Wednesday, 3 November 2021

சம்பளப்பணத்தை இழுத்தடிப்பது யார்?

 

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக  வழங்கப்பட்டு விட்டதாக  ம.இ.கா.வின் தேசியத் தலைவர் அறிவித்திருக்கிறார். காலம் கடந்தாவது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளப்பணம்  கிடைத்திருக்கிறதே என்பதில் நாமும் மகிழ்ச்சியடைகிறோம்.

பத்து மாத காலம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை. ஏன் என்று  புரியவில்லை.  இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்துவிட்டதாக ம.இ.கா. தான் செய்தியைக் கொடுக்கிறது.  இவர்கள் கேட்டுக் கொண்டதனால் தான் மித்ரா அந்தச் சம்பளப்பணத்தைக் கொடுத்திருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது. இவர்கள் கேட்டுக் கொள்ளவில்லையென்றால் அவர்களுக்குச்  சம்பளம் கிடைத்திராது! நாமம் தான்!  நாதன் தாள் போற்றி!

அப்படியென்றால் மித்ராவை கையில் வைத்திருப்பவர்களுக்கு அந்த ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எழவில்லை!  ம.இ.கா. வும் அது பற்றி வாயைத் திறக்கவில்லை. பத்து மாதங்கள் சம்பளப்பணம் கிடைக்கவில்லை என்று தெரிந்தும் ம.இ.கா. வாய் மூடி தான் இருந்தது.

எப்போது ம.இ.கா.வுக்கு ஞானோதயம் வந்தது? எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் மித்ரா மீதான கேள்விக்கணைகளைத் தொடுத்த போது தான் எழுந்து உட்கார்ந்தார்கள்! பத்திரிக்கைகளும் தொடர்ந்து எழுதின. இவ்வளவு அமளிதுமளிகள் நடந்த பிறகு தான் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளப்பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது!

அதாவது ம.இ.கா. கோரிக்கை விடுத்தால் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கிடைக்கும்.  ம.இ.கா. கோரிக்கை விடுக்காவிட்டால் அவர்களுக்குச் சம்பளம் இல்லை! இது தான் மித்ராவின் நிலை!

உண்மையில் மித்ரா இப்போது அல்லது அப்போது யார் கையில்? எப்போதுமே அது ம.இ.கா. கையிலா? இதைவிடக் கேவலம் என்ன வேண்டிக் கிடக்கிறது?

செடிக் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதிருந்தே அந்த நிதியின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள்  எழுந்து கொண்டே இருக்கின்றன! குற்றச்சாட்டுகள் அனைத்தும் ம.இ.கா. வைத்தான் சுட்டுகின்றன! ஆனாலும் இன்னும் அவரகள் தான் செடிக் அல்லது மித்ராவை ஆட்டிப்படைக்கிறார்கள்!

இப்படி ஒரு நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! சரி! அப்படியே ம.இ.கா. கட்டுப்பாட்டில் தான் என்றாலும் கூட அவர்களுக்கு இந்தியரின் மேல் கொஞ்சம் கூட பற்றோ பாசமோ இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. அவர்களின் 'தலைவர்' அப்படி ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாரா! இவர்களும் அப்படியே அதனைப் பின்பற்றுகிறார்களா!  புரியவில்லை!

ஒரு வேண்டுகோள். இந்திய சமூகத்தை மிகவும் சோதிக்கிறீர்கள் நணபர்களே! இந்த சமூகத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஆளும் சமுதாயத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்களா!

"அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!" மறக்கவே மறக்காதீர்கள்!

Tuesday, 2 November 2021

எல்லாமே ஒரு அளவு தான்!


                                              கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்

தமிழ்ப்பட ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத பெயர் புனித் ராஜ்குமார்.  அவர் கன்னட திரைப்பட உலகின் பவர் ஸ்டார் என்கிறார்கள்.  அவர் முன்னாள் கன்னட நடிகர் சுப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மகன். ராஜ்குமார் அந்தக் காலத்தில் ஒரு சில தமிழ்ப்படங்களிலும் நடித்தவர்.

நடிகர் புனித் ராஜ்குமாரை நாம் அதிகம் அறிந்திராவிட்டாலும் அவரின் இறப்பிற்குப் பின்னர்  தான் அவர் நமக்கு அதிகமாக தெரிந்தவராக அறியப்படுகிறார்.

புனித் பெரிய நடிகரா அல்லது சிறிய நடிகரா  என்பதைப்பற்றி நாம் இங்கே பேசப் போவதில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த புண்ணியங்களை நாம் நினைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக அவரது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும். மக்களுக்கான அவர் சேவைகள் மற்றவர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு. மற்றவர்கள் பின்பற்றக்கூடிய நல்லதொரு எடுத்துக்காட்டு. அவர் பெரிய அளவில் செய்தார் நாம் சிறிய அளவிலாவது செய்யலாமே! அது தான் நமக்கு அவரிடமிருந்து கிடைத்த பாடம்.

முதியோர் இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கான உதவி,  ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள்; கடைசியில் இறந்த பிறகு தனது கணகளையும் தானம் செய்திருக்கிறார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். இப்போது நாம் நேராகவே அதனைப் பார்க்கிறோம்.

