Thursday, 7 January 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வன்முறையைத் தூண்டி விட்டிருக்கிறார். அதனால் பலியானோர் நான்கு பேர் என்பதாக செய்திகள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு வன்முறையைப் பற்றி படித்த போது என் மனதில் முதலில் தோன்றியது: ஆகா! அமரிக்காவில் இப்போது இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனரே! அங்குமா இப்படி!  

இருந்தாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அங்கு இருக்கும் இந்தியவர்கள் அனைவரும் படித்தவர்கள். 'தான் உண்டு தன் வேலையுண்டு' என்று இருப்பவர்கள். அதனால் இந்தியர்களின் வன்முறை ஈடுபாடு என்பது அந்த அளவுக்கு இருக்க நியாயமில்லை!

டொனால்டு ட்ரம்ப் ஏன் இப்படி அமெரிக்க அரசியலில் ஒரு மாறுபட்ட மனிதராக இருக்கிறார் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. நான் கூட இவருக்கு இந்தியப் பின்னணி ஏதும் இருக்குமோ என்று நினைத்தது உண்டு.  ஆனால் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி அமரிக்கா போய் வந்தாரே அங்கிருந்து ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது!

எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை!

இவர் அமெரிக்க ஜனாதிபதியாக வரும் முன்னர் நான் இவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  அவர் ஒரு பெரிய, பெரிய தொழிலதிபர். ஆமாம்.  தான் செய்யும் தொழில்களில் வானத்தை எட்ட வேண்டும் என்று நினைப்பவர். மிகவும் அழுத்தமான மனிதர். எதனையும் அவர் விட்டுக் கொடுக்கும் போக்கு இல்லாதவர். கடைசி வரை போராடுபவர். அப்படித்தான் அவர் கடைசி வரை அவர் போராடி வந்திருக்கிறார்! அப்படி ஒரு குணம்! என்ன செய்யலாம்?

தொழிலில் அவரின் போக்கு சரியாக இருந்திருக்கலாம். அதில் அவர் வெற்றியும்  பெற்றிருக்கலாம்.

ஆனால் இது அரசியல். அமெரிக்கா உலகின் காவலன் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்தவர்கள்! யாரும் அவர்களுடைய உதவியைக் கேட்காவிட்டாலும் அவர்களாகவே ஆஜராகி விடுபவர்கள்!

இப்படி ஒரு மனப்போக்கு உள்ள  நாட்டில்  எப்படி, எங்கிருந்து இப்படி ஒரு மனிதர் அதிபராக வந்தார் என்பது தான் நமக்குப் புரியாத புதிர்! பதவியில் இருந்த போதும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை! உலக நாடுகளே அவரைக் கேலி செய்தன!  பத்திரிக்கைகளின் - ஊடகங்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்! ஊடகங்கள் அவரைக் கிழி கிழி என்று கிழித்தெடுத்தன! அவர் எதற்கும் அசராத மனிதர்! எதுவும் அவரைப் பாதிக்கவில்லை!

ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு. அவரும் அவரது தோல்வியை ஒப்புக் கொண்டார்.  ஆனாலும் போகும் போது சும்மா போகக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு கலவரத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டு விடைபெறுகிறார்!

வருங்கால ஜனாதிபதிகளுக்கு இவரது வன்முறை ஒர் எடுத்துக் காட்டாக அமையுமோ, தெரியவில்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

இத்தனை ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?

 தமிழ் நாட்டில் தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை என்று படித்த போது அது ஓர் அதிர்ச்சி செய்தியாகத் தான் இருந்தது!

அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் விடுமுறை இல்லையா என்று கேட்கத் தோன்றியதே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை! இத்தனை ஆண்டுகள் ஏன் விடுமுறை கொடுக்கப்படவில்லை என்பது நமக்கும் புரியவில்லை!

