Thursday, 5 December 2019

செல்வாக்கு மிக்க ஒரே மனிதர்..!

இன்று  நாட்டில் செல்வாக்கு மிக்க ஒரே மனிதர் என்றால் அவர் இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாயக் மட்டும் தான்!

ஒரு காலத்தில் இங்கும் அங்கும், நாடு நாடாய்,  ஓடிக் கொண்டும் ஒளிந்து கொண்டும் இருந்த ஜாகிர் நாயக் இப்போது இந்நாட்டில் ஓர் அரசரக்குரிய மரியாதையோடு நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்!

அது மட்டும் அல்ல.  வருங்காலங்களில் இந்நாட்டின் அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்தியும் அவரிடம் இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது!

பெர்லீஸ் மாநிலத்தின் முப்தி போன்றவர்கள் அவருக்குப் பக்க பலமாக இருப்பதும் அவருக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. அதே போல அம்னோவின் உள்ள சில தரப்பினர் அவரை ஆதரிப்பதும் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது!

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்நாட்டில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் - பூர்வீகமான மலாய்க்கார்களோ அல்லது இந்தியர்களோ, சீனர்களோ - இவர்கள் எல்லாக் காலங்களிலும் நாட்டின் சமாதானத்தையே, அமைதியையே விரும்புகின்றனர்.

கூர்ந்து கவனித்தால் நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்கள் வெளி நாட்டினரே. இவர்கள் தான் தங்களை  "மலாய்க்காரர்களை விட நாங்கள் தான் மலாய்க்காரர்கள்"  என்பதும் "இஸ்லாமை காக்க வந்த காவலர்கள்" என்பதும்  "மலாய் மொழியைக் காக்க வந்த மன்னவர்கள்"  என்பதும் இவர்களது செயல்பாடே!

அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக மலாய் மொழி காக்கப்பட வில்லையா,  இஸ்லாம் காக்கப்பட வில்லையா மலாய்க்காரர்களின் மாண்பு காக்கப்பட வில்லையா என்பது நமக்குத் தெரியும். ஆனால் எங்கிருந்தோ வந்த இவர்களுக்குத் திடீரென்று இவர்கள் தான் நாட்டைக் காப்பாற்ற வந்தவர்கள் போல வீர வசனம் பேசுவதும் அதனை சிலர் நம்புவதும் எப்படியோ ஒரு வேடிக்கை நடந்து கொண்டிருக்கிறது!

இவர்களின் வழியில் வந்தவர்கள் தான் ஜாகிர் நாயக்,  முகமது அஸ்ரி ஜைனல் அபிடின் போன்றவர்கள்.  இவர்களில் ஜாகிர் நாயக் ஒரு படி மேல்.  தன்னை இஸ்லாமிய அறிஞர் என்று கூறிக் கொள்ளும் இவர் தீவிரவாதம் இல்லாமல் இஸ்லாம் இல்லை என்று பேசுபவர்.  இப்படி பேசுவதால் பல இஸ்லாமிய நாடுகள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை!  

பல நாடுகள் இவரை ஆபத்தானவர் என்று சொன்னாலும் மலேசியா இவரை ஆபத்தற்றவர் என்று ஏற்றுக் கொண்டது இவரது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது இவர் மலேசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதராக விளங்குகிறார்!  வருங்காலங்களில் அரசியலிலும் இவர் பேர் போடலாம்! மலேசிய அரசியலில் எதுவும் நடக்கலாம்!

Wednesday, 4 December 2019

பண்பாடற்ற ஒரு மனிதர்...!

தேசிய முன்னணி  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய பண்பாடற்ற பேச்சு ஒன்று,  இன்று  இந்து சமயத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்,  நெற்றியில் பூசியிருந்த வீபூதி,  முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் அஸ்தியா  என்று நாடாளுமன்ற உறுப்பினர், தாஜூடின் அப்துல் ரகுமான் கிண்டலடித்திருப்பது  அவர் தனது பதவிக்குத் தகுதியானவர் தானா என்கிற சந்தேகமே நமக்கு எழுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரை இப்படி பிற மதங்களைக் கிண்டலடிப்பவர்கள் என்பது நாம் கேள்விப்படாதது. 

நாம் பல சமயத்தினரிடையே காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்து, கிறிஸ்துவம்,  பௌத்தம்,  பஹாய், இஸ்லாம் என பல சமயங்கள்.  கிண்டலடிப்பதற்கு எல்லா மதங்களிலும் ஏதோ ஒன்று உண்டு.  ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் மனம் நோகுமே என்கிற உயரிய பண்பாடு நம்மிடையே உள்ளதால் அப்படியெல்லாம் நாம் செய்வதில்லை.  

