Tuesday 2 November 2021

எல்லாமே ஒரு அளவு தான்!


                                              கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்

தமிழ்ப்பட ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத பெயர் புனித் ராஜ்குமார்.  அவர் கன்னட திரைப்பட உலகின் பவர் ஸ்டார் என்கிறார்கள்.  அவர் முன்னாள் கன்னட நடிகர் சுப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் மகன். ராஜ்குமார் அந்தக் காலத்தில் ஒரு சில தமிழ்ப்படங்களிலும் நடித்தவர்.

நடிகர் புனித் ராஜ்குமாரை நாம் அதிகம் அறிந்திராவிட்டாலும் அவரின் இறப்பிற்குப் பின்னர்  தான் அவர் நமக்கு அதிகமாக தெரிந்தவராக அறியப்படுகிறார்.

புனித் பெரிய நடிகரா அல்லது சிறிய நடிகரா  என்பதைப்பற்றி நாம் இங்கே பேசப் போவதில்லை. அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த புண்ணியங்களை நாம் நினைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக அவரது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும். மக்களுக்கான அவர் சேவைகள் மற்றவர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு. மற்றவர்கள் பின்பற்றக்கூடிய நல்லதொரு எடுத்துக்காட்டு. அவர் பெரிய அளவில் செய்தார் நாம் சிறிய அளவிலாவது செய்யலாமே! அது தான் நமக்கு அவரிடமிருந்து கிடைத்த பாடம்.

முதியோர் இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கான உதவி,  ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள்; கடைசியில் இறந்த பிறகு தனது கணகளையும் தானம் செய்திருக்கிறார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். இப்போது நாம் நேராகவே அதனைப் பார்க்கிறோம்.

ஆனாலும் அவர் செய்த பெரும் உதவி என்றால் அது ஏழை மாணவர்களைப் படிக்க வைத்தது தான். சுமார் 1800 ஏழை மாணவர்களைப் படிக்க வைத்திருக்கிறார். மிகவும் பாராட்டப்பட  வேண்டிய விஷயம். ஒரு தனிப்பட்ட மனிதரால் இதனை செய்ய முடியும் என்றால் அது சாதாரண விஷயமல்ல. வசதிப்படைத்த நடிகர்கள் மட்டும் அல்ல இன்னும் பிற துறைகளில் உள்ளவர்களும் பின்பற்றக் கூடிய விஷயம்.

இந்த நேரத்தில் ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். புனித ராஜ்குமார் உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்.  ஐந்து, ஆறு மணி நேரம் கூட விடாமல் பயிற்சி செய்பவர். நல்ல கட்டுடலைக் கொண்டவர். மற்றவர்களும் தன்னைப் போலவே உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். அதன்படி தினசரி பயிற்சிகளில் ஈடுபடுபவர்.

அதுவே அவருக்கு எமனாக அமைந்துவிட்டது. உடற்பயிற்சி வேண்டும். அதற்காக உடலை அதிகமாக  வருத்திக்கொள்ளக் கூடாது என்பதும் உடற்பயிற்சியின் ஓர் அங்கம் தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது உணவுக்கு மட்டும் அல்ல உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.  புனித் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சியே அவருக்கு உலை வைத்துவிட்டது.

இனி அது பற்றிப் பேசுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. நல்லபடியாக வாழ்ந்திருக்கிறார். நல்லது நாலு செய்திருக்கிறார். நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். அவர் செய்த நற்காரியங்களுக்காக அவர் பெயர் நூறு நூறு ஆண்டுகளுக்கு மக்களிடையே வாழும்!

No comments:

Post a Comment