Tuesday, 2 June 2020

உணவில் சிக்கனம் தேவை!

சிக்கனம் என்பது எல்லாக் காலங்களிலும் நமக்கு இருக்க வேண்டும்.

அது ஏனோ நம் இனத்தவரிடம் இல்லை. ஒரு சில குடும்பப் பெண்கள் செய்கின்ற அட்டகாசங்கள் நமக்குக் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்துவிடும். குமரிகளும் அப்படித்தான்!  தாய் வழி தானே பிள்ளைகளும்!

தினசரி அவர்கள் செய்கின்ற - சமையலில் ஏற்படுகின்ற வீணடிப்புக்களைச் சொல்லி மாளாது! தங்களது வீடுகளின் முன்னால் உள்ள அள்ளூறுகளில் அவர்கள் அப்படியே  சோற்றைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் பாருங்கள்! நமக்குக் கண்ணீரை வர வழைத்து விடும்!

இப்போது உள்ள நமது குடும்பப் பெண்களைக் குற்றம் சொல்லும் போது இன்னொருவரையும் குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. ஆமாம்! அவர்கள் படித்தது எல்லாம் அவர்களது தாயாரிடமிருந்து தானே! தாயார் எட்டு அடி
பாய்ந்தால் மகள் பதினாறு அடி பாய்வது இயல்பு தானே!

இப்போது உள்ள இளம் தாய்மார்களுக்குப் படிக்கின்ற பழக்கம் என்பதாக ஒன்றுமில்லை. உலகில் மட்டும் அல்ல நமது ,மலேசிய நாட்டில் கூட எத்தனையோ குடும்பங்கள் உணவு இன்றி தவிக்கின்றனர் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். படிக்காத பெண்கள் தான் இப்படி என்றால் படித்த பெண்களும் அதே தவற்றைச் செய்யத்தான் செய்கின்றனர்.  காரணம் இவர்களுக்கும் பொது அறிவு என்பதே இல்லை. படிக்கின்ற பழக்கமும்   இல்லை, என்ன செய்வது! தொலைக்காட்சி தொடர்கள் மூலம் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவும் முடிவதில்லை!

ஒரு பானைச் சோற்றை அப்படியே அள்ளூறுகளில் கொட்டுவதை விட அந்தச் சோற்றை சாப்பிடுவதற்கு எத்தனையோ உயிர்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பது கூடவா தெரியாது?  ஒரு பக்கம் நாய்கள், பூனைகள், கோழிகள், காக்கைகள், பறவைகள் - இவைகளுக்குப் போட்டாவது அவைகளின்  வயிற்றை நிரப்பலாமே!

இந்தக்  கொரோனா காலத்தில் எல்லா உயிர்களுமே உணவு இல்லாமல் தடுமாறுகின்ற நேரத்தில் உணவுகளை வீணடிக்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

சாப்பாடு இல்லாமல் நாய்கள் கீழே விழுந்து மடிகின்றன. ஆட்டுக்கு உணவு இல்லாமல் தனது சாப்பாட்டிலேயே பங்கு போட்டுக் கொடுக்கிறார் ஒரு நண்பர்.

இந்த நேரத்தில் அரசாங்கத்தைக் கை கூப்பி வணங்க வேண்டும். திருமணங்களைத் தடை செய்திருப்பது மிக மிக நல்ல செயல். திருமண விருந்துகளில் ஏகப்பட்ட வீணடிப்புக்கள்!  பார்த்தாலே வயிறு எரியும்.

வீட்டில் சமைக்கும் போது மிகவும் பொறுப்பாக குடும்பப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

சிக்கனம் என்பது ஏதோ ஒன்றில் மட்டும் அல்ல. அனைத்திலும் தேவை.  சிக்கனம் தெரியாவிட்டால் அது சீரழிவுக்கு இட்டுச் செல்லும்!


இது கொரோனா காலம், மறந்து விடாதீர்கள்!

பொதுவாக தமிழரிடையே சிக்கனம் என்பது தேவையற்ற ஒன்று என்பதாகவே இன்னும் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.

