் தர முடியாது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறியிருப்பதைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.
முன்பு செடிக் நிர்வாகத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றிய போது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன என்பது வேதமூர்த்திக்குத் தெரியாது என்று அவர் சொன்னாலும் நாம் நம்ப தயாராக இல்லை. இப்போது அதே நடைமுறையைத் தான் மித்ராவும் பின் பற்றும் என்று வேதா கூறுவது நமக்குச் சரியானதாகத் தோன்றவில்லை.
முந்தைய நடைமுறையில் தவறுகள் நடந்தது என்றால் இன்றைய நடைமுறையில் அதனை எப்படி சரி செய்வது என்று அமைச்சர் யோசித்திருக்க வேண்டும். இருபத்தெட்டு ஊழியர்களைக் கொண்டு இயங்கும் மித்ரா - அந்த மித்ரா ஊழியர்களிடம் எந்த அளவுக்கு அவர் ஆலோசனை பெற்றிருக்கிறார்? அவர்களை வெறும் ஊழியர்களாக நினைக்காமல் அவர்களுக்கும் அறிவு உண்டு ஆற்றல் உண்டு என்று ஒரு தலைவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள் அதற்குத் தகுதி அற்றவர்கள் என்று அவர் நினைத்திருக்கலாம்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். அமைச்சர் இப்போது பக்காத்தான் அரசாங்கத்தில் பணி புரிகிறார் என்று முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். மாநில அளவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்குமான மித்ராவின் தேவை எவ்வளவு என்பதை அவரது அலுவலகமே முடிவு செய்து, நிதி ஒதுக்கீடுகளை அவர்களுக்கான தேவைகளை ஒதுக்கியிருக்கலாம். களத்தில் இருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்களின் பிரச்சனைகளை அவர்கள் அறிந்தவர்கள்.
எல்லாக் குறை கூறல்களையும் இப்போது அமைச்சர் மீதே விழுந்திருக்கிறது. அவர் முன்பு பாரிசான் அரசாங்கம் செய்த அதே தவறுகளை இவர் செய்திருக்கிறார். செடிக் நிதி என்பது ம.இ.கா. வின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களின் நோக்கம் வேறு. திருட்டு மட்டுமே அவர்களது நோக்கம். இங்கு நோக்கமே வேறு. நிதி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது தான்.
ஆனால் நினைத்தவாறு நிதி மக்களிடம் போய்ச் சேரவில்லை. அமைச்சர் வேதமூர்த்தி சொல்லுகின்ற காரணங்கள் மக்களிடம் எடுபடாது. அவரின் நேர்மை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் மற்ற இந்திய அமைச்சர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் கைகோர்த்து செல்ல வேண்டும். சென்ற முறை ம.இ.கா. அவரைப் புறக்கணித்தது. ஆனால் அமைச்சர் இப்போது பக்காத்தானைப் புறக்கணிக்கிறார்!
உங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் இந்த சாமுதாயத்தைப் பற்றி எங்களுக்குக் கவலையுண்டு. அதனால் முடியாது என்று சொல்லுவதை விட்டுவிட்டு எப்படி முடியும் என்பதை யோசியுங்கள்!
முடியும்! ஏன் முடியாது?
No comments:
Post a Comment