இப்படி நான் சொல்லுவது சாதாரண - சராசரியான மக்களிடையே உள்ள பண்பாடு.  மக்களிடையே எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல அரசியல்வாதிகள் செய்கின்ற விஷமத்தனமான பேச்சுக்கள் தான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 

தாஜூடினைப் பற்றி பேச நமக்கு ஒன்றுமே இல்லையா?  அல்லது அவருடைய சமயத்தைப் பற்றி பேச நமக்கு ஒன்றுமே இல்லையா? அல்லது அவருடைய சமயத்தைப் பற்றி யாரும் பேச முடியாது என்கிற துணிவில் அவர் அப்படிப் பேசுகிறாரா?  பேசுகின்ற உரிமை இருந்தால் கூட  பிற மதத்தினர் அப்படி பேச மாட்டார்கள் என்கிற உண்மயை அவர் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர் அப்படி பேசியதற்கு அவர் நாடாளுமன்றத்திலிருந்து இரண்டு நாள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி இரண்டு நாள்கள் என்பதெல்லாம் இவரைப் போன்ற தகுதியற்றவர்களுக்குப் போதுமானது அல்ல. 

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்று நாட்டை ஆளும் பெரும் மன்றமான நாடாளுமன்றம் நினைக்குமானால் ஒன்று அவர்களை முற்றிலுமாக  பதவியில் இருந்து நீக்க வேண்டும். அல்லது நீண்டகால இடை நீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டு. இதுவே நமது பரிந்துரை. முற்றிலுமாக இவர்கள் வாயை அடுக்குவதற்கு வேறு வழியில்லை.

பண்பாடற்றவர்களுக்கு இது தான் சரியான வழி!

Sunday, 1 December 2019

பிளவுகள் தீருமா...?

பிரதமர் மகாதிர்,  மீண்டும் மீண்டும் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லும் போதே ஏதோ வில்லங்கம் இருப்பதாகவே நமக்குத் தோன்றியதில் ஒன்றும் வியப்பில்லை!

அவர் பிரதமர் பதவியை இன்னும் ஒப்படைக்காமல் இருப்பதே பி.கே.ஆர். கட்சியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கம் தான் காரணம் என்பது இப்போது நமக்கு வெட்ட வெளிச்சமாகவே தோன்றுகிறது.

ஆமாம், பி.கே.ஆரில் ஏகப்பட்ட பிளவுகள் என்பதாக ஒவ்வொரு நாளும் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிளவுகளுக்குக் காரணம் டாக்டர் மகாதிர் இல்லை என்றாலும் அந்த பிளவுகளின் பின்னணியில் அவர் தான் இருக்கிறார் என்பதும் நமக்குப் புரிகிறது.

இன்றைய நிலையில் அன்வார் இப்ராகிம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பது தான் உண்மை.  இன்று அவர் பிரதமர் பதவி ஏற்றால் எல்லாப் பிளவுகளும் பறந்து போகும்! அவர் பதவியில் இல்லாத வரையில் பிளவுகள் இன்னும் அதிகமாகும்.  

கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளுக்குக் காரணமானவர்கள் அன்வார் பிரதமர் ஆகக் கூடாது - வரமாட்டார் என்றே நம்புகிறார்கள்.  இவர்கள் தான் டாக்டர் மகாதிரின் பலம்.   டாக்டர் மகாதிர்,  பதவியை ஒப்படைக்காமல்,  காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் கட்சியில் இன்னும் பிளவுகள் அதிகமாகும் என நம்புகிறார்.  பிளவுகள் அதிகமாகி பி.கே.ஆர். என்னும் கட்சியே இல்லாமல் போக வேண்டும் என்பது தான் அவரது கடைசி ஆசையாக இருக்க வேண்டும். அதன் மூலம் அன்வார் பிரதமர் ஆக முடியாத ஒரு சூழலை அவர் உருவாக்குகிறார்!

இருந்தாலும் தான் போகும் இடங்களிலெல்லாம் -  வெளி நாடுகளிலுள்ள நிருபர்களைச் சந்திக்கும் போதெல்லாம் -  தான் பிரதமர் பதவியை அன்வாரிடம் தான் ஒப்படைப்பேன் என்று திரும்பத் திரும்ப சொல்லுவதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே நமக்குப்படுகிறது! 

பி.கே.ஆர். கட்சியில் பிளவுகள் இன்னும் அதிகமாக வேண்டும் என்பதற்காகவே அவர் இன்னும் பதவியில் இருக்கிறார் என்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது! அன்வாரிடம் பிரதமர் பதவி இல்லாத வரை அவரால் கட்சியில் ஏற்படும் பிளவுகளை ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் உண்மை. அது நமக்கும் தெரியும், டாக்டர் மகாதிருக்கும் தெரியும். 

அன்வாரிடம் பிரதமர் பதவி ஒப்படைப்பு என்பது கட்சியில் பிளவுகள் எந்த அளவுக்குப் போகப் போகிறது என்பதைப் பொறுத்துத் தான் அமையும். இன்னும் பிளவுகள் அதிகமாக வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மகாதிர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்!

கட்சியில் பிளவுகள் ஏற்பட்டால் ஒழிய பிரதமர் மாற்றம் ஏற்பட வழியில்லை!