Wednesday, 2 December 2020

கேட்க நாதியில்லை!

 ஆமாம், கேட்க நாதியில்லை என்று  சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.

கெடா மாநிலத்தில் அராஜகங்கள் தொடர்கின்றன. மீண்டும் ஓர் இந்து கோவில் தரைமட்டமாகப்பட்டிருக்கின்றது.

இந்து கோவில்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள்  பாக்கிஸ்தான் நாட்டிலே  நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நாடு எந்த ஒரு காலத்திலும் வளர்ச்சி பெற்ற நாடு என்று இதுவரை நாம் சொல்லக் கேட்டதில்லை! அது ஒரு சாபக்கேடு.

கோவில்களை உடைப்பது என்பது அந்தந்த நாட்டுக்கு வருகின்ற சாபக்கேடு. கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் என்றாலே புனிதம் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை.

கோவில்களை உடைப்பது எளிது. அதிகாரத்தில் இருப்பவர்கள்  அதனை எளிதாகச் செய்ய முடியும்.  

நான் ஒன்று கேட்கிறேன். உங்களால் ஊழலை உடைக்க முடியுமா?   ஊழலை ஒழிப்பதற்கு எந்த செலவும் இல்லை.  நகராண்மை கழகத்தினர் தேவை இல்லை. இருட்டு நேரத்தில் சென்று ஒளிந்து ஒளிந்து உடைக்க வேண்டியதில்லை. காவல்துறையின் சேவை தேவை இல்லை.

ஆனால் ஒரு கோவிலை உடைக்க 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். காவல்படையினர் தேவைப்படுகின்றனர். அதற்காக செலவு செய்யப்பட்ட பணம் கோடி கோடி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு சில இலட்சங்களாக இருக்க வேண்டும்.  அதிலும் ஒரு சில பணியாளர்கள் பயத்தோடு தான்  பக்தியோடு அல்ல - அந்த வேலையைச் செய்ய பணிக்கப்பட்டிருப்பர். 

ஆனால் ஊழல் அப்படி அல்ல. மிக மிக எளிது. எத்தனை பேர், எத்தனை அரசியல்வாதிகள்  "நான் கை சுத்தமானவன்"  என்று தலை நிமிர்ந்து   சொல்ல முடியும்?  இதற்குப் பணம் தேவை இல்லை.யாருக்கும் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை!  தேவையெல்லாம் ஒன்று தான். ஒழுக்கம். ஆம், அது மட்டும் தான். 

இப்போது என்ன நடக்கிறது என்பதை நாம்  தெரிந்து கொண்டோம். அரசியல்வாதிகளை நாம் புரிந்து கொண்டோம்.

எல்லாம் தெரிந்தும் நாம் அதே அராஜகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கிறோம்.

இப்போது உடைபடும் கோவில்களுக்காக யார் பேசுகிறார்கள்? மத்தியிலிருந்து எந்த சத்தத்தையும் காணோம். அவர்கள் சொன்னால் எடுபடாதா! மத்தியில் உள்ளவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாதா?

கேட்க நாதியில்லை! வேறு என்ன சொல்ல! கேட்க நாதியுள்ளவர்களையாவது தேர்ந்தெடுங்கள்! அதைத் தான் சொல்ல முடியும்!

`

Tuesday, 1 December 2020

அஸ்மின் அலி என்ன செய்கிறார்?

 இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்குக் காரணகர்த்தா என்றால் அது அஸ்மின் அலி தான்!

மற்றைய அரசியல்வாதிகளைப் போல அவ்ருக்கும் "ஏன், நான் பிரதமராகக் கூடாது?" என்கிற ஆசை தீடீரென அவருக்கு ஏற்பட்டிருக்கிறது!! அப்படி ஒரு ஆசை அவருக்கு இருக்கிறது என்பது அதற்கு முன்னர் யாருக்கும் தெரியவில்லை.

அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் உடன் கூடி இருக்க வேண்டிய சூழலலை அவர் ஏற்படுத்திக் கொண்டார். டாக்டர் மகாதிருக்கு,  அவருக்கு அடுத்து,   பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதை அவர் விரும்பவில்லை என்று சொல்லப்பட்டாலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கொள்கைக்கு ஏற்ப அன்வாரை அவர் பெயரளவில் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் இங்கு தான் சிக்கல் ஏற்பட்டது.  அஸ்மின் அலி, மகாதிர்-அன்வார்- ரிடையே ஏற்கனவே இருந்த பகமையை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர்களிடையே இருந்த விரிசலை ஊதி ஊதிப்  பெரிதாக்கி அவர்களின் பகமையை வளர்த்து விட்டார். அவர்களின் பகமையை வளர்த்து, தனது பிரதமர் ஆசையை டாக்டர் மகாதிரின் மூலமே வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்!

ஆனால் அவரது திட்டம் நிறைவேறவில்லை! இனி மேலும் நிறை வேற வாய்ப்பில்லை! இடையே முகைதீன் யாசின் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பி விட்டார்!  அவருக்கும் பிரதமர் ஆசை இருந்திருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை! குழம்பிய குட்டையில் அவர் பிரதமராகிவிட்டார்!