இந்த சிக்கலான நேரத்தில் கூட இன்னும் நமது இளைஞர்கள், நடுத்தர வயதினர் பலர் பெரிய வரிசைப் போட்டுக் கொண்டு மது அருந்துவதை நம்மால் பார்க்க முடிகிறது.  அதாவது இவர்களுக்கு இன்னும் சாப்பாடு கிடைக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது!

சிக்கனம் இல்லாததால் இன்று பல குடும்பங்கள் உண்ண உணவில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

இன்று குடித்து விட்டு ஆடிப்பாடி மகிழும் இவர்கள் நாளை சாப்பாடு இல்லாமல் திண்டாடக் கூடிய நிலை  வரும். ஆமாம் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். ஏற்ற இறக்கங்கள் இல்லாமலா போகும்?

சிக்கனம் இல்லாத சமுதாயம் என்றால் அது நாமாகத்தான் இருக்க முடியும்.

இன்று இந்த தொற்று நோய் காலத்தில் நிறைய பாடங்கள் நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மலாய்க்காரர்கள் பெரும்பாலும் அரசாங்க ஊழியர்கள் என்கிற முறையில் அவர்களுக்கு அவ்வளவாக பிரச்சனைகள் எழவில்லை. சீனர்கள் பெரும்பாலும் வர்த்தகத் தொடர்பு உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கும் எந்த சிக்கல்களும் எழவில்லை.

ஆனால் தமிழர்கள் நிலை வேறு. நாம் எங்காவது ஓரிடத்தில் வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்?  நேற்று வந்த பாக்கிஸ்தானியரிடமும்,  வங்காளதேசிகளிடமும் கை கட்டி வேலை செய்து கொண்டிருக்கிறோம்.  உண்மையைச் சொன்னால் நேற்று வந்தவன் நம்மை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான்! இது ஒன்றே போதும். பொருளாதாரத்தில் வலிமை இல்லாத சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் ஏறி மிதிக்கலாம்! வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தான்!

கொஞ்சம் கூட மாற்ற முடியாத ஒரு தமிழனைத் தெரியும்.  வேலைக்குப் போவான், குடிப்பான் - அது தான் அவனது தினசரி வேலை. குடும்பம் உடைந்து போனது. தாய் கதையை முடித்துக் கொண்டாள்.  பிள்ளைகளுக்குக் கல்வி இல்லை. இப்போது படுத்த படுக்கை ஆனான். ஒரு தொண்டு நிறுவனம் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் சாப்பாடு போடுகிறது!

இன்று கும்மாளம் போட்டுக் குடிப்பவன் நாளை வியாதியால் படுத்த படுக்கையாகி விடுவான்.  அப்போது அவனுக்குத் தொண்டு நிறுவனங்கள் தான் உதவிக்கு வர வேண்டும்.

இந்த அளவுக்கு சூடு சொரணை இல்லாத சமுதாயத்தை நாம் கொண்டிருக்கிறோம். எல்லாமே அவனுக்குத் தெரியும். நீதி நியாயம் பேசுவான். ஆனால் தனது வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ள மட்டும் அவனுக்குத் தெரியாது!

இப்போது கோரோனா கோலோச்சும் காலம்.  இத்தனை ஆண்டுகள் சிக்கனத்தைப் பற்றி நாம்  கருத்தில் கொள்ளவில்லை என்றால் இப்போது தான் தக்க தருணம். இனி மேலாவது சிக்கனத்தைப் பற்றி யோசியுங்கள்.

பொருளாதார பலம் இருந்தால் யாருக்கும் தலை குனிய வேண்டியதில்லை.  பணம் உங்களைத் தலை நிமிரச் செய்யும்!

இந்தக் கொரோனா காலத்தில் நமது வாழ்க்கையில் சிக்கனத்திக் கொண்டு வருவோம்!

Monday, 1 June 2020

நேரடித் தொழில் என்றால் என்ன?