ஆனாலும் அவர் செய்த பெரும் உதவி என்றால் அது ஏழை மாணவர்களைப் படிக்க வைத்தது தான். சுமார் 1800 ஏழை மாணவர்களைப் படிக்க வைத்திருக்கிறார். மிகவும் பாராட்டப்பட  வேண்டிய விஷயம். ஒரு தனிப்பட்ட மனிதரால் இதனை செய்ய முடியும் என்றால் அது சாதாரண விஷயமல்ல. வசதிப்படைத்த நடிகர்கள் மட்டும் அல்ல இன்னும் பிற துறைகளில் உள்ளவர்களும் பின்பற்றக் கூடிய விஷயம்.

இந்த நேரத்தில் ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். புனித ராஜ்குமார் உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்.  ஐந்து, ஆறு மணி நேரம் கூட விடாமல் பயிற்சி செய்பவர். நல்ல கட்டுடலைக் கொண்டவர். மற்றவர்களும் தன்னைப் போலவே உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். அதன்படி தினசரி பயிற்சிகளில் ஈடுபடுபவர்.

அதுவே அவருக்கு எமனாக அமைந்துவிட்டது. உடற்பயிற்சி வேண்டும். அதற்காக உடலை அதிகமாக  வருத்திக்கொள்ளக் கூடாது என்பதும் உடற்பயிற்சியின் ஓர் அங்கம் தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது உணவுக்கு மட்டும் அல்ல உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.  புனித் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சியே அவருக்கு உலை வைத்துவிட்டது.

இனி அது பற்றிப் பேசுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. நல்லபடியாக வாழ்ந்திருக்கிறார். நல்லது நாலு செய்திருக்கிறார். நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். அவர் செய்த நற்காரியங்களுக்காக அவர் பெயர் நூறு நூறு ஆண்டுகளுக்கு மக்களிடையே வாழும்!

Monday, 1 November 2021

இது தான் சரியான வழி!

மித்ரா பற்றியான செய்திகளைப் படிக்கப்  படிக்க நெஞ்சம் கொதிக்கிறது.  சராசரி மனிதர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால் திருடியவன், கொள்ளையடித்தவன் எல்லாம் நிம்மதியாக கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவன் இன்னும் சமுதாயத்தில் பெரிய மனிதனாகவே தன்னைக் காட்டிக் கொள்கிறான்! அதிலும் சவால் வேறு! 

செடிக் என்று பெயர் வைத்தாலும் திருடுகிறான்! மித்ரா என்று வைத்தாலும் திருடுகிறான்! திருடுவதே எங்கள் குலத்தொழில் என்பது போல நடந்து கொள்கிறான்!

செடிக், மித்ரா அமைப்பே தவறாகிப் போனது. அது அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போனது இன்னும் அதிக ஆபத்தை ஏற்படுத்தி விட்டது! ஒன்றை நாம் தெரிந்து கொண்டோம். பட்டுக்கோட்டையார் சொன்னது போல "திருடனாய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!" என்பது தான் எல்லாக் காலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், மாண்புமிகு கணபதிராவ் நல்லதொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.  மித்ரா நேரடியாக பிரதமர் துறையின் தலைமைச் செயலாளரின் கீழ் அதன் நிர்வாகம் வைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வைத்திருக்கிறார். அதன் நோக்கம் பிரதமர் துறையிடம் அதற்கான நிர்வாகத்திறன்,  நிபுணத்துவம் அனைத்தும் அவர்களிடம் உண்டு என்பதுதான்.

இப்போது மித்ரா நிர்வாகம் என்பது அரசாங்கத்தின் பெயரைச் சொல்லி ம.இ.கா. வின் நிர்வாகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! செடிக் என்கிற பெயரில் இருந்த போதும் ம.இ.கா.வின் நிர்வாகம் தான். மித்ரா என்று மாற்றம் பெற்ற பின்னரும் அது ம.இ.கா. நிர்வாகம் தான்! இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் அவரகள் கைகள் அரித்துக் கொண்டே இருந்தன!  வாய்ப்புக் கிடைத்ததும் லாரி கணக்கில் வாரி விட்டனர்!

மித்ரா என்பது நிச்சயம் நமக்குத் தேவை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முறையாகப் பயன்படுத்தப்பட்டால் அந்த நிதி பெருமளவு இந்தியர்களை உயர்த்தும். இப்போது அந்த பணம் ஏதோ ஒருசிலருக்குக் கிடைக்கிறது. அதை அவர்கள் தொழிலில் போடுகிறார்களா அல்லது  வங்கியில் போட்டு முடக்குகிறார்களா அல்லது வெளிநாடுகளில் சொத்துகள் வாங்குகிறார்களா என்பது தெரியவில்லை!

மித்ரா அல்லது செடிக் இவைகள் நமது முன்னேற்றத்திற்குத் தேவை. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 50 கோடி பணத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அதன் பலன் வளரும் தொழில் முனைவோர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பது தான் நமது குற்றச்சாட்டு.

மாண்புமிகு கணபதி ராவ் சொன்னது சரியான வழிமுறை. இதுவே சரியான வழி.