பிரதமர் பதவிக்கு எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அன்வார் இப்ராகிம் வழக்கம் போல பின்னுக்குத் தள்ளப்பட்டார்! அன்வாருக்குத்  தற்காலிக பிரதமர் என்பதில் ஆசை இல்லை. நிரந்தர பிரதமர் என்பதில் தான் அவர் இலட்சியமாகக் கொண்டுள்ளார்.

ஆமாம், அஸ்மின் அலியின் இன்றைய நிலை என்ன?  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய அமைச்சரவையில் அவர் அனைத்துலக தொழில்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இனி பிரதமராக வரும் அளவுக்கு அவரால் உயர முடியுமா என்று கேள்வி எழுந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் இப்போது மற்ற மலாய் கட்சிகள் அவரைப் புரிந்து கொண்டு விட்டனர்!  தங்களின் "பிரதமர்" ஆசைக்கு வேட்டு வைப்பவர் என்றே அவரைப் பற்றியான எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது! அதனால் அவர் பெரும்பாலும் வருங்காலங்களில் ஒதுக்கப்படுவார் என்று நாம் நம்பலாம்.

ஓர் ஆட்சி திறம்பட நடந்து கொண்டிருக்கும் போது அதனை ஒழித்துக்கட்டி ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியவர் அஸ்மின் அலி. அது ஒரு துரோகம் என்று அவர் அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பது உண்மை.

அஸ்மின் அலி செய்ய வேண்டியதை செய்து விட்டார். இனி செய்ய ஒன்றுமில்லை!

அடுத்த தேர்தல் தான் எப்போது?

 அம்னோ கட்சியினர் கேட்டுக்  கொண்டதற்கு இணங்க, இன்றைய ஆட்சியில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தையும் பிரதமர் முகைதீன் யாசின் நிறைவேற்றி விட்டார் என நமபலாம்.

அம்னோவினர் பல பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.  துணைப்பிரதமர் பதவி வெகு சீக்கிரத்தில் வெட்ட வெளிச்சத்திற்கு வரும். அம்னோவின் அந்த மாபெரும், ஊழல் அற்ற, மனிதர் யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.   அடுத்த நிதி ஆண்டில் அரசியல் நியமனங்களுக்காக -  இவர்களுக்காகவே -  கூடுதலான  நிதிகளையும் பிரதமர் ஒதுக்கிவிட்டார்.

ஆனாலும் இவர்கள் இன்னும் கேள்விகள் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்! எப்போது தேர்தல் வரும் என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் இவர்களின் கேள்விகள் மனதிலிருந்து வருகின்றனவா அல்லது உதட்டிலிருந்து வருகின்றனவா என்று பார்த்தால் இப்போது அவர்கள் பேசுவது மனதிலிருந்து வரவில்லை என்றே  சொல்லலாம்.

காரணம் உண்டு. இப்போது அவர்கள் கேட்டவை கிடைத்துவிட்டன. இன்றைய அரசாங்கம் ஏறக்குறைய அம்னோ கட்சியின் அரசாங்கம் என்று தாராளாமாகச் சொல்லலாம். அதனால் இப்போது அடுத்த தேர்தல் என்பது அவர்களிடம் கொஞ்சம் பலவீனமாகி  வருகின்றது. அடுத்த  தேர்தல் காலம் வரும் வரை அவர்கள் காத்திருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது.

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல தேர்தல்! தேர்தல்! என்று அடிக்கடி சொல்லி வருகின்றனர்! இது சும்மா வாய்ச் சவடால் என்று சொல்லலாம்!

இப்போது மீண்டும் ஒரு திருப்பம்.  கோவிட்-19 தொற்று சீரடைந்து விட்டால் தேர்தல் வைக்கலாம் என்று இப்போது பேச ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது நமக்கும் ஒரு பயம் வந்து விட்டது. அடுத்த தேர்தல் வரை, அதாவது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, கோவிட்-19 தொடரும் என்று நினைக்கத் தோன்றுகிறது!

இது தான் இப்போதைக்கு நமக்குக் கவலை தரும் விஷயம். கோவிட் 19 - ம் தொடர்ந்து நம்மிடையே இருக்கும்படி அரசாங்கத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்!

பிரதமர் முகைதீன் முடிந்தவரை தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டார். உடனடியாக அரசாங்கம் கவிழும் அபாயமில்லை. அதனால் தேவையெல்லாம் கோவிட்-19 வைத்தே தனது ஆட்சியை நீட்டித்துக் கொள்வார் என்பது உறுதி.

திடீர்த் தேர்தல்  எதுவும் நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆக, உலகிலேயே கோவிட்-19 தொற்று ஒழிக்கப்பட்டாலும் நமது நாட்டில் அந்த தொற்று இன்னும் மூன்று ஆண்டு காலம் நீடிக்கும் என்பதே சரியாக இருக்கும்!

தேர்தல் இப்போது இல்லை!