வேலை செய்து பிழைக்கும் நமது சமூகத்தினர் இப்போது - இந்த கொரோனா தோற்று நோய் காலத்தில் - மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பது நமக்குப்  புரிகிறது.

ஒரு சிலர் தப்பித்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் அந்த யோகம் இல்லை. பலர் தங்களது வேலையையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் நிலை?

ஆனாலும் எதுவும் கெட்டுப் போய் விடவில்லை.  ஒரு கதவு அடைப்பட்டால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைப்பார் என்பதை நம்புங்கள்.

இந்த நேரத்தில் நேரடித் தொழில்கள் நமக்குக் கை கொடுக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

நேரடித் தொழில்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. நமக்கு அதிகம் பரிச்சயமனது காப்புறுதி தொழில் மட்டும் தான்!  அதற்குக் காரணம் காப்புறுதி முகவர்களைத் தான் நாம் அடிக்கடி எதிர் நோக்குகின்றோம். அதனாலேயே அவர்கள் நமது கவனத்திற்கு உடனடியாக வந்து விடுகிறார்கள்! 

ஆனால் உண்மை நிலை வேறு. எனது சீன நண்பரைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பெரிய வியாபாரி.  துணி வியாபாரம் அத்தோடு பிளாஸ்டிக் பொருள்களும் விற்று வந்தார். ஆனால் அது ஒரு தாமான் என்பதால் எதிர் பார்த்தபடி வியாபாரம் பெரிய அளவில் இல்லை. அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அந்தக் கடையை வேறு ஒருவருக்கு விற்பதில் முனைப்புக் காட்டினார். விற்கும் வரையில் தாக்குப் பிடிக்க வேண்டுமே!  தொழிலை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு  நேரடித் தொழிலில் ஈடுபட்டார்.

மருந்துகள் விற்கும் ஒரு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.  மூன்று ஆண்டுகள் கடும் உழைப்பு.  பிள்ளைகளின் கல்வி, குடும்பச் செலவுகள் அனைத்தையும் அந்த நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது. அதற்குள் அவரது கடையை வாங்க ஆள் கிடைத்ததால் கடையை விற்றுவிட்டு தனது தொழிலை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டார்.  ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவரது தொழிலை அவர் மூடிவிட்டு ஓடிவிடவில்லை. அவரது தொழில் தொடர்ந்து நடைபெறுகிறது. அது தான் சீனர்களின் பலம்!  அவருக்குத் தேவை எல்லாம் ஓரு தற்காலிகத் தீர்வு. அது ஒரு நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது.

நேரடித் தொழில் என்றால் வெறும் காப்புறுதி மட்டும் அல்ல,  மருந்துகள் விற்பது,  துணிமணிகள் விற்பது, வீட்டுப் பொருள்கள் விற்பது இன்னும் பல.  கார்கள் விற்பது, பழைய கார்களை வாங்கி அவைகளை புதுப்பித்து விற்பது சந்தையில் உள்ள அனைத்துக்கும் விற்பனையாளர்கள் தேவை. விற்பனையாளர்கள் இல்லாமல் எதுவும் நகராது. இவைகள் எல்லாமே நேரடித் தொழில்கள் தான்.

இந்த நேரடித் தொழில்களில் நாம் இறங்கினால் தான் அதனைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நமது பொருளாதார சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள  இது தான் வழி. சீனர்கள் பலர் இந்த நேரடித் தொழில்களில் ஈடுபட்டு நல்ல நிலையில் இருக்கின்றனர். தொழில் என்று வந்த பிறகு அவர்கள் எதற்கும் தயக்கம் காட்டுவதில்லை. வெட்கப் படுவதில்லை!  ஆனால் நம்மிடம் வேகுவாக தயக்கம் உண்டு.

நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ சில சமயங்களில் நமது குடும்பங்களின் நலனுக்காக நாம் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்.

அது நேரடித் தொழிலாகவே இருக்கட்டுமே! என்ன கெட்டுப் போய் விட்டது!