Wednesday 2 December 2020

கேட்க நாதியில்லை!

 ஆமாம், கேட்க நாதியில்லை என்று  சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.

கெடா மாநிலத்தில் அராஜகங்கள் தொடர்கின்றன. மீண்டும் ஓர் இந்து கோவில் தரைமட்டமாகப்பட்டிருக்கின்றது.

இந்து கோவில்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள்  பாக்கிஸ்தான் நாட்டிலே  நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நாடு எந்த ஒரு காலத்திலும் வளர்ச்சி பெற்ற நாடு என்று இதுவரை நாம் சொல்லக் கேட்டதில்லை! அது ஒரு சாபக்கேடு.

கோவில்களை உடைப்பது என்பது அந்தந்த நாட்டுக்கு வருகின்ற சாபக்கேடு. கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் என்றாலே புனிதம் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை.

கோவில்களை உடைப்பது எளிது. அதிகாரத்தில் இருப்பவர்கள்  அதனை எளிதாகச் செய்ய முடியும்.  

நான் ஒன்று கேட்கிறேன். உங்களால் ஊழலை உடைக்க முடியுமா?   ஊழலை ஒழிப்பதற்கு எந்த செலவும் இல்லை.  நகராண்மை கழகத்தினர் தேவை இல்லை. இருட்டு நேரத்தில் சென்று ஒளிந்து ஒளிந்து உடைக்க வேண்டியதில்லை. காவல்துறையின் சேவை தேவை இல்லை.

ஆனால் ஒரு கோவிலை உடைக்க 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். காவல்படையினர் தேவைப்படுகின்றனர். அதற்காக செலவு செய்யப்பட்ட பணம் கோடி கோடி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு சில இலட்சங்களாக இருக்க வேண்டும்.  அதிலும் ஒரு சில பணியாளர்கள் பயத்தோடு தான்  பக்தியோடு அல்ல - அந்த வேலையைச் செய்ய பணிக்கப்பட்டிருப்பர். 

ஆனால் ஊழல் அப்படி அல்ல. மிக மிக எளிது. எத்தனை பேர், எத்தனை அரசியல்வாதிகள்  "நான் கை சுத்தமானவன்"  என்று தலை நிமிர்ந்து   சொல்ல முடியும்?  இதற்குப் பணம் தேவை இல்லை.யாருக்கும் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை!  தேவையெல்லாம் ஒன்று தான். ஒழுக்கம். ஆம், அது மட்டும் தான். 

இப்போது என்ன நடக்கிறது என்பதை நாம்  தெரிந்து கொண்டோம். அரசியல்வாதிகளை நாம் புரிந்து கொண்டோம்.

எல்லாம் தெரிந்தும் நாம் அதே அராஜகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கிறோம்.

இப்போது உடைபடும் கோவில்களுக்காக யார் பேசுகிறார்கள்? மத்தியிலிருந்து எந்த சத்தத்தையும் காணோம். அவர்கள் சொன்னால் எடுபடாதா! மத்தியில் உள்ளவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாதா?

கேட்க நாதியில்லை! வேறு என்ன சொல்ல! கேட்க நாதியுள்ளவர்களையாவது தேர்ந்தெடுங்கள்! அதைத் தான் சொல்ல முடியும்!

`

No comments:

Post a Comment