Tuesday 2 June 2020

உணவில் சிக்கனம் தேவை!

சிக்கனம் என்பது எல்லாக் காலங்களிலும் நமக்கு இருக்க வேண்டும்.

அது ஏனோ நம் இனத்தவரிடம் இல்லை. ஒரு சில குடும்பப் பெண்கள் செய்கின்ற அட்டகாசங்கள் நமக்குக் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்துவிடும். குமரிகளும் அப்படித்தான்!  தாய் வழி தானே பிள்ளைகளும்!

தினசரி அவர்கள் செய்கின்ற - சமையலில் ஏற்படுகின்ற வீணடிப்புக்களைச் சொல்லி மாளாது! தங்களது வீடுகளின் முன்னால் உள்ள அள்ளூறுகளில் அவர்கள் அப்படியே  சோற்றைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் பாருங்கள்! நமக்குக் கண்ணீரை வர வழைத்து விடும்!

இப்போது உள்ள நமது குடும்பப் பெண்களைக் குற்றம் சொல்லும் போது இன்னொருவரையும் குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. ஆமாம்! அவர்கள் படித்தது எல்லாம் அவர்களது தாயாரிடமிருந்து தானே! தாயார் எட்டு அடி
பாய்ந்தால் மகள் பதினாறு அடி பாய்வது இயல்பு தானே!

இப்போது உள்ள இளம் தாய்மார்களுக்குப் படிக்கின்ற பழக்கம் என்பதாக ஒன்றுமில்லை. உலகில் மட்டும் அல்ல நமது ,மலேசிய நாட்டில் கூட எத்தனையோ குடும்பங்கள் உணவு இன்றி தவிக்கின்றனர் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். படிக்காத பெண்கள் தான் இப்படி என்றால் படித்த பெண்களும் அதே தவற்றைச் செய்யத்தான் செய்கின்றனர்.  காரணம் இவர்களுக்கும் பொது அறிவு என்பதே இல்லை. படிக்கின்ற பழக்கமும்   இல்லை, என்ன செய்வது! தொலைக்காட்சி தொடர்கள் மூலம் இவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவும் முடிவதில்லை!

ஒரு பானைச் சோற்றை அப்படியே அள்ளூறுகளில் கொட்டுவதை விட அந்தச் சோற்றை சாப்பிடுவதற்கு எத்தனையோ உயிர்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பது கூடவா தெரியாது?  ஒரு பக்கம் நாய்கள், பூனைகள், கோழிகள், காக்கைகள், பறவைகள் - இவைகளுக்குப் போட்டாவது அவைகளின்  வயிற்றை நிரப்பலாமே!

இந்தக்  கொரோனா காலத்தில் எல்லா உயிர்களுமே உணவு இல்லாமல் தடுமாறுகின்ற நேரத்தில் உணவுகளை வீணடிக்க வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

சாப்பாடு இல்லாமல் நாய்கள் கீழே விழுந்து மடிகின்றன. ஆட்டுக்கு உணவு இல்லாமல் தனது சாப்பாட்டிலேயே பங்கு போட்டுக் கொடுக்கிறார் ஒரு நண்பர்.

இந்த நேரத்தில் அரசாங்கத்தைக் கை கூப்பி வணங்க வேண்டும். திருமணங்களைத் தடை செய்திருப்பது மிக மிக நல்ல செயல். திருமண விருந்துகளில் ஏகப்பட்ட வீணடிப்புக்கள்!  பார்த்தாலே வயிறு எரியும்.

வீட்டில் சமைக்கும் போது மிகவும் பொறுப்பாக குடும்பப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

சிக்கனம் என்பது ஏதோ ஒன்றில் மட்டும் அல்ல. அனைத்திலும் தேவை.  சிக்கனம் தெரியாவிட்டால் அது சீரழிவுக்கு இட்டுச் செல்லும்!


No comments:

Post a Comment