Thursday 7 January 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வன்முறையைத் தூண்டி விட்டிருக்கிறார். அதனால் பலியானோர் நான்கு பேர் என்பதாக செய்திகள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு வன்முறையைப் பற்றி படித்த போது என் மனதில் முதலில் தோன்றியது: ஆகா! அமரிக்காவில் இப்போது இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனரே! அங்குமா இப்படி!  

இருந்தாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அங்கு இருக்கும் இந்தியவர்கள் அனைவரும் படித்தவர்கள். 'தான் உண்டு தன் வேலையுண்டு' என்று இருப்பவர்கள். அதனால் இந்தியர்களின் வன்முறை ஈடுபாடு என்பது அந்த அளவுக்கு இருக்க நியாயமில்லை!

டொனால்டு ட்ரம்ப் ஏன் இப்படி அமெரிக்க அரசியலில் ஒரு மாறுபட்ட மனிதராக இருக்கிறார் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. நான் கூட இவருக்கு இந்தியப் பின்னணி ஏதும் இருக்குமோ என்று நினைத்தது உண்டு.  ஆனால் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி அமரிக்கா போய் வந்தாரே அங்கிருந்து ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது!

எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை!

இவர் அமெரிக்க ஜனாதிபதியாக வரும் முன்னர் நான் இவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  அவர் ஒரு பெரிய, பெரிய தொழிலதிபர். ஆமாம்.  தான் செய்யும் தொழில்களில் வானத்தை எட்ட வேண்டும் என்று நினைப்பவர். மிகவும் அழுத்தமான மனிதர். எதனையும் அவர் விட்டுக் கொடுக்கும் போக்கு இல்லாதவர். கடைசி வரை போராடுபவர். அப்படித்தான் அவர் கடைசி வரை அவர் போராடி வந்திருக்கிறார்! அப்படி ஒரு குணம்! என்ன செய்யலாம்?

தொழிலில் அவரின் போக்கு சரியாக இருந்திருக்கலாம். அதில் அவர் வெற்றியும்  பெற்றிருக்கலாம்.

ஆனால் இது அரசியல். அமெரிக்கா உலகின் காவலன் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்தவர்கள்! யாரும் அவர்களுடைய உதவியைக் கேட்காவிட்டாலும் அவர்களாகவே ஆஜராகி விடுபவர்கள்!

இப்படி ஒரு மனப்போக்கு உள்ள  நாட்டில்  எப்படி, எங்கிருந்து இப்படி ஒரு மனிதர் அதிபராக வந்தார் என்பது தான் நமக்குப் புரியாத புதிர்! பதவியில் இருந்த போதும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை! உலக நாடுகளே அவரைக் கேலி செய்தன!  பத்திரிக்கைகளின் - ஊடகங்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்! ஊடகங்கள் அவரைக் கிழி கிழி என்று கிழித்தெடுத்தன! அவர் எதற்கும் அசராத மனிதர்! எதுவும் அவரைப் பாதிக்கவில்லை!

ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு. அவரும் அவரது தோல்வியை ஒப்புக் கொண்டார்.  ஆனாலும் போகும் போது சும்மா போகக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு கலவரத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டு விடைபெறுகிறார்!

வருங்கால ஜனாதிபதிகளுக்கு இவரது வன்முறை ஒர் எடுத்துக் காட்டாக அமையுமோ, தெரியவில்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment