பொதுவாக தமிழரிடையே சிக்கனம் என்பது தேவையற்ற ஒன்று என்பதாகவே இன்னும் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சிக்கலான நேரத்தில் கூட இன்னும் நமது இளைஞர்கள், நடுத்தர வயதினர் பலர் பெரிய வரிசைப் போட்டுக் கொண்டு மது அருந்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது இவர்களுக்கு இன்னும் சாப்பாடு கிடைக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது!
சிக்கனம் இல்லாததால் இன்று பல குடும்பங்கள் உண்ண உணவில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
இன்று குடித்து விட்டு ஆடிப்பாடி மகிழும் இவர்கள் நாளை சாப்பாடு இல்லாமல் திண்டாடக் கூடிய நிலை வரும். ஆமாம் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். ஏற்ற இறக்கங்கள் இல்லாமலா போகும்?
சிக்கனம் இல்லாத சமுதாயம் என்றால் அது நாமாகத்தான் இருக்க முடியும்.
இன்று இந்த தொற்று நோய் காலத்தில் நிறைய பாடங்கள் நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மலாய்க்காரர்கள் பெரும்பாலும் அரசாங்க ஊழியர்கள் என்கிற முறையில் அவர்களுக்கு அவ்வளவாக பிரச்சனைகள் எழவில்லை. சீனர்கள் பெரும்பாலும் வர்த்தகத் தொடர்பு உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கும் எந்த சிக்கல்களும் எழவில்லை.
ஆனால் தமிழர்கள் நிலை வேறு. நாம் எங்காவது ஓரிடத்தில் வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? நேற்று வந்த பாக்கிஸ்தானியரிடமும், வங்காளதேசிகளிடமும் கை கட்டி வேலை செய்து கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொன்னால் நேற்று வந்தவன் நம்மை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான்! இது ஒன்றே போதும். பொருளாதாரத்தில் வலிமை இல்லாத சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் ஏறி மிதிக்கலாம்! வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தான்!
கொஞ்சம் கூட மாற்ற முடியாத ஒரு தமிழனைத் தெரியும். வேலைக்குப் போவான், குடிப்பான் - அது தான் அவனது தினசரி வேலை. குடும்பம் உடைந்து போனது. தாய் கதையை முடித்துக் கொண்டாள். பிள்ளைகளுக்குக் கல்வி இல்லை. இப்போது படுத்த படுக்கை ஆனான். ஒரு தொண்டு நிறுவனம் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் சாப்பாடு போடுகிறது!
இன்று கும்மாளம் போட்டுக் குடிப்பவன் நாளை வியாதியால் படுத்த படுக்கையாகி விடுவான். அப்போது அவனுக்குத் தொண்டு நிறுவனங்கள் தான் உதவிக்கு வர வேண்டும்.
இந்த அளவுக்கு சூடு சொரணை இல்லாத சமுதாயத்தை நாம் கொண்டிருக்கிறோம். எல்லாமே அவனுக்குத் தெரியும். நீதி நியாயம் பேசுவான். ஆனால் தனது வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ள மட்டும் அவனுக்குத் தெரியாது!
இப்போது கோரோனா கோலோச்சும் காலம். இத்தனை ஆண்டுகள் சிக்கனத்தைப் பற்றி நாம் கருத்தில் கொள்ளவில்லை என்றால் இப்போது தான் தக்க தருணம். இனி மேலாவது சிக்கனத்தைப் பற்றி யோசியுங்கள்.
பொருளாதார பலம் இருந்தால் யாருக்கும் தலை குனிய வேண்டியதில்லை. பணம் உங்களைத் தலை நிமிரச் செய்யும்!
இந்தக் கொரோனா காலத்தில் நமது வாழ்க்கையில் சிக்கனத்திக் கொண்டு வருவோம்!
No comments:
Post a Comment