கலைஞர் நீண்ட காலம் தமிழகத்தை ஆட்சி செய்தவர். தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம் என்று நாள் தவறாமல் பேசி வந்தவர். அவர் காலத்தில் கூட தைப்பூச விடுமுறை தேவையற்றதாக அவர் நினைத்திருக்கிறார் என்று அறியும் போது நமக்கு வருத்தத்தை  அளிக்கிறது.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் தாய் வீடு என்றால் அது தமிழகம் தான். அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் தமிழகத்திற்கு வெளியே பல நாடுகளில் முருகப்பெருமானின் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பொது விடுமுறையும் உண்டு.  குறிப்பாக மலேசியாவில் நாடளவில் விடுமுறை இல்லையென்றாலும் இந்தியர்கள் அதிகம் வாழும்  மாநிலங்களில் பொது விடுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இப்படி வெளிநாடுகளிலேயே விடுமுறை என்கிற போது தமிழ் நாட்டில் இப்போது தான் பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருப்பது - பரவாயில்லை! - இப்போதாவது  ஒரு தமிழரான எடப்பாடியின் முலம் ஒரு விடிவு பிறந்திருக்கிறதே அதனை நினைத்து பெருமைப்படுவோம்! 

இத்தனை ஆண்டுகள் தமிழரின் பூமியில் ஆட்சி செய்தவர்கள் எந்த அக்கறையும் எடுக்கவில்லையே என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம் என்றாலும் அதற்கான பதிலையும் அவர்கள் வைத்திருப்பார்கள் என நம்பலாம்!

எடப்பாடியாரே! நன்றி! நன்றி!

ரஜினியின் சரியான முடிவு!


ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னார். அது அவர் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று சொன்னோம். ஆனால் அவர் தனது உடல்  நலனைக் கருதி அரசியலுக்கு வரவில்லை என்று இப்போது சொல்லுகிறார் அதனை வரவேற்கிறோம்.

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது அவரது கருத்து அல்ல.  அவரை வற்புறுத்தி அரசியலுக்கு வர வைத்தவர்கள் அழிவு சக்திகள்.  இப்போதும் கூட, அவர் உடல் நலம் சரியல்ல என்று கூறியும் கூட, அழிவு சக்திகள் "அவர் வந்தே ஆக வேண்டும்!"  என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்! அவரின்  உடல் நலன் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என்கிற மனோபாவம் தான் தெரிகிறது.

இருந்தாலும் தனது உடல் நலன் கருதி அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது தெளிவு. ரஜினி 70 வயது ஆன ஒரு பெரியவர். இனி மேல் அவரால் ஓடி ஆடி வேலை செய்வது என்பது கடினம் என்பது நமக்குப் புரிகிறது. அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல.  அதைத் தாங்கக் கூடிய சக்தி அவருக்கு இருந்தாலும் அவரின் உடல் ஒத்துழைக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  ஆனால் அழிவு சக்திகள் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

ரஜினி சினிமாவில் பல சாதனைகளைச் செய்தவர். அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலக அளவில் உண்டு.  அது அவர் சினிமாவில் செய்த சாதனை.

நான் சினிமா படங்களைத் திரை அரங்குகளில் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தாலும் அது ரஜினி-கமல் நடிக்கின்ற படங்களாகத்தான் இருக்கும். அவர்கள் நடித்த படங்களைத் திரை அரங்குகளில் பார்க்கத்தான் விரும்புகிறேன். நான் ரஜினியின் ரசிகன். அதே போல கமலின் ரசிகன் கூட. 

அதனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் யாருக்கோ கூலிக்கு மாரடிக்கின்றனர் என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளுகிறோம்!

ரஜினி தமிழ் நாட்டில் நல்ல புகழோடும் பொருளோடும் வாழ்ந்து வருபவர். அவர் தமிழரல்ல என்றாலும் அவரை  வாழவைத்துக் கொண்டிருப்பது தமிழரின்  பெருந்தன்மை. அவர் எந்த ஒரு பொதுச் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இனி மேலும் ஈடுபடுத்திக் கொள்ளப் போவதில்லை.

பரவாயில்லை! அவர் தொடர்ந்து தனது சினிமாத் துறையில் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும். 

இப்போது, அவரின் உடல நலன் கருதி, அவர் எடுத்த முடிவை மதிக்கிறோம். பாராட்டுகிறோம்! அவரின் கலைப்பணி தொடரட்டும்!