பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட்டு விட்டதாக ம.இ.கா.வின் தேசியத் தலைவர் அறிவித்திருக்கிறார். காலம் கடந்தாவது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளப்பணம் கிடைத்திருக்கிறதே என்பதில் நாமும் மகிழ்ச்சியடைகிறோம்.
பத்து மாத காலம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை. ஏன் என்று புரியவில்லை. இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்துவிட்டதாக ம.இ.கா. தான் செய்தியைக் கொடுக்கிறது. இவர்கள் கேட்டுக் கொண்டதனால் தான் மித்ரா அந்தச் சம்பளப்பணத்தைக் கொடுத்திருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது. இவர்கள் கேட்டுக் கொள்ளவில்லையென்றால் அவர்களுக்குச் சம்பளம் கிடைத்திராது! நாமம் தான்! நாதன் தாள் போற்றி!
அப்படியென்றால் மித்ராவை கையில் வைத்திருப்பவர்களுக்கு அந்த ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எழவில்லை! ம.இ.கா. வும் அது பற்றி வாயைத் திறக்கவில்லை. பத்து மாதங்கள் சம்பளப்பணம் கிடைக்கவில்லை என்று தெரிந்தும் ம.இ.கா. வாய் மூடி தான் இருந்தது.
எப்போது ம.இ.கா.வுக்கு ஞானோதயம் வந்தது? எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் மித்ரா மீதான கேள்விக்கணைகளைத் தொடுத்த போது தான் எழுந்து உட்கார்ந்தார்கள்! பத்திரிக்கைகளும் தொடர்ந்து எழுதின. இவ்வளவு அமளிதுமளிகள் நடந்த பிறகு தான் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளப்பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது!
அதாவது ம.இ.கா. கோரிக்கை விடுத்தால் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கிடைக்கும். ம.இ.கா. கோரிக்கை விடுக்காவிட்டால் அவர்களுக்குச் சம்பளம் இல்லை! இது தான் மித்ராவின் நிலை!
உண்மையில் மித்ரா இப்போது அல்லது அப்போது யார் கையில்? எப்போதுமே அது ம.இ.கா. கையிலா? இதைவிடக் கேவலம் என்ன வேண்டிக் கிடக்கிறது?
செடிக் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதிருந்தே அந்த நிதியின் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கின்றன! குற்றச்சாட்டுகள் அனைத்தும் ம.இ.கா. வைத்தான் சுட்டுகின்றன! ஆனாலும் இன்னும் அவரகள் தான் செடிக் அல்லது மித்ராவை ஆட்டிப்படைக்கிறார்கள்!
இப்படி ஒரு நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! சரி! அப்படியே ம.இ.கா. கட்டுப்பாட்டில் தான் என்றாலும் கூட அவர்களுக்கு இந்தியரின் மேல் கொஞ்சம் கூட பற்றோ பாசமோ இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. அவர்களின் 'தலைவர்' அப்படி ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாரா! இவர்களும் அப்படியே அதனைப் பின்பற்றுகிறார்களா! புரியவில்லை!
ஒரு வேண்டுகோள். இந்திய சமூகத்தை மிகவும் சோதிக்கிறீர்கள் நணபர்களே! இந்த சமூகத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஆளும் சமுதாயத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்களா!
"அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!" மறக்கவே மறக்காதீர்கள்!
No comments:
Post a Comment