Monday 1 June 2020

நேரடித் தொழில் என்றால் என்ன?

வேலை செய்து பிழைக்கும் நமது சமூகத்தினர் இப்போது - இந்த கொரோனா தோற்று நோய் காலத்தில் - மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பது நமக்குப்  புரிகிறது.

ஒரு சிலர் தப்பித்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் அந்த யோகம் இல்லை. பலர் தங்களது வேலையையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் நிலை?

ஆனாலும் எதுவும் கெட்டுப் போய் விடவில்லை.  ஒரு கதவு அடைப்பட்டால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைப்பார் என்பதை நம்புங்கள்.

இந்த நேரத்தில் நேரடித் தொழில்கள் நமக்குக் கை கொடுக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

நேரடித் தொழில்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. நமக்கு அதிகம் பரிச்சயமனது காப்புறுதி தொழில் மட்டும் தான்!  அதற்குக் காரணம் காப்புறுதி முகவர்களைத் தான் நாம் அடிக்கடி எதிர் நோக்குகின்றோம். அதனாலேயே அவர்கள் நமது கவனத்திற்கு உடனடியாக வந்து விடுகிறார்கள்! 

ஆனால் உண்மை நிலை வேறு. எனது சீன நண்பரைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பெரிய வியாபாரி.  துணி வியாபாரம் அத்தோடு பிளாஸ்டிக் பொருள்களும் விற்று வந்தார். ஆனால் அது ஒரு தாமான் என்பதால் எதிர் பார்த்தபடி வியாபாரம் பெரிய அளவில் இல்லை. அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அந்தக் கடையை வேறு ஒருவருக்கு விற்பதில் முனைப்புக் காட்டினார். விற்கும் வரையில் தாக்குப் பிடிக்க வேண்டுமே!  தொழிலை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு  நேரடித் தொழிலில் ஈடுபட்டார்.

மருந்துகள் விற்கும் ஒரு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.  மூன்று ஆண்டுகள் கடும் உழைப்பு.  பிள்ளைகளின் கல்வி, குடும்பச் செலவுகள் அனைத்தையும் அந்த நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது. அதற்குள் அவரது கடையை வாங்க ஆள் கிடைத்ததால் கடையை விற்றுவிட்டு தனது தொழிலை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டார்.  ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவரது தொழிலை அவர் மூடிவிட்டு ஓடிவிடவில்லை. அவரது தொழில் தொடர்ந்து நடைபெறுகிறது. அது தான் சீனர்களின் பலம்!  அவருக்குத் தேவை எல்லாம் ஓரு தற்காலிகத் தீர்வு. அது ஒரு நேரடித் தொழிலின் மூலம் அவருக்குக் கிடைத்தது.

நேரடித் தொழில் என்றால் வெறும் காப்புறுதி மட்டும் அல்ல,  மருந்துகள் விற்பது,  துணிமணிகள் விற்பது, வீட்டுப் பொருள்கள் விற்பது இன்னும் பல.  கார்கள் விற்பது, பழைய கார்களை வாங்கி அவைகளை புதுப்பித்து விற்பது சந்தையில் உள்ள அனைத்துக்கும் விற்பனையாளர்கள் தேவை. விற்பனையாளர்கள் இல்லாமல் எதுவும் நகராது. இவைகள் எல்லாமே நேரடித் தொழில்கள் தான்.

இந்த நேரடித் தொழில்களில் நாம் இறங்கினால் தான் அதனைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நமது பொருளாதார சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள  இது தான் வழி. சீனர்கள் பலர் இந்த நேரடித் தொழில்களில் ஈடுபட்டு நல்ல நிலையில் இருக்கின்றனர். தொழில் என்று வந்த பிறகு அவர்கள் எதற்கும் தயக்கம் காட்டுவதில்லை. வெட்கப் படுவதில்லை!  ஆனால் நம்மிடம் வேகுவாக தயக்கம் உண்டு.

நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ சில சமயங்களில் நமது குடும்பங்களின் நலனுக்காக நாம் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்.

அது நேரடித் தொழிலாகவே இருக்கட்டுமே! என்ன கெட்டுப் போய் விட்டது!


No comments:

Post a Comment