நமது நாட்டில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் பத்திரிக்கைகளில் வாசகர்களால், அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒன்று அடுத்த பிரதமர்: பிரதமர் மகாதிர் ஒப்புக் கொண்டது போல எப்போது அன்வாருக்கு அவர் வழி விடுவார் என்பது பற்றி அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள, ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர், பொது மக்கள் அனைவரும் ஒட்டி, வெட்டி பேசி வருகின்றனர்! இது அனைத்து மலேசியர்களுக்கான ஒரு பிரச்சனை. நல்லது கெட்டது பற்றி விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
இரண்டாவது இந்திய சமூகம் பற்றியது. மித்ரா நிதி ஒதுக்கிடு. முன்பு பாரிசான் ஆட்சியில் இதனை செடிக் என்று அழைத்தார்கள். பெயர் தான் வேறு. மற்றபடி நோக்கம் எல்லாம் ஒன்று தான்.
இந்திய சமுகத்தைப் பொறுத்தவரை நமக்கு மித்ரா தான் முக்கியமாகத் தெரிகிறது.
காரணம் இந்திய சமூகம் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது. செடிக் அமைக்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் சரியாகத்தான் இருந்தது. இந்தியர் முன்னேற்றம் என்பது தான் அதன் சுருக்கம். ஆனால் அது ஆர்மபித்து ஒரு சில நாள்களிலேயே அது ம.இ.கா. கொள்ளையர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டது. அதன் பின்னர் அது காணாமல் போய் விட்டது! இந்தியர்களின் நலன் காற்றில் பறந்து விட்டது!
இப்போது புதிய பக்காத்தான் அர்சாங்கம் அதே காரணங்களுக்காக - இந்தியர் நலன் காக்க - மித்ரா என்னும் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முறை அது அதன் நோக்கத்திலிருந்து தவறக் கூடாது என்பதில் அனவருமே மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றனர். ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பொது மக்களும் இப்போது இந்த நிதி ஒதுக்கீட்டில் ஆர்வங்காட்டுகின்றனர். இந்த நிதி இந்தியர்களுக்குப் போய்ச் சேருகின்றதா என்பதில் அரசியல்வாதிகள், ஊடகங்கள் அனைத்தும் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
பிரச்சனை இப்போது இதற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேள்விகளுக்கான பதிலைச் சொல்லாமல் மழுப்பலையே தனது பதிலாகச் சொல்லி வருகின்றார்! அவர் சொல்லுகின்ற பதிலே மித்ரா அதன் நோக்கத்தை நோக்கி நகரவில்லை என்பதைக் காட்டிக் கொடுக்கிறது!
ஏதும் தவறுகள் நடக்கின்றதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அப்படி நடக்கக் கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். வேதமூர்த்தி சரியான பாதையில் தான் போகின்றாரா என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால் வரும்!
நாம் சொல்ல வருவதெல்லாம் இந்திய சமுதாயத்தின் நலன் முக்கியம். அவர்களின் பொருளாதார முன்னேற்றம் முக்கியம். அதனை நோக்கி மித்ரா செல்ல வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
நமக்கு வேண்டியது சமுதாய நலன்! தனிப்பட்ட மனிதரின் நலன் அல்ல!
No comments:
Post a Comment